Breaking News

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால்,பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்பாளருமான நிஷாரா ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


குறித்த மனுக்கள் நேற்றைய தினம் ஆறாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.


இதற்கமைய, எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் ஏழாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.


இந்த அடிப்படை உரிமை மீறல்மனுக்கள் மீதான பரிசீலனை நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


எவ்வாறாயினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நாட்டில் தற்போது இல்லையென தமது சட்டத்தரணியூடாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments