மஹிந்தவின் அழைப்பை நிராகரித்தது சஜித் அணி - ஜே.வி.பியும் புறக்கணிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளும் அடியோடு நிராகரித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் பங்கேற்காமைக்கான காரணங்களை விளக்கி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை வெளியிடும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு, கலைக்கப்பட்ட நாடாமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தூக்கியெறிந்துவிட்டு தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்ற இந்த வேளையில் அவரின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் நாம் கலந்துகொள்வது எப்படி? சபாநாயகரின் அழைப்புக்கிணங்க கூட்டம் நடந்தால் அதில் நாம் பங்கேற்பதில் நியாயம் இருக்கின்றது. எக்காரணம் கொண்டும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் நாம் பங்கேற்கமாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
விளையாட்டு நாடாளுமன்றில்
பங்கேற்கப் போவதில்லை
இதேவேளை, அலரி மாளிகையில் மே 4ஆம் திகதி விளையாட்டு நாடாளுமன்றமே கூட்டப்படுகின்றது எனவும், சட்டபூர்வமற்ற அத்தகைய விளையாட்டு நாடாளுமன்றத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அநுரகுமார மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கொரோனா வைரஸ் இலங்கையில் பரவ ஆரம்பித்த நாளன்றே, இது தேசியப் பிரச்சினையாகும். அரசால் மட்டும் இதனை கையாள முடியாது. அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய வகையில் பொது வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. அறிவித்திருந்தது. அத்தகைய பொறிமுறையில் பங்காளர்களாக இணைவதற்கு கட்சி உறுப்பினர்களும் தயாராகவே இருந்தனர். எனினும், பொதுவான வேலைத்திட்டத்தை உருவாக்காமல் அதிகார மோகத்தில் தன்னிச்சையான செயற்பாடுகளையே அரசு முன்னெடுத்தது.
தற்போது பிரதமருக்கு கட்சிகளின் யோசனைகள் தேவைப்படுகின்றதெனில் அதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவதற்கு நாம் தயார். ஆனால், 225 பேரையும் அலரிமாளிகைக்கு அழைத்து விளையாட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதால் நடக்கப்போவது என்ன? அதன்மூலம் எவ்வித பிரதிபலனும் கிடைக்காது.
நாட்டில் அரசமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒன்று கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக்கூட்டி அதற்கு தீர்வு காணவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலரிமாளிகையில் கூட்டம் நடத்துவதால் எதுவும் நடைபெறபோவதில்லை. அத்தகைய விளையாட்டு நாடாளுமன்றத்தில் நாம் பங்கேற்கமாட்டோம். இது பற்றி பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது" - என்றார்.
No comments