Breaking News

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தி

எத்தகைய சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்நோக்குகின்ற திராணியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமென இந்த “ஈதுழ்;அழ்ஹா” பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் 

இலங்கை முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், எத்தகைய சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்நோக்குகின்ற திராணியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமென இந்த “ஈதுழ்;அழ்ஹா” பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சோதனைகளையும், வேதனைகளையும் சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இறைதூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் தியாகத்துடன் சகிப்புதன்மையின் சிறப்பையும் அதிகம் வலியுறுத்துகின்றது.

இலங்கையை பொறுத்தவரை இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள்; தொடர்ந்தும் நீடிப்பது துக்ககரமானதாகும். இத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சியில் உரிய பங்களிப்பை செய்கின்ற அதே வேளையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஒத்துழைத்து வருகின்றனர்.

உலகில் பொதுவாக இஸ்லாத்தின் எழுச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள வெறுப்பும் அச்ச உணர்வும் அதிகரித்துள்ளதால் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முறியடித்து அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலைபெற இந்த நன்னாளில் பிரார்த்திப்போமாக.

ஈத் முபாரக்



No comments

note