Breaking News

ஜனாஸாக்களை எரித்தல் – முஸ்லிம்களுடன் நேரடியாகப் பேசி முடிவெடுக்க வேண்டும் – OIC இன் 16 முஸ்லிம் நாடுகள் கோரிக்கை

கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் வெளிப்படையான கலந்தாலோசனை மூலம் நேரடியாகப் பேச வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளில் (OIC) அங்கம் வகிக்கும் இலங்கையிலுள்ள 16 நாடுகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுள்ளன.


எதிர்பாராத இந்த கொவிட் 19 நெருக்கடியை இலங்கை எதிர்கொண்ட விதத்தைப் பாராட்டும் அதேவேளை, இலங்கையில் கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களைக் கையாண்ட விதம் எமது நாடுகளின் அவதானத்தை ஈர்த்துள்ளன. கொவிட் 19 இனால் இறந்த மூன்று முஸ்லிம்களுமே எரிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு 16 நாடுகளின் தூதுவர்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தனி நபர்களுக்கும் சமூகங்களுக்கும் தமது நம்பிக்கையின் அடிப்படையில் அடக்கம் செய்தலையோ தகனம் செய்தலையோ தெரிவு செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் போதுமான வழிகாட்டல்களை கவனமாக வழங்கியுள்ளது என்பதனை உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகளும் பொதுச் சுகாதார செயற்பாட்டாளர்களும், மருத்துவ அதிகாரிகளும் உறுதி்ப்படுத்துகின்றனர்.பொதுச் சுகாதார விடயங்களில் இந்த வழிகாட்டல்கள் முழுமையான அக்கறை எடுத்துள்ளன. உலக நாடுகளில் பன்டமிக்கின் போது இறந்தவர்களது மத நம்பிக்கையைக் கருத்திற் கொண்டும், இறந்த உடலுக்கான மரியாதையுடனும் புனிதத்துடனுமேயே இறந்தவர்களின் உடல்கள் காட்டப்படுகின்றன. இது முக்கியமான தலைவர்கள் மிகுந்த பொறுப்புடனும் தலைமைத்துவப்பண்புடனும் நடந்து கொள்ள வேண்டிய விடயமாகும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒருவரது மதத்துக்கிணங்க இறந்தவரது இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கான முடிவு, இடத்தையோ பௌதீகச் சூழலையோ (மண், நீர்) வைத்து உலகில் எங்குமே தீர்மானிக்கப்பட்டதில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில், ஓஐசி பல்வேறுபட்ட பௌதீக மற்றும் புவியியல் பின்னணிகளைக் கொண்ட உறுப்பு நாடுகளை பிரதிநிதிகளாகக் கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இஸ்லாம் அறிவுக்கும் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தும் அதேவேளை நெகிழ்வுத் தன்மையுடனும் இணங்கிச் செல்கிறது. இவை எதிலுமே அடக்கம் செய்தல் மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடம் மனவேதனையை ஏற்படுத்தும் என நாம் அஞ்சுகிறோம்.


எந்தவொரு வேறுபாட்டையும் மத நம்பிக்கையையும் பொருட்படுத்தாமல் இலங்கையுடனும் சமூகத்திலுள்ள அனைத்து ஆண் பெண்களுடனும் சகோதரத்துவப் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமே எங்களிடம் உள்ளது. இலங்கையின் எந்த உள்விவகாரங்களிலும் குறுக்கிடும் நோக்கம் எம்மிடம் இல்லை. இந்த விவகாரம் ஒரு பிரச்சினையாக எழக் கூடாது எனவும் பிற இடங்களில் வாழும் முஸ்லிம்களையும் இது சென்றடையக் கூடாது எனவும், இலங்கையின் அப்பழுக்கற்ற பன்மைத்துவமான அனைவரையும் உள்ளீர்க்கும் சுபீட்சமான நிலைப்பாடு உறுதி செய்யப்படும் எனவும் நாம் நம்புகிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தக் கடிதத்தில் ஓஐசியின் அங்கத்துவ நாடுகளான சவூதி அரேபியா, குவைத், ஓமான், பலஸ்தீன், இந்தோனேஷியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், துருக்கி, மாலைதீவு, பாகிஸ்தான், மலேஷியா, பங்களாதேஷ், லிபியா, ஈரான், ஈராக் நாடுகளின் இராஜதந்திரிகள் கையொப்பமிட்டுள்ளதோடு இதன் பிரதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி - மீள்பார்வை - 



No comments