புத்தளம் நகர சபையின் NFGG உறுப்பினராக ஆசிரியர் சிபாக் சத்தியப்பிரமாணம்
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உடனிணைந்து புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் (PPAF) இணைந்து பெற்றுக் கொண்ட ஒரு பிரதிநிதியை சுழற்சி முறையில் வழங்கும் நோக்குடன் தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு PPAF இன் நகர சபை உறுப்பினராக அடுத்த இரு வருடங்களுக்கு தெரிவாகியுள்ள ஆசிரியர் எச்.என்.எம்.எம். ஷிபாக் சட்டத்தரணி பஸ்லுர் ரஹ்மான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த சத்தியப்பிரமான நிகழ்வுகள் புதன்கிழமை இரவு (19) புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள Ice Talk நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வரவேற்புரையினை PPAF இன் உறுப்பினர் பொறியியலாளர் ரின்ஷாத் நிகழ்த்தினார். புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் (மதனி), நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உயர் பீட உறுப்பினர் அஷ்ஷெய்க் ரிஸ்மி (காஸிமி), நகர சபை புதிய உறுப்பினர் ஆசிரியர் சிபாக், சட்டத்தரணி பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.
புத்தளம் பெரிய பள்ளியின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.பாரிஸ் (மதனி) மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 2018 நகர சபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று தசாப்த காலமாக புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் இழந்து தவித்த பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் 2013ம் ஆண்டு புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் (PPAF) என்ற கொள்கை சார் சிவில் சமூக அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக ஆசிரியர் சிபாக் முன்னின்று செயற்பட்டதோடு தொடர்ந்து வந்த தேர்தல்களில் பல்வேறு வியூகங்களை வகுத்து புத்தளத்திற்கான பாராளுமன்ற உறுப்புரிமை என்ற இலக்கை அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கொள்வதற்காக சிறுபான்மை அரசியல் கட்சிகளையும் ஏனைய அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து தராசுக் கூட்டணியை ஏற்படுத்தி அதை வெற்றிக் கூட்டணியாக மாற்றியமைத்த முன்னணி ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டவர்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தராசுக் கூட்டணி மூலம் புத்தளம் மாவட்டம் சிறுபான்மை எம்.பி. என்ற இலக்கை அடைந்த அதே வேளை புத்தளம் நகர சபையின் புதிய அங்கத்தவராகவும் தெரிவாகி இருக்கும் இவர்கள் இருவரும் இன்று 20 ம் திகதி தமது பதவிகளை தத்தமது சபைகளில் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வின் இறுதி அம்சமாக நகர சபை உறுப்பினர் சிபாக் ஆசியருக்கு PPAF செயலாளர் என்.எம்.எம். ஜஹாஸ் மற்றும் கலந்து கொண்ட அதிதிகள் மூலம் நினைவுச்சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
No comments