ஜாமிஆ நளீமிய்யா பற்றிய எனது பார்வை - அஷ்ஷைக் பளீல்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அண்மைக்காலமாக ஜாமிஆ நளீமியா பற்றிய விமர்சனங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தும் சமூகத்துக்கு வெளியிலிருந்தும் முன் வைக்கப்படுவதை யாம் அறிவோம்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்றவன் என்ற வகையிலும் அங்கு பணி புரிபவன் என்ற வகையிலும் அந்த நிறுவனம் பற்றிய எனது மனப்பதிவுகளை வெளியிடுவது எனது தார்மீகக் கடமை என்று நினைக்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வுடைய அருளினால் ஜாமிஆவில் நான் பிரவேசம் பெற்ற 1980 ஆம் ஆண்டு எனது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மனித வாழ்வின் குறிக்கோள் பற்றியும் பொறுப்புக்கள் பற்றியும் மிகத் தெளிவான கொள்கையும் நிலைப்பாடும் இந்த நிறுவனத்தின் கல்வித்திட்டத்தின் ஊடாகவே எனக்கு கிடைத்தது என்று சொல்ல முடியும்.
இன்றைய நிலையில் நான் இருப்பதற்கு முதலில் அல்லாஹ்வின் அருளும் இரண்டாவது இந்த கலா நிலையமும் காரணமாக அமைந்ததாக துணிந்து கூறலாம். அல்ஹம்துலில்லாஹ்!
எவ்விதமான தீவிரமுமற்ற, நடுநிலையான இஸ்லாமிய சிந்தனையை சுதந்திரமாக கற்கும் வாய்ப்பு ஜாமிஆ நளீமியாவின் கலைத்திட்டத்தின் ஊடாகவும், எமக்கு கற்பித்த விரிவுரையாளர்கள் மூலமாகவும் வாசிகசாலையில் வாசித்த நூல்களாகளூடாகவும் கிடைத்தது. விரிவுரையாளர்களது நெறிப்படுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் எம்மைப் புடம்போட்டன. ஓரளவு ஆற்றல்களை திறமைகளை இங்கு உள்ள வசதி வாய்ப்புக்களையும் வளங்களையும் பயன்படுத்தி வளர்த்துக் கொள்ளக் கூடிய பாக்கியமும் கிடைத்தது.
என்னோடு சேர்த்து பல நூற்றுக்கணக்கான பழைய மாணவர்களும் இதிலிருந்து நிச்சயம் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்த நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் அவர்கள் தமது கல்வி, தஃவா மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் இந்த நிறுவனத்தின் பட்டதாரிகள் முழுமையானவர்கள் அல்லர். நபிமார்களுக்கு மாத்திரமே முழுமைத் தன்மையை அல்லாஹுத்தஆலா கொடுத்து வைத்திருந்தான். இருப்பினும் எம்மாலான பங்களிப்பை செய்யும் பாக்கியத்தை இந்த நிறுவனத்தின் ஊடாகவே பெற்றோம் என்று சொல்லமுடியும்.
இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த நிறுவனம் பற்றிய அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுகளை சிலர் தெரிவித்து வருவது மிகப் பெரிய கவலையைத் தருகிறது. இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய அறிவுச் சொத்தாகவும் இஸ்லாமிய ஞானங்களது சமுத்திரமாகவும் இருக்கும் இந்த கலா நிலையம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கும் பங்களிப்பு செய்துவருகிறது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் (Nation Building) நளீமீக்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.
நளிமிய்யாவின் சிந்தனை பாரம்பரியம்
நளீமிய்யாவின் கலைத்திட்டத்தை பொறுத்தவரையிலும் அங்கு எந்தவிதமான கடும்போக்குகளையோ தீவிரவாதங்களையோ கண்டுகொள்ள முடியவில்லை.
நளீமிய்யாவின் பாடத்திட்டமும் கொள்கையும் Transparent (வெளிப்படைத் தன்மை) மிக்கது. அதில் எந்த ஒழிவு மறைவுமில்லை. அங்கு ஆய்வு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவமுண்டு. இஸ்லாமிய போதனைகள் அங்கு விரிவாக கற்பிக்கப்படுவதுடன் இந்த நாட்டுக்கு ஏற்ற 'பிக்ஹுல் அகல்லிய்யாத்' 'வஸதிய்யா சிந்தனை' என்பன மிகவுமே ஆழமாகப் போதிக்கப்படுகின்றன.
