Breaking News

ரமலானில் கற்ற பாடங்களும், படிப்பினைகளும்

கண்ணியத்திற்குரிய அனைவருக்கும்... அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வானாக !

சோதனை நிறைந்த காலத்தில் அல்லாஹ் இந்த ரமலானை அடைய செய்தான். வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில், ரமலானை அடைந்த நாம், நிறைய பாடங்களையும், படிப்பினைகளையும் கற்றுக் கொண்டோம். அல்ஹம்து லில்லாஹ் !

உபதேசம் செய்யுங்கள், நிச்சயமாக இந்த உபதேசம் முஃமின்களுக்கு பயன் தரும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

(1) ரமலான் காலத்தில் ஒரு மாத காலம் தொடராக நோன்பு நோற்றோம். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் திங்கட் கிழமையும், வியாழக் கிழமையும் தொடராக நோன்பு நோற்க்கும் பழக்கத்தை குடும்பத்தோடு நடைமுறைப் படுத்துவோம்.
வேலைக்கு போகிறேன் என்ற காரணத்தை காட்டி, சுன்னத்தான இந்த நோன்பை அலச்சியம் செய்து விடாதீர்கள்.

(2) இந்த ஷவ்வால் மாதம் முடிவடைவதற்குள் 
ஆறு நோன்புகளையும் நோற்று, வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்.

(3)பர்ளான தொழுகைகளையும்,
சுன்னத்தான தொழுகைகளையும் உரிய
நேரத்தில் தொடராக தொழும் பழக்கத்தை
அமைத்துக் கொள்வோம்.

(4)ஒவ்வொரு நாளும் காலையில் ளுஹா தொழுகையை தொடராக தொழும் பழக்கத்தை அமைத்துக் கொள்வோம். வேலைக்கு போகிறேன் என்ற காரணத்தை காட்டி, ளுஹா தொழுகையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

(5)இரவு தொழுகை விசயத்தில் அதிக முக்கியத்தும் கொடுங்கள். கடைசி இரவில் எழ முடியாது என்ற உரிய காரணம் உள்ளவர்கள், இஷா தொழுகையை தொழுது விட்டு, தூங்குவதற்கு முன் வித்ராக தொழுது விட்டு, தூங்க செல்லுங்கள். ஏனையவர்கள் கடைசி இரவில் எழுந்து தொழும் பழக்கத்தை  தொடராக அமைத்துக் கொள்ளுங்கள்.

(6)காலை, மாலை செய்யக் கூடிய திக்ர்களை தினந்தோறும் சொல்லக் கூடிய பழக்கத்தை தொடராக அமைத்துக் கொள்ளுங்கள்.

(7)எல்லா சந்தர்ப்பங்களிலும்  அல்லாஹ்வை நினைவூட்டும் திக்ர்களை சொல்லிக் கொள்ளும் பழக்கத்தை தொடராக அமைத்துக் கொள்வோம்.

(8)நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லும் பழக்கத்தை அமைத்துக் கொள்வோம்.

(9)இரவில் தூங்கும் முன், நபியவர்கள் வழிக்  காட்டிய அனைத்து அமல்களையும் செய்து விட்டு தூங்கும் பழக்கத்தை தொடராக அமைத்துக் கொள்வோம்.

(10)முழு குர்ஆனையும் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மாறி, மாறி தொடராக ஓதி முடிக்கும் பழக்கதத்தை அமைத்துக் கொள்வோம்.

(11)மன்னிப்போம், மறப்போம் என்ற சிறந்த குணத்தால் சொந்தம், பந்தம், உற்றார், உறவினர்களோடும், பக்கத்து வீட்டார், ஏனைய நண்பர்களோடும், சுமூகமான உறவுகளை பேணி நடந்து கொள்வோம்.

(12)குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள், மாறி, மாறி சந்தோசங்களை வெளிப் படுத்தி இரக்கத்தோடு நடந்து கொள்வோம்.

(13)கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விற்காக அவரவர்கள் தகுதி கேட்ப  ஸதகாக்களை கொடுக்கும் பழக்கத்தை அமைத்துக் கொள்வோம்.

(14) இந்த உலகத்தில் எந்த செல்வமும், எந்த பதவியும், எந்த ஆட்சி, அதிகாரமும்  அவசரத்திற்கு பயன் தராது என்பதை அல்லாஹ் நேரடியாக காட்டி விட்டான், எனவே பயன் தரக் கூடிய மறுமைக்காக எங்களை தயார் செய்துக் கொள்வோம்.

(15) உறவுகள் என்பது இந்த உலகத்தோடு முடிவடைவது கிடையாது, மறுமை நாளில் அல்லாஹ்வின் அருளைப் பெற்று, குடும்பம் என்ற தனது உறவுகளோடு சுவனம் செல்ல, இந்த உலகத்தை சரியாக பயன் படுத்திக் கொள்வோமாக !

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்





No comments