Breaking News

குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய, வைத்தியர் சரத் வீரபண்டாரவிற்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குருணாகல் போதனா வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பினால் நேற்று (13) இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.


சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை ஏற்க மறுத்ததோடு, பிரதி பணிப்பாளருக்கு பதவியை பொறுப்பேற்காது தடுத்தமை காரணமாக, அவரை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக வைத்தியசாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலை பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கிய கடிதத்திற்கு அமைய செயற்படுமாறும், ஒழுக்க விசாரணைக்கு முகம் கொடுக்குமாறும், போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.


உரிய சுகாதார வசதிகள் இன்மை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார, கடந்த 06 ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


இருப்பினும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் சட்டத்திற்கு முரணானது என மறுத்து, அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் தனக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, நேற்று (13) காலை சரத் வீரபண்டார பணிக்கு திரும்பியுள்ளார்.


இதனைத் தொடர்ந்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரது அறைக்கு மேலதிகமாக ஒரு பூட்டை இட்டு மூடியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு கடிதமொன்றின் ஊடாக தெரிவித்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், உரிய காரணத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்காமை காரணமாகவே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அறிவித்து, குறித்த இடமாற்றத்தை வழங்குவதோடு, உரிய விசாரணைகளையும் முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளது.


அத்துடன், தற்போதுள்ள நிலை காரணமாக கொவிட்-19 நோயாளர்களை மற்றுமொரு வைத்தியசாலைக்கு மாற்றுமாறும், மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


மருத்துவர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய முறைப்பாடுகள், சரத் வீரபண்டாரவின் நிர்வாகத்தின்போதே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments