Breaking News

கடமையுணர்வு - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

ரமழான் விட்டுச் சென்ற மற்றுமொர் அருள்தான் கடமையுணர்வாகும்

ரமழானில் எம்மை ஆட்கொண்டிருந்த கடமையுணர்வு அதிசயமானது. உலகமே தூங்கும் நேரத்தில் கண்விழித்து நீண்ட நேரம் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு உணவு உட்கொள்ளும் யோசனையே வராத நேரத்தில் உணவருந்தி, உட்கொள்ள வேண்டிய வேளைகள் அனைத்திலும் பசி காத்து, தாகித்திருந்து,  நாம் செய்த கடமைகள் எத்துணை பொறுமையை வேண்டி நின்றன. இருப்பினும் பொறுமை தவறாமல், நிலைகுலையாமல் கடமையுணர்வை சிரமேற்கொண்டு ரமழானின் இரவுகளிலும் பகல் பொழுதுகளில் நாம் செய்த நன்மைகளை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.

இந்தக் கடமையுணர்வை ரமழான் எடுத்துச் சென்று விட்டதா?அல்லது விட்டுச் சென்றுள்ளதா?

கடமையுணர்வு ரமழானிடம் இருக்கவில்லை. எங்களிடம் தான் இருந்தது. நாங்கள் ரமழானுக்கு பின்னும் உயிர் வாழ்கின்றோம். ஏன் அந்த கடமையுணர்வு எங்களை விட்டுச் செல்லவேண்டும்?

எமக்கு முன்னால் இருக்கும் கடமைகள் ஏராளம். நாம் உயிர் வாழும் காலமோ சொற்பம். அவ்வாறிருக்க கடமையுணர்வு இல்லாத வாழ்க்கையால் எப்படி எமது வாழ்வை நாம் அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும்? நாம் நிறைவேற்ற வேண்டிய குறைந்தபட்ச கடமைகள் கூட நிறைவேற்றப்படாத வாழ்க்கையையே எம்மில் பலர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ரமழான் எம்மிடையே வளர்த்து விட்டுச் செல்கின்ற கடமையுணர்வு ரமழானோடு முடிவடைந்தால் நாமும் எமது சமூகமும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கவே முடியாது. கடமையுணர்வு ரமழானில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ரமழான் ஒரு மறுமலர்ச்சிக் காலமாக இருப்பதை நாம் காண்கின்றோம். ரமழான் முடிவடைய அந்த மறுமலர்ச்சியும் எம்மை விட்டு விடைபெறுவதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?

✒️
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்



No comments