கதிர்காமரை தமிழருக்கெதிராக பாவித்ததுபோன்று அலிசப்ரியை முஸ்லிம்களுக்கெதிராக பயன்படுத்துவார்களா ?
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இலகுவில் மறந்திருக்கமாட்டீர்கள். தமிழரான இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார்.
1994 இல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரை சந்திரிக்கா அரசாங்கம் நன்றாக பயன்படுத்தியது.
இதுபோலவே இன்று ராஜபக்சாக்களின் அரசாங்கத்தினால் அலிசப்ரி அவர்கள் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர், அலிசப்ரி ஆகிய இருவருக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் உள்ளன. அதாவது இருவரும் சிறுபான்மை இனத்தவர்கள். அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தங்களது சமூகத்தின் வாக்குகளால் வெற்றிபெறுவதற்குரிய அரசியல் தளம் இல்லாதவர்கள்.
சட்டத்தரணிகளான இவர்கள் இருவரும் தூங்கும்போது ஆங்கிலத்திலேயே கனவு காண்பவர்கள். அதாவது தங்களது தாய்மொழியில் அதீத பற்றுதல் இல்லாதவர்கள்.
வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான எத்தனையோ சிங்கள ராஜதந்திரிகள் இருக்கத்தக்கதாக முகவரியே இல்லாத லக்ஸ்மன் கதிர்காமரை சந்திரிக்கா அரசு கொண்டுவந்தற்கு பின்னால் பல திட்டங்கள் இருந்தது.
அதாவது அப்போது விடுதலை புலிகள் இராணுவரீதியில் மிகவும் பலமாக இருந்ததுடன், ஐரோப்பா உற்பட சர்வதேச நாடுகளில் புலிகளின் வலைப்பின்னல்கள் விரிந்து காணப்பட்டது.
“சிங்கள அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை கொலை செய்கிறது” என்ற புலிகளின் பிரச்சாரம் அப்போது மேற்கு நாடுகளில் மேலோங்கியிருந்தது. இந்த பிரச்சாரத்தை முறியடித்து விடுதலை புலிகளை தடைசெய்வதற்கு சிங்களவரைவிட தமிழரே பொருத்தமானவராக இருந்தார்.
அத்துடன் புலிகளை இராணுவரீதியில் அழிப்பதற்கு முடியாமல் இருந்த சந்திரிக்கா அரசு, மேற்கத்தேய நாடுகளில் புலிகளுக்காக பணம் வசூலிக்கப்படுவதனை கட்டுப்படுத்துவதன் மூலம் இங்கே புலிகளை பலயீனப்படுத்தலாம் என்று திட்டமிட்டது.
லக்ஸ்மன் கதிர்காமர் அவர்கள் தனக்கு பதவி வழங்கிய எஜமானர்களுக்காக ஓயாது ஓடியோடி உழைத்தார். இவரது ராஜதந்திர முயற்சி வெற்றியளித்தது. ஐரோப்பிய நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமென்று தடை செய்தது.
இறுதியில் புலிகளினால் தமிழின துரோகியாக சித்தரிக்கப்பட்டு 2005 இல் அவரது இல்லத்தில் புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார்.
அதுபோல் எத்தனையோ சிங்கள சட்ட மேதைகள் இருக்கத்தக்கதாக இனவாதிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் நீதி அமைச்சராக அலிசப்ரி என்கின்ற முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்பு “உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ எந்த எதிர்ப்பு வந்தாலும் பத்தொன்பதாவது சட்டத்தை திருத்தபோகிறேன்” என்று கருத்து வெளியிட்டதானது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
இங்கே “உள்நாட்டில்” என்று யாரை குறிப்பிடுகின்றார் ? பத்தொன்பதாவது அரசியலமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானதாகவும், சிறுபான்மையினர்களுக்கு சற்று ஆறுதலாகவும் இருக்கின்றது. இதனை மாற்றுவதென்றால் எதை மாற்றப்போகின்றார் ?
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்பது முஸ்லிம்களுக்கென்று விசேடமாக இருக்கின்ற தனியார் சட்டத்தை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டமாகும். இதற்கு சர்வதேசத்தின் எதிர்ப்புக்களை சமாளிக்கும்பொருட்டு அன்று தமிழர்களுக்கு எதிராக லக்ஸ்மன் கதிர்காமர் பயன்படுத்தப்பட்டதுபோல இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களை நீதி அமைச்சர் அலிசப்ரி அவர்கள் மேற்கொள்வாரா ?
அதாவது எங்களது கண்ணில் எங்களது கையாலேயே குத்துவதற்கான பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அலிசப்ரி அவர்கள் துணைபோவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments