அல்-குர்ஆனில் திருத்தம் செய்வதற்கான முன்னோடியாக இளவயது திருமண தடைச்சட்டம் அமையுமா ?
ஆதாரங்களின் அடிப்படையில் அல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதநூல் என்று உலகில் உள்ள இஸ்லாமியர்கள் நம்புவதுடன், யூதர்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அது அரேபியாவில் வாழ்ந்த முகம்மத் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்று இஸ்லாத்தின் எதிரிகள் கூறுகின்றனர்.
அந்தவகையில் பொதுபலசேனா, ராவய பலய போன்ற சிங்கள இனவாத இயக்கங்கள் கடந்த காலங்களில் அல்-குர்ஆனை கடுமையாக விமர்சித்ததனை மறந்திருக்கமாட்டீர்கள்.
அல்-குர்ஆணில் இஸ்லாம் அல்லாதவர்களை கொலை செய்ய கட்டளையிடப் பட்டுள்ளதாகவும், அதுபோல் அடிப்படைவாதத்தை தூண்டுகின்ற ஏராளமான வசனங்கள் அதில் உள்ளதாகவும், அவைகளை திருத்தம் செய்ய வேண்டும் என்று ஜானசார தேரர் பகிரங்கமாக கூறியதனையும் மறந்திருக்கமாட்டீர்கள்.
ஒரு பெண் பருவம் அடைகின்றபோது அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இயற்கையாக தனது கட்டளைப்படி இறைவன் காண்பிக்கிறான்.
இந்த நிலையில் இறைவனால் மனிதர்களுக்கு ஆகுமாக்கியதை திருத்தம் செய்து மனிதர்களே வயதெல்லையை வரையறை செய்வதானது இறைவனின் கட்டளைக்கு சவால் விடுவதற்கு சமமானது.
திருமண வயதெல்லையை பதினெட்டாக நிர்ணயிப்பதற்கு கடந்த வருடம் நல்லாட்சி காலத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் ஏற்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
ஆனால் புதிதாக நீதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி அவர்கள் “இள வயது திருமணங்களை தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ளார். நீதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி அவர்களினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையில், பௌத்தத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வளங்கும்பொருட்டு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பேரினவாதம் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகின்றது. அதன் முன்னோடியாக மேற்கொள்ளப்பட உள்ளதுதான் இந்த வயதெல்லை நிர்ணயமாகும்.
பேரினவாதிகளினால் நேரடியாக இவ்வாறான திருத்தங்களை செய்ய முற்படும்போது சர்வதேசரீதியில் எழுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கும் பொருட்டு, முஸ்லிம் பிரதிநிதிகளைக்கொண்டு இதனை சாதிக்க முற்படுகின்றனர்.
முஸ்லிம் பெற்றோர்கள் சிறுவயது பெண்களுக்கு பலாத்காரமாக திருமணம் செய்துவைக்கும் நடைமுறை இங்கே காணப்பட்டால் சிறுமிகளின் பாதுகாப்புக்கும், அவர்களின் கல்வியை கட்டாயப்படுத்துவதற்கும் வயதெல்லை அவசியமாகும்.
பாகிஸ்தான், வங்காளதேஸ், மொரோக்கோ போன்ற நாடுகளின் சில கிராமப்பகுதிகளில் பெற்றோர்கள் தங்கள் சிறுமிகளை கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் பலாத்காரமாக திருமணம் செய்துவைக்கின்ற நடைமுறை அங்கு காணப்படுகின்றது. அதனால் இந்நாடுகளில் சிறுமிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு திருமண வயதெல்லையை பதினெட்டாக நிர்ணயித்துள்ளனர்.
மேலே கூறப்பட்டவைகள் இஸ்லாமிய நாடுகள் என்பதனால் இந்த திருத்தம் காரணமாக அங்கு இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிர்காலங்களில் எந்தவித ஆபத்துக்களோ, பாதிப்புக்களோ ஏற்படப்போவதில்லை.
ஆனால் எமது நாட்டு சூழ்நிலை அவ்வாறல்ல. ஜானசார தேரர் போன்ற இனவாத கடும்போக்காளர்கள் இறைவனின் வேதமான அல்-குர்ஆனை திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் இவ்வாறான சட்டங்களில் கை வைக்கின்றபோது அது எங்களது பலயீனமாக கருதப்படும். எதிர்காலங்களில் ஒவ்வொன்றாக திருத்தம் செய்யும்படி கோருவார்கள். அதனால் எமது தனியார் சட்டம் முழுமையாக துடைத்தெறியப்படும்.
அத்துடன் அல்-குர்ஆனில் இருக்கின்ற யுத்தம் பற்றிய சூராக்களை மாற்றம் செய்யும்படியும் அழுத்தம் வழங்குவார்கள். அதனை நியாயப்படுத்துவதற்கும் எமது சமூகத்தில் உள்ள பச்சோந்திகளும், கோழைகளும், அதிகார பிசாசுகளும் மற்றும் மார்க்க அறிவில்லாத அரசியல்வாதிகளும் அதற்கு சம்மதிப்பார்கள்.
கடந்த வருடம் முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகளின்போது இராணுவத்தினர்களுக்கு பயந்து பலர் வீடுகளில் இருந்த அல்-குர்ஆனை தீயிட்டு அழித்த துயரமான சம்பவத்தினையும் மறக்க முடியாது.
எனவே சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் காணப்படுகின்றது. முதலில் அவைகளை வரிசைப்படுத்தி சீர்திருத்தம் செய்வதமூலம் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும்.
அத்துடன் திருமண வயதெல்லையை பதினெட்டாக மாற்றம் செய்வதென்றால் அதற்கு இந்த அரசியல் கால சூழல் பொருத்தமானதல்ல என்ற உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments