Breaking News

நாங்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது ? சமூகத்தை பிளவுபடுத்தும் துரோகிகள் யார் ?

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால் தங்கள் சமூகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறி 1992 இல் ஈரோஸ் இயக்கத்தின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சுகபோகங்களையெல்லாம் தூக்கிவீசியதுடன், ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு போராடுவதற்காக காட்டுக்குள் சென்றார்கள். 

ஆனால் அதே பாராளுமன்ற பதவியை அடைந்துகொள்வதற்காக எம்மவர்கள் மக்களை ஏமாற்றியும், சமூகத்துக்குள் பிளவுகளை உண்டுபண்ணியும் தனது சுகபோக வாழ்வுக்காக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பிரதேசவாத தீயை விதைத்து வருகின்றார்கள்.

பிளவுபட்டுக்கிடந்த முஸ்லிம் சமூகத்தை முஸ்லிம் காங்கிரஸ் என்னும் இயக்கத்தின் மூலமாக மாமனிதர் அஸ்ரப் அவர்கள் பெரும் போராட்டதுக்கு மத்தியில் ஒற்றுமைப்படுத்தினார். பிரதேசவாதத்தை ஒழிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். 

ஆனால் அவர் உருவாக்கிய இயக்கத்திலிருந்து வந்த சிலர், எப்படியாவது பதவியை அடைந்துகொள்ளும் நோக்கில் தனது கிராமத்தின் வாக்குகளை மொத்தமாக சுவீகரிக்கும் பொருட்டு “ஊருக்கு எம்பி வேண்டும்” என்ற கோசத்தோடு பிரதேசவாதத்தை உருவாக்கி வருகின்றார்கள். 

பிரதேசவாதம் இந்த தேர்தலோடு முடிவடையப் போவதில்லை. அது பாமர மக்கள் மனதிலும், இன்றைய இளைய சமுதாயத்தினர் மத்தியிலும் ஆழ வேரூன்றி அதன்பின்பு பிரதேசவாதத்தால் சமூகத்துக்குள் பிளவுகளை உண்டுபண்ணும். 

இவ்வாறு சிறுபான்மை சமூகமொன்று தங்களுக்குள் பிரதேசவாதத்தினால் பிளவுபடுகின்றபோது அது பேரினவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமையும். 

தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்களிடம் வாக்கு கேட்பது வேறுவிடயம். ஆனால் ஊருக்கு எம்பி வேண்டும் என்று கூறிக்கொண்டு தனக்கு மட்டும் வாக்களியுங்கள் என்பவர்கள்மீது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். 

இவ்வாறானவர்கள்தான் எமது சமூகத்திற்குள் பிரதேசவாதத்தை உண்டுபண்னி பிளவுகளை உண்டாக்கும் விசக்கிருமிகள் என்பதனை சமூகம் மறந்துவிடக்கூடாது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது



No comments

note