நளீமிய்யாவில் கற்றவர்கள் அரபு,ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழியறிவுகளைக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் பாரம்பரிய இஸ்லாமிய கலாஞானங்களோடு (Classical) நவீன சிந்தனைப் போக்குகளையும் (Modern) இந்த நாட்டின் பொதுக் கலைத் திட்டத்தையும் (National Curriculum) படித்திருப்பதுடன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் (Nation Building) பணியில் தம்மாலான எல்லா முயற்சிகளை தாம் வகிக்கும் அரச மற்றும் தனியார் பதவிகள் ஊடாக செய்து வருகிறார்கள்.
அவர்கள் இந்த நாட்டு சட்டதிட்டங்களை மதிப்பதுடன் சமாதான சகவாழ்வையும் இனசெளஜன்யத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சகோதர சமயங்களைச் சேர்ந்தவரர்களால் ஏற்படுத்தப்பட்ட தொண்டர் நிறுவனங்களில் அங்கம் வகித்து உச்சகட்ட பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.
உலக வழமையை மறுக்கலாகாது
நளீமிய்யாவில் கற்றவர்களுக்கு மத்தியில் கடும் போக்காளர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்படித்தான் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அதற்கு நிறுவனம் காரணமாக இல்லை.
ஏனெனில், பல்கலைக் கழகங்களில் படித்த பல தமிழ், சிங்கள மாணவர்கள் அவ்வப்போது ஆயுதக் கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்டதற்காக அந்தப் பல்கலைக்கழகங்களது பாடவிதானம் தான் காரணம் ஏன் நாம் கூறமாட்டோம்.
பூகோளமய உலகில், தகவல் தொழில்நுட்ப புரட்சி நிலவும் சூழலில் இளைஞர்கள் நவீன Social Media களது தொடர்பால், பயங்கரவாத சிந்தனைகளால் மட்டுமல்ல போதை வஸ்த்துக்களுக்கும் அடிமையாகிறார்கள். ஆபாசத் குழிகளில் அமிழ்ந்து போயிருக்கிறார்கள்.
இவர்கள் கட்டாயமாக நெறிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், நெறிப்படுத்தல் முயற்சிகள் பலிக்காது போய் வெளியேறுவோர் வழிபிறழ்வோர் எல்லா சமூகங்களிலும் இருக்கிறார்கள். இது உலக வழமையாகும்.
வஹி இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் நபியவர்களது சபைக்கு நித்தமும் வந்து சென்ற பலர் முனாபிக்குகளாக இருக்கவில்லையா? அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் முனாபிக்குகளின் தலைவனாகவே இருந்து அல்லாஹ்தஆலாவின் வெறுப்பைப் பெற்ற நிலையில் மரணிக்க வில்லையா?இத்தகையவர்கள் வழிபிறழ்ந்து வாழ்ந்தமைக்கு நபிகளாரின் தூதோ அணுகுமுறையோ காரணமல்ல. அதற்கு அந்த அந்த மனிதர்களே காரணம்.
விதிவிலக்கின்றி இலங்கையிலுள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புக்களிலும் இப்படியானவர்கள் இருக்கலாம். சிலர் கருத்து முரண்பட்டு வெளியேறி அகீதா ரீதியாக வழிகெட்ட கொள்கைகளுக்கு மாறியவர்களும் தீவிரவாதிகளாக மாறியவர்களும் இருக்கிறார்கள். அதற்கு அந்த மத்ரஸாக்களையோ இயக்கங்களையோ நோக்கி மட்டும் விரல் நீட்டுவது முறையல்ல.
ஜாமிஆ தனது மாணவர்கள் சகல மதங்களையும் சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அதேபோல் முஸ்லிம் சமுகத்திற்குள் இருக்கும் சகல சிந்தனைப் பிரிவுகளையும் பற்றிய தெளிவோடு இருப்பதற்கான வாய்ப்புக்களை சுதந்திரமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஜாமிஆவின் பாடத்திட்டத்தின் ஊடாக அகீதாவிலும் பிக்ஹிலும் தஃவா துறையிலும் உள்ள பெரும்பாலான பிரிவுகள் மற்றும் போக்குகள் பற்றி நளீமீக்கள் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், விரிவுரையாளர்களால் அவர்கள் நெறிப்படுத்தப்படுகிறார்கள்.
இமாம்களான அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ, கஸ்ஸாலி, அப்துல் காதிர் ஜீலானி போன்றோரின் நூல்களுடன் இப்னு தைமியா, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப், கர்ளாவி, சையித் குதுப், மெளதூதி போன்றோரின் நூல்களும் ஏன் வழிபிறழ்ந்த இயக்கங்களது நூல்களும் நளீமிய்யா வாசிகசாலையில் உள்ளன. காந்தி, கால்மார்க்ஸ், வள்ளுவர் ஆகியோரது நூல்களுடன் கல்கி,சாண்டில்யன், வரதராசன், கண்ணதாசன் போன்றோரின் நாவல்களும் வாசிகசாலையில் உள்ளன.
