Breaking News

பெருந்தலைவர் எம் எச் எம் அஷ்ரப் - இறுதித் தருணமும் பசுமை நினைவுகளும் - கே.ஏ.பாயிஸ் புத்தளம் நகர பிதா

2000  - மில்லேனியம் வருடத்தின் செப்டம்பர் மாத 12,13,14,15 ஆம் இரவுகளும் 16 திகதிய அதிகாலை பொழுதும் அந்த பேரவலத்துக்கு கட்டியம் கூறிய இறுதி இரவுப் பொழுதுகளாகும். 

பெருந்தலைவர் அஷ்ஷஹீத்  எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்கள் நேரத்துக்கு உண்ணாமல், உறங்காமல் தனது 24  மணித்துளிகளையும் அடுத்த கட்ட சமூக அரசியல் போராட்டத்துக்கான வியூகங்களை வகுப்பதிலும், அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைப்பதிலும் கட்சிப் போராளிகளை தனது stn.more crecent உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குவியச்செய்து தனது மரணத்தை முன்னமே தெரிந்து கொண்டதாலோ என்னவோ? தான் வளர்த்தெடுத்த போராளிகளுக்கு வஸிய்யத்து செய்து, களப்போராட்டத்துக்கு அவர்களை தயார் செய்து அனுப்புகின்ற அந்த இறுதித் தருணத்தில் அவரோடு இருந்த அந்த சந்தர்ப்பத்தை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். 

செப்டம்பர் 16 ஆம் திகதி நடுநிசியை தாண்டிய அதிகாலை பொழுதில் பெருந்தலைவருடன் உரையாடுகின்ற அந்த கடைசித்தருணம் எனக்கு கிடைத்தது. 

என்னை அழைத்தார் 

கையை பற்றி சலாம் சொன்னேன்.

பதில் சொன்ன மறுகணமே கலிமா சொல்லுங்கள் என்றார்.

நான் திகைத்துப் போனேன்.

மீண்டும் கலிமா சொல்லுங்கள் என்றார்.

நான் அதிசயமாக பார்த்தேன்.

அவரே கலிமாவை சொல்லித்தர நானும் பின்தொடர்ந்து சொன்னேன்.

முடிவில்...

எனது அதிர்ச்சி நிலையை கண்டு காரணத்தை விவரித்தார் பெருந்தலைவர்.

"நாம் சமுதாயத்துக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இது வெறும் பதவிகளை தக்க வைத்துக் கொள்கின்ற தொழில் அல்ல.  இப்போராட்டத்தில் நானும் நீங்களும் எமது போராளிகளும் ஷஹீதாக்கப்படலாம்! அந்த உணர்வுடனேயே இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்...! இந்த சமூக போராட்டத்தில் நீங்கள் எதிர் நோக்குகின்ற அச்சுறுத்தல்கள் எமக்குத் தெரியும். அதைவிடவும் பாரிய அச்சுறுத்தல்களை நாம்எல்லோரும் எதிர் நோக்குகின்றோம். நாம் எல்லோரும் மரணிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ் தஆலா உங்களுக்கு பாதுகாப்பளிப்பான்" என்று உணர்வுபூர்வமாக உரையாடினார்.

பின்னர்  நான் அதிகாலையிலேயே புத்தளத்தை நோக்கி புறப்பட்டு வந்தேன். ஊருக்கு வந்து சேர்ந்து தூங்கி எழுந்தவுடன் அந்த பேரவலத்தின் செய்தி என் காதுகளுக்கு எட்டியது.  உலகமே இடிந்து விழுந்த அதிர்ச்சியில் நான்.

கே.ஏ.பாயிஸ்.
நகரபிதா.
புத்தளம் நகரசபை.







No comments

note