Breaking News

புத்தாடையும் புது வாழ்வும் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

ரமழான் விட்டுச் சென்ற அருள்களில் முதன்மையானது 'தக்வா' எனும் இறையுணர்வாகும். 

நான் அல்லாஹ்வுடன் இருக்கிறேன், அவன் என்னை அவதானித்துக் கொண்டிருக்கிறான் (முராகபா), நான் அவனை சார்ந்திருக்கிறேன் (தவக்குல்), அவனது ரஹ்மத்தில் ஆதரவு வைத்தவனாக (ரஜாஉ), அவனது தண்டனைகளை பயந்தவனாக (கவ்ப்), அவனது ஏற்பாடுகளை பொருந்தி கொண்டவனாக (ரிழா), அவனது  பேராற்றலை வியந்தவனாக, அவனது உதவியை நாடியவனாக, அவனது மன்னிப்பை யாசித்தவனாக நான் வாழ்கின்றேன் என்ற உணர்வுகள் ரமழான் நம்மிடையே விட்டுச் சென்ற உன்னதமான அருள்களாகும்.

'தக்வா' சார்ந்த இந்த இறையுணர்வுகளை புத்தாடை அணியும் வேளையில் நாம் ஒருமுறை மீட்டிப் பார்க்க வேண்டும். ரமழானில் ஒரு மாத காலமாக இரவும் பகலும் தொடர்ந்து எம்மை ஆக்கிரமித்திருந்த இந்த உணர்வுகளை ரமழான் எடுத்துச் சென்று விடவில்லை; விட்டே சென்றிருக்கின்றது. நாம் தாம் அவற்றை தொடர்ந்து எம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை, நாம் அவற்றை மற்றோர் ஆடையாக அணிந்து கொள்ளலாம்.

ரமழான் அணிவித்த இந்த ஆடையை கழற்றி விட்டு பெருநாளுக்காக நாம் புத்தாடை அணிந்திருந்தால் அது எமக்கு புது வாழ்வு தர மாட்டாது. புத்தாடை ஒரு நாள் கந்தலாகி விடும். தக்வா எனும் ஆடை என்றும் எமது வாழ்வை பொலிவுடன் வைத்திருக்கும்.





No comments