மகாத்மா காந்தி பின்வருமாறு கூறினார்:-
"I do not want my house to be walled in on all sides and my windows to be stuffed. I want the cultures of all lands to be blown about my house as freely as possible. But I refuse to be blown off my feet by any. I refuse to live in other people's houses as an interloper, a beggar or a slave."
"எனது வீட்டுக்கு எல்லாப் பக்கங்களிலும் சுவர்கள் போடப்படுவதையும் என் ஜன்னல்கள் அடைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. எல்லா பிரதேசங்களது கலாசாரங்களும் முடிந்தவரை சுதந்திரமாக என் வீட்டை நோக்கி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அந்த கலாசாரங்கள் எதனாலும் என் கால்கள் அள்ளிச் செல்லப்படுவதை நான் விரும்புவதில்லை. மற்றவர்களின் வீடுகளில் ஒரு இடைத்தரகர், பிச்சைக்காரன் அல்லது அடிமையாக வாழுவதையும் நான் மறுதலிக்கிறேன்." என்றார்.
எனவே சுதந்திரமான சிந்தனையை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நளீமிய்யாவின் நிலைப்பாடாகும்.
உயர் பதவிகளில் நளீமீக்கள் இருப்பது பற்றி
நளீமீக்கள் உயர் பதவிகளை வகிப்பது பற்றி ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படுவதில் எப்படியும் நியாயமில்லை.
அவர்கள் அந்தப் பதவிகளுக்கு இந்த நாட்டின் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றி முறையாகவே வந்து சேர்ந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய கல்வித் தகைமைகள் மற்றும் திறமைகள் காரணமாகவே வந்தார்களே தவிர இதற்காக அவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளவில்லை என்பது மிகத் தெளிவான உண்மையாகும். அவர்கள் அப்பதவிகளை துஷ்பிரயோகம் செய்திருந்தால் அதுபற்றி கட்டாயமாக குரல் எழுப்பப்பட வேண்டும். நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமை அதுவாகும்.
நளீமீக்கள் பொறுப்புக்களைத் துஷ்பிரயோகம் செய்வதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த நாட்டில் பகற்கொள்ளையில் இலஞ்சத்தில் ஊழலில் நாட்டைத் தாரை வார்ப்பதில் வேறு எத்தனையோ லட்சம் பேர் ஈடுபடத் தான் செய்கிறார்கள். உண்மையாகவே நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் அவர்களையும் கண்டுகொண்டு விமர்சிக்க வேண்டுமே!
SLAS, SLOS, SLEAS போன்ற பரீட்சைகளில் சித்தியடைந்து அமைச்சுக்களது உயர் பதவிகளில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகப் பொறுப்புக்களில், திணைக்களங்களில், கல்விச் சேவையின் பல பதவிகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, பாடசாலைகளின் அதிபர்களாக, ஆசிரியர்களாக, பிரதேச செயலாளர்களாக, பணிப்பாளர்களாக, நீதிபதிகளாக, சட்டத்தரணிகளாக மற்றும் இன்னோரன்ன கெளரவமான நிலைகளில் நளீமீக்கள் பணிபுரிகிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் பர்ளு கிபாயாவான பதவிகள் இவை. முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் இது சம்பந்தமாக பெருமைப்பட வேண்டும். இத்தகையவர்கள் இத்தகைய பதவிகளை வகிக்கின்ற பொழுது அவர்கள் தேச நிர்மாணப் பணியில் தான் பங்கெடுக்கிறார்களே தவிர இந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் வேலையில் அல்ல.
இன்னும் கணிசமான தொகையினர் இஸ்லாமிய தஃவாத் துறைக்கு தம்மாலான பங்களிப்பை எழுத்து, பேச்சு மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் மூலமாக வழங்கி வருகிறார்கள். இலங்கை நாட்டின் இஸ்லாம் மற்றும் அரபு பாடங்களுக்கான நூல்களை எழுதுவதில் அவர்களது பங்கு குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் அல்லாஹ்வுடைய அருளால் கிடைக்கப் பெற்றவையே தவிர மனிதர்களது முயற்சிகள் மட்டும் காரணமல்ல என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.
அத்தகையவர்களை உருவாக்கிய அந்த நிறுவனம் உண்மையில் இந்த நாட்டின் ஓர் அறிவகம், முஸ்லிம் சமூகத்தின் அறிவுச் சொத்து என்ற வகையில் அது உற்சாகப்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை அதைரியப்படுத்தக் கூடாது; அது மெச்சப்பட வேண்டுமே தவிர பொறாமைக்கு இலக்கக் கூடாது; தவறுகள் இருந்தால் இதய சுத்தியோடு சுட்டிக்காட்டப்பட வேண்டுமே தவிர காட்டிக் கொடுக்கப்படக் கூடாது.
