Breaking News

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி வேண்டுகோள்

லீசிங் அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் தவணைகளைச் செலுத்தத் தவறும் போது வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு சில லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறை சட்டவிரோதமானது, இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

லீசிங் கம்பனிகள் தவணை செலுத்தத் தவறிய வாகனத்தைப் பறிமுதல் செய்ய முன்ன முன்னர் பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. வாகனத்தை பறிமுதல் செய்த பின்னரே அவர்கள் பொலிசில் முறையிடுகிறார்கள். பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறுஅறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என ஜனாதிபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிடி விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கும் அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் லீசிங் கடன் தவணையும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களைப் பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். எனவே கடன் தவணை செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.




No comments