Breaking News

ஆப்கானில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பும், அமெரிக்காவின் அரசியல் நகர்வும், முஜாஹிதீன்களும்.

இருபத்தி எட்டாவது தொடர்........... 


இறைவன் இல்லையென்று நம்புகின்ற ரஷ்யர்களுடன் உறவாடுவதைவிட, இறைவன் இருக்கின்றான் என்ற கொள்கையுடைய அமெரிக்கர்களுடன் உறவாடுவதுதான் சிறந்தது என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய மார்க்க போதகர்களின் கருத்துக்களுக்கு பின்னணியில் அமெரிக்காவின் CIA யின் சூழ்ச்சிகள் இருந்ததா என்ற சந்தேகமும் உள்ளது. 

ஆனாலும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய மத போதகர்களின் இந்த கருத்துக்கள் வெளியானதும் CIA யினர் உசாரடைந்தனர். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவினார்கள். குறிப்பிட்ட மதபோதகர்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகளை வழங்கியது அமெரிக்கா. 

இந்த சூழ்நிலையில் முகம்மது தாவூதின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு 1978.04.27 இல் இராணுவத்தின் உதவியுடன் சதிப்புரட்சி மூலம் நூர் முகம்மது தராக் என்பவர் ஆட்சியை கைப்பேற்றினார். 

இவர் கடந்தகாலத்து ஆப்கானிஸ்தானின் தலைவர்களைவிட ஒருபடி மேலே சென்று சோவியத் ரஷ்யாவின் அதி தீவிர விசுவாசி என்பதனை காண்பிக்கும்படியாக இவரது ஆட்சி இருந்தது.  

மதச்சார்பற்ற கொள்கையினைக்கொண்ட நூர் முகம்மது தராக் அவர்கள் பெண்களுக்கு சம உரிமையை வழங்கியதுடன், இவரது ஆட்சியில் மேக்கத்தேய ஆடை அணியும் கலாச்சாரமும் மேலோங்கியது. 

கிட்டத்தட்ட கொமியுனிச கொள்கையினை போன்ற கொள்கையினை நூர் முகம்மது தராக் அவர்கள் ஆப்கானிஸ்தானில் நடைமுறைப்படுத்தினார். இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய மதத்தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

அத்துடன் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டதனால் மக்கள் கொதித்தெளுந்தனர். அரசுக்கு எதிராக சிறுசிறு போராட்டங்களும், வன்முறைகளும் நாடுதழுவியரீதியில் உருவாக தொடங்கியது. 

இப்படியான ஒரு சந்தர்ப்பத்துக்காக நீண்டகாலமாக காத்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் CIA யினர், நாடு முழுவதிலும் சிறுசிறு குழுக்களாக செயல்பட்டுவந்த போராட்டக்காரர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு ஆயுதபயிற்சி வழங்கி, ஆயுதங்களும், பணமும் வழங்கியதன் மூலம் சோவியத் ரஷ்யாவின் கைக்கூலியாக இருந்த நூர் முகம்மது தராக்கின் ஆட்சிக்கு எதிராக கலகத்தை தூண்டினர். 

நாளுக்குநாள் வன்முறைகள் வெடிக்கத்துவங்கியதும் ஆட்சி ஆட்டம் கண்டது. இதனால் வேறுவழியின்றி ஆட்சியை பாதுகாப்பதற்காக நூர் முகம்மது தராக் சோவியத் ரஷ்யாவின் உதவியை நாடினார். இதனால் சோவியத் ரஷ்ய படைகள் 1979.12.24 அன்று ஊடுருவி ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்தனர். 

ஆப்கானிஸ்தானில் யார் புரட்சி செய்தாலும் இறுதியில் ஆட்சி அமைப்பவர்கள் தன்னுடன் நற்பாகவே இருப்பார்கள் என்பதனால், புரட்சிகள் நடைபெறும்போது அதில் சோவியத் ரஷ்யா தலையிடுவதில்லை. 

ஆனால் இந்த புரட்சி வித்தியாசமானது. அதாவது புரட்சி செய்கின்ற குழுக்களுக்கு ஆட்சியை மட்டும் கைப்பேற்றுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக மத போதகர்களின் அமெரிக்க சார்பு கொள்கையினால் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடம் சிக்கிவிடுவதனை தடுக்கும்பொருட்டே சோவியத் ரஷ்யா தனது படைகளை அனுப்பியது. 
 
ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கம் அதிகமானால் ரஷ்ய படைகள் அங்கு ஊடுருவும் என்று அமெரிக்கா முன்கூட்டியே எதிர்பார்த்தது. தாங்கள் எதிர்பார்த்ததுபோன்று நடைபெற்றதனால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய படைகளை அழிப்பதற்கு திட்டமிட்டது. 

இதற்காக இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானை மத கொள்கைக்கு விரோதமான கொமியுனிஸ் நாடு கைப்பேற்றி உள்ளது என்ற பிரச்சாரத்தின் மூலம் முழு முஸ்லிம் உலகத்தையும் ரஷ்யாவுக்கு எதிராக திசைதிருப்பியது அமெரிக்கா.   

அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு சவூதி அரேபியாவும், பாகிஸ்தானும் முழுமையாக உதவி செய்தது. 

உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆக்கிரமிப்பு செய்த சோவியத் படைகளை விரட்டியடிப்பதற்காக முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவினார்கள். இவ்வாறு சவூதி அரேபியாவிலிருந்து வருகைதந்த முஜாஹிதீன்களில் ஒருவர்தான் “ஒசாமா பின் லேடன்” ஆகும். 

அப்போது அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு முஜாஹிதீனாக காட்சியளித்த ஒசாமா பின் லேடன் அவர்கள், பின்னாட்களில் பயங்கரவாதியாக காட்சியளிப்பார் என்று இரு தரப்பினரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

தாங்கள் என்னதான் ஆக்கிரமிப்பு செய்தாலும், எத்தனை கொலை செய்தாலும் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாகவும், அதனை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது அமெரிக்காவின் கொள்கையாகும். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

தொடரும்............



No comments

note