மனிதர்கள் தான் அந்நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்றவகையில் தவறுகள் ஏதும் இடம்பெறலாம். அத்தகைய தவறுகள் அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். ஒருவர் தவறு செய்யும் போது அவரது உடன் பிறப்பான மற்றொரு சகோதரர் எப்படி நடந்து கொள்வார்? அத்தவறைக் கண்டு கவலைப்படுவதோடு அதனை எப்படியாவது சக சகோதரனிடமிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைப்பார்.
அதுதான் நாகரீக உலகத்தின் வழமையாக இருக்கிறது. மாறாக அத்தவறை பக்கத்து வீட்டில் இருப்பவருக்கோ அல்லது ஊராருக்கோ காட்டிக்கொள்ளமாட்டார். காட்டிக் கொள்வதால் குடும்பத்துக்கு தான் இழுக்கு என்று நினைப்பார்.
இப்படித் தான் முஸ்லிம்கள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களதும் சமூகத்திலுள்ள நிறுவனங்களதும் தப்புத் தவறுகளையும் அணுகப் பழக வேண்டும். பிறறை தாறுமாறாக விமர்சிப்பவர்கள் கூட தாமும் மனிதர்கள் என்ற வகையில் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.
ஒரு முஸ்லிம் சகோதர முஸ்லிமை சகோதரனாகவும் பரிவோடும் அக்கறையோடும் பார்க்க வேண்டும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ؛ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
صحيح البخاري، برقم: (6011)، وصحيح مسلم، برقم: (2586), واللفظ له.
"விசுவாசிகள் தமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு கொள்வதையும் பரிவு காட்டுவதையும் இரக்கமாக நடந்து கொள்வதையும் பொறுத்த வரையில் ஒரே உடம்புக்கு ஒப்பானவர்கள். அந்த உடம்பின் ஏதாவது ஒரு பகுதிக்கு நோய் வந்துவிட்டால் உடலின் ஏனைய உறுப்புக்கள் விழித்திருப்பதன் மூலமும் காய்ச்சலின் மூலமும் அந்த நோயில் பங்கு கொள்ளும்" என்று கூறினார்கள்.
இங்கு வந்திருக்கும் تداعى என்ற சொல்லுக்கு
வழங்கப்படுகின்ற இன்னுமொரு விளக்கத்தின்படி ஒரு உறுப்பு மற்ற உறுப்பை பரஸ்பரம் உதவிக்கு அழைத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை அன்பும் இரக்கமும் அக்கறையும் பாசமும் தான். கருவறுப்பதும் காட்டிக் கொடுப்பதும் குரோதம் கொள்வது அல்ல.
பரஸ்பரம் எவரும் எவரையும் குரோதத்துடன் பார்க்கவே கூடாது. தப்புத் தவறுகளை சந்திக்கிழுப்பது எந்த வகையிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாகவே அமையும்.
அல்லாஹ் எண்ணங்களை நன்கு அறிந்தவன்.
#ஓர் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும் அது தான்:-
நீங்களோ நானோ எந்த ஒன்றையும் எதிர்ப்பதாக இருந்தாலும் அல்லது ஆதரிப்பதாக இருந்தாலும் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகினால் மட்டுமே அப்படிச் செய்ய வேண்டும்.
1. அந்த விவகாரம் பற்றிய பூரண அறிவுத் தெளிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.
2. அல்லாஹ்வின் திருப் பொருத்தத்துக்காக மட்டுமே அந்த எதிர்ப்பு முயற்சியில் அல்லது ஆதரிப்பில் ஈடுபட வேண்டும்.
புகழ், பணம், பதவி போன்றவற்றை அடைந்து கொள்ளும் நோக்கிலோ தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவோ இவற்றில் ஈடுபட்டால் அல்லாஹ் உலகில் அவற்றை அம்பலப்படுத்துவதோடு மறுமையில் அவனது தண்டனை கடுமையாகத் தான் இருக்கும்.
எனவே, நானும் நீங்களும் இந்த அடிப்படையான உண்மைகளை அறிந்து செயல்படுவது அவசியமாகும். இஸ்லாத்துக்கு எதிரான மிகப்பெரிய சிந்தனா ரீதியான படையெடுப்பு உலகமெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அது ஆயுதப்படையெடுப்பை விட பேராபத்தானது.
எனவே, இந்த இக்கட்டான காலப் பிரிவில் நாம் அனைவரும் கைகோர்த்து, எமக்கு மத்தியில் ஒற்றுமைப்பட்டு, பரஸ்பரம் தவறுகளை திருத்திக் கொண்டு வாழும் பொழுது அல்லாஹ்வின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் போதுமானவன்!
No comments