வெளிநாட்டிலிருந்து எனது மகனை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக ஜனாதிபதியின் உதவியை நாடினேனா? மறுக்கின்றார் மகிந்த தேசப்பிரிய
🌐MADURAN KULI MEDIA🌐
07 05 2020
வெளிநாடொன்றில் கல்விகற்க்கும் தனது மகனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உதவியை தான் நாடியதாக தன்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.
தனது முகநூலில் அவர் இது தொடர்பான தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
தனது மகனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக தனது செல்வாக்கினை பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
நெதர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டிருந்த தனது மகன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து புறப்பட்ட விமானம் மூலம் இன்றுகாலை இலங்கை வந்துசேர்ந்துள்ளார் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது மகன் மேலதிகமாக ஒரு நாள் இங்கிலாந்தில் தங்கியிருந்தாலும் அவர் எதிர்கொள்ளக்கூடிய விசா நெருக்கடிகள் , மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்ட இராஜதந்திர அலுவலகங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர்,வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோரிற்கு தனது மகனின் ஆவணங்களை அனுப்பி உரிய விபரங்கள் குறித்து ஆராய்ந்ததாகவும் மகிந்த தேசப்பிரிய தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
எனது மகன் அனுப்பிய ஆவணங்களை, தொடர்புபட்ட அதிகாரிகளிற்கு அனுப்பி விபரங்களை பெற்றமை பிழையான விடயம் என மக்கள் கருதினால் எனது பதவியை இராஜினாமா செய்யவும் தயார் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
செய்தி ஆசிரியர்
S.M.M.SHAFAQ
No comments