மூன்றில் இரண்டு பலத்தால் சர்வதேசத்திடம் சிக்கியுள்ள அரசு. முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன ?
இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த பச்சை மற்றும் நீலநிறக் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்காமல் ஒன்றையொன்று குற்றம் கூறிக்கொண்டே காலத்தை கடத்தியது.
தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கிய போதெல்லாம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லையென்று காரணம் கூறினார்கள்.
அன்று விடுதலை புலிகள் பலமாக இருந்த நிலையில் அரசாங்கத்தின் குறைந்தபட்சமான எந்தவித தீர்வினையும் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் புலிகள் இருக்கவில்லை.
ஆனால் 2009 இல் யுத்தம் முடிவுற்று புலிகள் இல்லாத நிலையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின்மீது இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்கள் கடுமையாக இருந்துவருகின்றது.
யுத்தம் முடிவுற்ற பின்பு தமிழர்களுக்கு “பதின்மூன்று ப்ளஸ்” வழங்கப்படும் என்று அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்தியாவிடமும், ஏனைய சர்வதேச சமூகத்திடமும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
18 வது திருத்த சட்டத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்தை திரட்டிய மஹிந்த அரசாங்கமானது, தமிழர்களின் தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடித்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் அன்றைய நிலைபோன்று இன்று இல்லை. இன்று தமிழர் தரப்பின் ஆதரவு இல்லாமலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமான பாராளுமன்ற பலம் அரசாங்கத்துக்கு உள்ளது.
அத்துடன் விடுதலை புலிகளின் கொள்கையுடைய கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்தை கடத்துவது போன்ற மிதவாத போக்கு இந்த கட்சிகளிடமில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் வலுவாக இருக்கின்ற நிலையில், இன்றைய மஹிந்த அரசாங்கத்துக்கு இருக்கின்ற மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் இனப்பிரச்சினைக்கு அதிகபட்சமான தீர்வினை வழங்குமாறு மீண்டும் சர்வதேச சமூகம் அழுத்தங்களை வழங்கும்.
கடந்த காலங்களைப்போன்று தனக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமில்லை என்று காரணம் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் தப்பிக்கொள்ள முடியாது.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டால், முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு என்ன ?
இந்த நாட்டில் இன்னுமொரு சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற வடகிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் என்ன ?
முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சமூகத்தின் அரசியல் தீர்வு விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன் ?
இவ்விடயத்தில் வெளிப்படையான கோரிக்கையை முன்வைக்க தயங்குவது ஏன் ?
“சேதாரமின்றிய விட்டுக்கொடுப்பு” என்ற போர்வையில் இனப்பிரச்சினை தீர்வின்போது பார்வையாளர்களாக இருந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு சமூக ஆர்வளர்களிடமும் காணப்படுகின்றது.
எனவே இந்த சந்தேகத்தினை முஸ்லிம் காங்கிரஸ் களையவேண்டும். அதாவது இனப்பிரச்சினை தீர்வில் வடகிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாட்டினை தெளிவாக உரத்து கூறவேண்டுமென்பது அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாகும். .
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments