இன ரீதியான சிறுபான்மை கட்சிகள் ஏன் தேவை? - முன்னாள் அமைச்சர் மணோ கனேசன்.
அரசியலில் வளர்ந்து வர கனவு காணும் தமிழ், முஸ்லிம் புதிய தலைமுறைக்கு ஒரு அறிவுரை
- முன்னாள் அமைச்சர் மணோ கனேசன்.
சமீபத்தில் எனது நண்பரான ஒரு சிங்கள அரசியல் தலைவர் எங்களை, எங்கள் கட்சிகளை கலைத்து விட்டு, நேரடியாக தமது பெரும்பான்மை கட்சியில் “இணைய முடியாதா?” என கேட்டார்.
“இல்லை, இப்படியே கூட்டணியாக இருப்போம். அரசியல் நண்பர்களாக இருப்போம். சேர்ந்து போராடுவோம். ஆனால், நேரடியாக இணைய முடியாது” என கூறி அதற்கான காரணத்தையும் கூறினேன். சிந்திக்க தெரிந்த அவர் உடனடியாக புரிந்துக்கொண்டார்.
இதேபோல், 2010ம் வருட ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின், ரணில் விக்கிரமசிங்க, என்னையும், ரவுப் ஹக்கீமையும் நேரடியாக ஐக்கிய தேசிய கட்சியில் இணையுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்.
நானும், ரவுப்பும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். ரவுப், “இட் இஸ் பொலிடிகல் சுய்சைட்” (அது அரசியல் தற்கொலை) என்று சொன்னது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
அதன்பின் ரணில் ஒருபோதும் இது பற்றி எம்மிடம் பேசவே இல்லை.
ஏன் சிறுபான்மை கட்சிகள் தம் இன, மத பெயர்களில் உருவாகின்றன? விடை ரொம்ப சிம்பிள்.
இந்நாட்டில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகள் எல்லாமே பெயரில் “தேசிய, ஸ்ரீலங்கா” என்று போட்டுக்கொண்டாலும் கூட, நடைமுறையில் சிங்கள தேசியவாத கட்சிகளாகவே இருக்கின்றன.
ஆகவே எங்களை பாதுகாத்துக்கொள்ள நாம் இனரீதியாக அணி திரள வேண்டியுள்ளது. அதற்குள், தமிழருக்கு நியாயம் வழங்க வேண்டும் என எண்ணும், முற்போக்கான பெரும்பான்மையினரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், தலைமை எம்மிடம் இருக்க வேண்டும்.
இது அந்த பிரபல தமிழ் சினிமா வசனம் மாதிரிதான். அது என்ன?
“அவர்களை நிறுத்த சொல்லுங்கள். நானும் நிறுத்தறேன்.” என்பது போல், தங்கள் இனத்தை-மதத்தை முன்னிலை படுத்துவதை நிறுத்த, அவர்களுக்கு சொல்லுங்கள். நானும் நிறுத்துகிறேன்.
அப்படி நடந்தால், எனது கட்சியை கலைத்து விட்டு வருகிறேன். அப்புறம் எல்லோருமாக சேர்ந்து “இலங்கையர்” என்பதை முன்னிலை படுத்துவோம்.
தேசிய கூட்டணியாக இருப்போம் ஆனால், நேரடியாக இணைய மாட்டோம். இதனால்தானே, இன்று தேசிய அரங்கத்தில், “கட்சி தலைவர்கள்” என்ற அந்தஸ்து எங்களுக்கு கிடைக்கிறது. அது நமது இனங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்து.
ஒரு பெரும்பான்மை கட்சி, எவ்வளவு பெரீய..., தேசீய...., கட்சியாகவும் இருக்கலாம். ஆனால், அதில் நாம் போய் இணைந்துக்கொண்டால், பின்வரிசை, கடைசி வரிசையில்தான் அமர வேண்டும்.
ஒருவேளை இப்போது நான் இன்று போனால், எனக்கு முன்வரிசையில் ஓர் ஓரமாக இடம் கொடுப்பார்கள்.
வேறு யாரும் புதியவர் போனால், பின்வரிசை அல்ல, உட்காரவே இடம் கிடைக்காது. நின்றுக்கொண்டு சாமரம்தான் வீச வேண்டும். அவ்வளவுதான்.
அரசியலில் வளர்ந்து வர கனவு காணும் புதிய தலைமுறை தமிழர்கள்’, முஸ்லிம்கள் எனது இந்த அறிவுரையை மனதில் தெளிவாக இருத்திக்கொள்ளனும்.
ஒரே வீச்சிலேயே பிரதேச சபைக்கு போய், நகரசபைக்கு போய், மாநகரசபைக்கு போய், மாகாணசபைக்கு போய், பாராளுமன்றத்துக்கு போய், அமைச்சரவைக்கும் போக அலையாதீர்கள்.
பொறுமையாக இருந்தால், பதவி தேடி வரும். நான், 2001ல் பாராளுமன்றம் போய் 2015ல் தான், அமைச்சர் ஆனேன்..!
முரண்பாடு வந்தால், உங்கள் கட்சிகளிலேயே இருந்து போராடுங்கள். இல்லாவிட்டால், வெளியே போய் புது கட்சி ஆரம்பியுங்கள். ஒரு கட்சி நடத்துவது எத்துனை கஷ்டமான காரியம் என அப்போது தெரியும்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளில் இருந்து விலகி போய் பெரும்பான்மை கட்சிகளில் நேரடியாக சேர்ந்துகொண்டவர்கள்தான், இந்த விஷயத்தில் பெரும் சமூக “கோமாளிகள்”.
இவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
தம்மை இன உணர்வாளர்கள், சமூக உணர்வாளர்கள் என்றும், உயிரை தமிழுக்கும், உடலை தமிழ் மண்ணுக்கும் கொடுப்போம் என்றும் வாய்கிழிய பேசிவிட்டு, பின்னர் தம்மை 180 பாகை அடியோடு மாற்றிக்கொண்ட வெட்கமில்லாதவர்கள், இவர்கள்..!
உள்ளே சென்று காரணத்தை தேடிப்பார்த்தால்தான் உண்மை விளங்கும். எல்லாம், பணம்..., காசு..., துட்டு...,தான்.
தமது வயிறு வளர்க்க பணம் வாங்கிக்கொண்டு நிறம் மாறுகின்றவர்கள். இங்கே இருக்கும் போது சொந்த இனத்தை, மொழியை, கட்சியை, தலைவனை, பற்றி பேசிய, எழுதிய எல்லாமே பொய் என இவர்களின் மிக குறுகிய வரலாறு அடையாளம் காட்டும்.
இப்படியே போனால், நாளை தம் சொந்த குடும்பத்தையே விலை பேசி விற்பவர்களான இத்தகைய நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டுக்கொள்ளும் தகைமையையும் புதிய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்.
No comments