இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலைபோன்று நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா ?
அரசியல் தலைவர்கள் சிலருக்கு ஆரம்பம் அமர்க்களமாகவும், முடிவுகள் அவமானமாகவும் இருக்கும். அதுபோல் வேறு சிலருக்கு ஆரம்பம் அவமானமாகவும் முடிவுகள் கௌரவமாகவும் இருக்கும். எது எப்படி இருப்பினும் முடிவு ஒன்று உள்ளது என்பது மட்டும் உண்மை.
நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் அரசியல் வாழ்வு ஆரம்பத்தில் மிகவும் துயரமானதாகவும் முடிவுகள் கௌரவமான வரலாறாகவும் உள்ளது.
பெரும்பான்மையாக கறுப்பர்கள் இருக்கின்றநிலையில் சிறுபான்மையான வெள்ளையர்கள் தென்னாபிரிக்காவை ஆட்சிசெய்து வந்தார்கள். பல துயரம் நிறைந்த போராட்டங்களுக்கு மத்தியில் கறுப்பரான நெல்சன் மண்டேலா அவர்கள் அதிபரானதும் ஒரு தடவைக்குமேல் ஆட்சியை தொடர விரும்பவில்லை.
அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திவிட்டு கௌரவமாக ஓய்வுபெற்றார். அவர் மறைந்தபின்பும் உலகம் அவரை போற்றுகின்றது.
அதுபோல் தனக்கு இருந்த பாராளுமன்ற பலத்தைக்கொண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது.
இருந்தும் அவ்வாறு செய்யாமல் அவரும் கௌரவமாக ஒய்வு நிலைக்கு சென்றார். இவ்வாறு பல உதாரணங்களை கூற முடியும்.
ஜே.ஆரின் அரசியல் பின்னணியைக்கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிக நீண்டகாலமாக தலைவராக பதவி வகித்து வருகின்றார்.
ரணில் தனது தலைவர் பதவி மூலமாக ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்கு குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு சாதனைகள் எதனையும் நிகழ்த்தவில்லை. இவரது காலத்தில்தான் அக்கட்சி வரலாறு காணாத தோல்விகளை எதிர்கொண்டது.
கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் இருந்துகொண்டு மேட்டுக்குடி அரசியல் செய்கின்ற ரணில் போன்ற தலைவர்களுக்கு சாதாரண பாமர மக்களினதும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களினதும் மனோநிலையை புரிந்துகொள்வது கடினம்.
தொடர் தோல்விகளினால் ஐ.தே கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ போட்டியும், தலைவருக்கு எதிரான விரக்தி நிலையும் ஆரம்பிக்கும்போது வரட்டுக்கௌரவத்தை களைந்துவிட்டு கௌரவமாக விலகியிருந்தால் இன்று ஏற்பட்டதுபோன்ற தலைகுனிவு ரணிலுக்கு ஏற்பட்டிருக்காது.
ஆனால் அடிமட்ட கட்சி உறுப்பினர்களின் எண்ணங்களை புறம்தள்ளிவிட்டு தனக்கு விசுவாசம் என்று நம்பிய மக்கள் அபிமானமில்லாத ஊழல்வாதிகளையும், வர்த்தகர்களையும் அருகில் வைத்துக்கொண்டு தொடர்ந்து மேட்டுக்குடி அரசியலை மேற்கொண்டதுதான் ரணிலுக்கு இன்று ஏற்பட்ட தலைகுனிவாகும்.
ரணிலுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைபோன்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிர்காலங்களில் ஏற்பட்டுவிடக்கூடாது.
ஏனெனில் சில முஸ்லிம் தலைவர்கள் தங்களது கட்சிக்கு மக்கள் அபிமானம் உள்ளவர்களையும், துறைசார்ந்த நிபுணர்களையும் உள்வாங்குவதில்லை. மாறாக விசுவாசம் என்ற போர்வையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை கட்சியின் உயர் பதவிகளிலும், பிராந்திய அமைப்பாளர் பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
எனவே இன்று ரணிலுக்கு ஏற்பட்டதுபோன்று நாளைக்கு தங்களுக்கும் ஏற்படாதவாறு கட்சிகளை புனரமைத்து தகுதியானவர்களை உரிய இடங்களில் அமரவைப்பதுடன், தகுதியற்ற போலி விசுவாசிகளை பதவியிலிருந்து களைவது முஸ்லிம் தலைவர்களுக்கு உள்ள கடமையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments