Breaking News

2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!


2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அந்நாட்டு அணியுடனும் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி20-யில் முதல் போட்டி மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் , பகர் சமான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் அசாம் 56 ஓட்டங்களிலும், பகர் சமான் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹபீஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். 

36 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 5 பவுண்டரிகள்இ 4 சிக்சர்கள் உட்பட 69 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம்  பெண்டன் மற்றும் ஜோன் பெயார்ஸ்டோ களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர்.

டாம் பெண்டன் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜோன் பெயார்ஸ்டோ 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த டேவிட் மலன் மற்றும் இயன் மோர்கன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இயன் மோர்கன் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 66 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் 19.1 ஓவரில் 199 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் டேவிட் 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

No comments

note