இருக்கின்ற கோவணத்தை பாதுகாப்பதென்றால் முஸ்லிம்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும் ?
அமையப்போகின்ற பாராளுமன்றம் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் சவால்கள் நிறைந்ததாக காணப்படும். அதிகளவான இனவாத சக்திகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்குரிய சாத்தியங்கள் காணப்படுவதே இதற்கான காரணமாகும்.
அதிலும் தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் சட்டங்களை இயற்றி அதன்மூலம் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கின்ற நிலைமை ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது.
இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது இனவாத சக்திகளுக்கு ஈடுகொடுத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் திராணியுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதன் மூலம் மட்டுமே எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான எமது இருப்பை பாதுகாக்க முடியும்.
அதாவது அரசியல் தெரியாதவர்களும், முஸ்லிம்களின் பூர்வீக வரலாறுகளை அறியாதவர்களும், சமூகத்தைவிட தலைமைகளின் காலில் விழுந்து கும்பிடுகின்றவர்களும், கொந்தராத்து காரர்களும், வாயினால் வீரம் பேசுகின்ற கோழைகளும் மற்றும் மக்களிடம் ஒன்றையும், ஆட்சியாளர்களின் பின்கதவால் சென்று இன்னொன்றையும் பேசி பணம் சம்பாதிக்கின்ற அரசியல் தரகர்களை நாங்கள் தெரிவு செய்தாலும் நஷ்டமடைய போவது எமது சமூகமே தவிர, பாராளுமன்ற உறுப்பினர்களல்ல.
பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அங்கு உரையாற்றுவதனால் மட்டும் எதனையும் சாதித்துவிட முடியாது. அந்த உரை ஹன்சாட்டில் பதிவாகியிருக்கும். அதனை அடுத்த தேர்தல் விளம்பரத்துக்காக மக்களுக்கு காண்பிக்கலாமே தவிர ஆனபலன் எதுவுமில்லை.
இனவாதிகளை எதிர்த்து துணிச்சலுடன் பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் புரிய தகுதியானவர்கள் யார் ? ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் யார் ? இனவாதிகளின் கேள்விகளுக்கு தர்க்கரீதியாக உடனுக்குடன் பதில் வழங்கக்கூடியவர்கள் யார் ?
இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமலும், அரசின் சலுகைகளுக்கு சோரம்போகாமலும் மக்களின் காவலர்களாக உழைக்கக்கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகளை மனதில் சுமந்தவர்களாக நாங்கள் வாக்களிக்க வேண்டும்.
மாறாக, தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசுகின்ற கோழைகளுக்கும், இரட்டை நாக்குடையவர்களுக்கும், பதவி வெறியர்களுக்கும் வாக்களித்தால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் எமக்கிருக்கின்ற கோவணத்தையும் பேரினவாதிகள் உருவிவிடுவார்கள்.
எனவே ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தகுதியானவர்களை நாங்கள் தெரிவுசெய்ய வேண்டும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அல்-ஹாபில் நசீர் அஹமத் அவர்கள் அமைய இருக்கின்ற பாராளுமன்றத்துக்கு மிகவும் அவசியமானவர் என்பதனை மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகமான முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments