மஸ்ஜிதுல் அக்ஸா இடிக்கப்படுமா ? யூத தேவாலயம் கட்டப்படுமா ? யூதர்களின் பொக்கிஷம் எங்கே ?
பதினோராவது தொடர்............
யூதர்களுக்கு இரண்டு இலட்சியங்கள் இருந்தது. அது பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று யூத நாட்டினை உருவாக்குவதும், ஜெரூசலத்தில் மூன்றாவது சாலமன் தேவாலயத்தை கட்டுவதுமாகும்.
மனித வரலாற்றில் உலகில் அதிகமான படையெடுப்புக்களும், யுத்தங்களும் நடைபெற்ற இடமாக ஜெசூருசலம் என்று அறியப்படுகின்றது. அங்கு அமைந்துள்ளதுதான் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.
இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதன் மூலம் 1948 இல் முதலாவது இலட்சியத்தை அடைந்த யூதர்களால் ஏன் இரண்டாவது இலட்சியத்தினை இன்னும் அடைய முடியவில்லை ?
ஒரு நாட்டையே உருவாக்கியவர்களினால் தேவாலயம் ஒன்றை கட்டுவது பெரிய விடயமா என்று எங்களது மனதில் கேள்வி எழும்பக்கூடும்.
யூதர்களின் கோவிலான “சாலமன் தேவாலயம்” கி.மு 1000 ஆண்டு காலப்பகுதியில் முதன் முதலில் கட்டப்பட்டதாகவும், பின்பு பாபிலோனிய மன்னரால் அது இடிக்கப்பட்டதாகவும், மீண்டும் இரண்டாவது கோவில் கி.மு. 500 இல் கட்டப்பட்டதாகவும், அது மீண்டும் இயேசு கிறிஸ்து இறந்ததன் பின்பு ரோம் மன்னரால் இடிக்கப்பட்டதாகவும் யூதர்களின் வரலாறு கூறுகின்றது.
இன்றும் யூதர்கள் சுவரில் முட்டியவாறு வணக்க வழிபாடு செய்வதானது, இடிக்கப்பட்ட சாலமன் தேவாலயத்தின் எஞ்சிய சுவர் பகுதி என்று யூதர்கள் நம்புகின்றார்கள்.
சாலமன் என்பது சுலைமான் நபியை குறிக்கும். மஸ்ஜிதுல் அக்ஸாவை (பைத்துல் முகத்தஸ்) இப்ராஹீம் நபியின் பேரனான இஸ்ராயீல் என்று அழைக்கப்படுகின்ற எஹ்கூப் நபியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்பு சுலைமான் நபியின் தந்தையான தாவூத் நபியினால் கட்டப்பட்டு, இறுதியாக ஜின்களின் உதவியோடு சுலைமான் நபியினால் கட்டி முடிக்கப்பட்டது.
ரசூலுல்லாஹ்வின் மறைவுக்கு பின்பு இரண்டாவது ஹலீபா உமர் அவர்களினால் பாலஸ்தீன் பகுதி கைப்பேற்றப்பட்ட பின்பு சாலமன் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே அங்கு மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டிருப்பதாகவும், அதற்கு முன்பு அந்த பள்ளிவாசல் அங்கு இருக்கவில்லை என்றும் யூதர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் அதற்கு முன்பே, அதாவது ரசூலுல்லாஹ் மக்காவில் இருக்கும்போதே மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விண்ணுலக பயணம் செய்தாரென்று அல்-குர்ஆன் கூறுகின்றது.
அத்துடன் ஹலீபா உமர் அவர்கள் ஜெரூசலத்துக்கு சென்று அங்கு அவர் தொழுகை நடாத்திய இடத்தில் “மஸ்ஜிதுல் உமர்” என்னும் பள்ளிவாசல் வேறாக கட்டப்பட்டு உள்ளது.
மூன்றாவது முறையாக சாலமன் தேவாலயம் கட்டுவதற்கான வரைபடம் உற்பட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. இதனாலேயே இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அறிவிக்கப்படும் என்று அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம் அறிக்கை வெளியிட்டார்.
ஏன் இவ்வளவு தாமதமான அறிவிப்பு ? 1967 இல் ஜெரூசலத்தை கைப்பேற்றியபோதே அதனை கட்டி முடித்திருக்கலாமே ?
மூன்றாவது தடவையாக சாலமன் தேவாலயத்தை கட்டுவதற்கு இறைவனின் இறுதித்தூதர் “மஷியா” வருவார். தேவாலயத்துக்குள் வைக்கப்படயிருக்கின்ற இறைவனின் சந்நிதியான “ஆரன் ஹப்ரித்” தை அவர்தான் கண்டுபிடிப்பார் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பு.
கடவுளின் பொக்கிசமான தங்கத்திலாலான “ஆரன் ஹப்ரித்” என்னும் பெட்டியினுள் இறைவனின் சன்னிதி இருப்பதாக யூதர்கள் கூறுகின்றார்கள்.
அதாவது இந்தப்பெட்டியினுள் இறைவன் மோசேக்கு (மூஸா நபிக்கு) வழங்கிய பத்து கட்டளைகளும், செங்கோலும், இறைவன் வழங்கிய மண்ணா (மண்உசல்வா) என்னும் உணவும் அதனுள் இருப்பதாக நம்புகின்றார்கள்.
ஆனால் இந்த பொக்கிசத்தை கடந்த இரண்டாயிரம் வருடத்துக்கு மேலாக யாரும் கண்டதில்லை என்றும், குறிப்பாக இயேசு காலத்தில் வாழ்ந்தவர்களும் கண்டதில்லை என்றும் யூதர்களே கூறுகின்றார்கள்.
ஆனாலும் அந்த பொக்கிசத்துக்கு மேலேதான் “மஸ்ஜிதுல் அக்ஸா” ஹலீபா உமரினால் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடித்துவிட்டு அந்த பொக்கிஷம் இருக்கின்ற இடத்தில் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டும் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பு.
இங்கே தீவிர போக்குடைய யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை உடைத்துவிட்டு தேவாலயத்தை கட்ட வேண்டும் என்று நீண்ட காலங்களாக வலியுறுத்தி வருகின்றார்கள்.
ஆனால் தங்களது இறுதித்தூதர் “மஷியா” வந்து குறிப்பிட்ட பொக்கிசத்தை கண்டுபிடித்ததன் பின்பு தேவாலயத்தை கட்டலாம் என்று வலதுசாரி யூதர்கள் கூறுகின்றார்கள்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருப்பதனால், அப்பகுதி முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அதில் யூதர்கள் கூறுவதுபோன்று சாலமன் தேவாலயம் அங்கு கட்டப்பட்டிருந்ததற்கான எந்தவொரு சான்றுகளோ, ஆதாரமோ இல்லை.
யூதர்கள் விரும்புவது போன்று பலப்பிரயோகம் செய்யப்பட்டு மஸ்ஜிதுல் அக்ஸா உடைக்கப்பட்டால் இஸ்லாமிய நாடுகள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளும் ? உடைக்க முன்பு அதனை தடுக்குமா ? அல்லது உடைத்த பின்பு கண்டன அறிக்கைகள் மட்டும்தானா ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்..............................
No comments