உம்மாவை எரியூட்டுவதற்காக பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தை பெற்றார்கள்..!
கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய கணவருக்கோ அல்லது ஜனாஸா தொழுகையில் பங்கேற்கவோ அனுமதியளிக்கப்படவில்லை என வபாத்தானவரின் மகன் சப்ரின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், மேலும் குறிப்பிட்டதாவது,
இன்று வபாத்தான எனது உம்மாவை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன், அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும் அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தை பெற்றார்கள்.
எனது உம்மாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.
எனினும் எனது உம்மாவின் ஜனாஸாவை பார்வையிடவோ அல்லது அவருக்காக தொழுகை நடத்தவோ எனது வாப்பாவை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.
இது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்து உள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்கு காட்டாமையும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காமையும் நியாயமா..?
இந்த புனித ரமழான் காலத்தில் உங்கள் பிரார்த்தனையில் எங்கள் உம்மாவையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
No comments