Breaking News

மரணித்தவரை எரித்தல் பற்றியதொரு அபிப்பிராயம் - உஸ்தாத் எம்.ஏ.எம் மன்சூர்

மையத்தோடு சம்பந்தப்பட்டதொரு பிரச்சினை பரவலாக பேசப்படுகிறது. மையத்தை எரிக்க முடியுமா? என்பது இன்றைய சூழலில் ஒரு சர்ச்சையாக மாறியிருப்பதன் காரணமாக சில அபிப்பிராயங்களை கீழே  முன்வைக்கிறோம்.  
மையத்தை குளிப்பாட்ட வேண்டும், கபனிட வேண்டும், தொழுவிக்க வேண்டும், அடக்க வேண்டும் என்ற நான்கு கடமைகளை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது இறந்த மையத்துக்கான கடமையல்ல. மாற்றமாக, உயிரோடிருக்கும் முஸ்லிம்கள் மையத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். இது ஒரு பர்ளு கிபாயா. அதாவது ஒரு சமூக கடமை எனலாம். இறந்தவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அல்லாஹ் இறந்தவருக்கும் மனித சமூகத்துக்கும் கண்ட நலன்கள் ஆகும். 

இந்நான்கு கடமைகளில் ஏதாவதொன்றை விட வேண்டுமாக இருந்தால் நிர்ப்பந்த சூழலொன்று காணப்பட வேண்டும். நிர்ப்பந்த சூழலில் தடுக்கப்பட்டது அனுமதிக்கப்படுகிறது என்பது இஸ்லாமிய சட்ட விதியாகும். 'நிர்ப்பந்தம் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்' என்ற சட்ட விதியை இமாம்கள் வகுத்திருக்கிறார்கள். பல அல்குர்ஆன் வசனங்கள் இதற்கு அடிப்படையாக அமைகின்றன. சூறா பகராவில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: யார் ஒருவர் அனுமதிக்கப்படாத ஒன்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்துக்கு உட்படுபவராக இருந்தால் அவர் அதனை விரும்பாமலும் அத்துமீறாமலும் சாப்பிட்டால் அவர் மீது குற்றமாக மாட்டாது".  இது போன்ற வசனங்கள் அல்குர்ஆனில் இன்னும் சில இடங்களிலும் வந்துள்ளன. இப்பின்னணியில்தான் அனுமதிக்கப்படாதவை நிர்ப்பந்த சூழலில் அனுமதிக்கப்படும் என்ற முடிவுக்கு சட்ட அறிஞர்கள் வருகின்றனர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போது தோன்றியிருக்கும் பிரச்சினையையும் நாம் நோக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் காரணமாக மரணித்தவரை எரிப்பதுதான் ஒரே வழி என மருத்துவ நிபுணர்கள் கருதுவார்களாக இருந்தால் அது நிர்ப்பந்த நிலை ஆகும். ஏனெனில் உயிரோடிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்கு மரணிக்கின்ற சில மனிதர்களை எரிப்பது நிர்ப்பந்தமாக மாறுகிறது. மருத்துவ நிபுனர்கள்தான் இது பற்றி கருத்து சொல்ல வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ள மருத்துவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். இதன் பின்னர்தான் உலமாக்கள் பேச முடியும். நிர்ப்பந்தமா?, இல்லையா? என்ற பகுதியை உலமாக்களால் தீர்மானிக்க முடியாது. அது மருத்துவம் சம்பந்தப்பட்ட பகுதி. பின்னர்தான் உலமாக்களால் அபிப்பிராயம் தெரிவிக்க முடியும். இது ஒரு பக்கம்.

இவ்விவகாரத்தை அணுக இன்னொரு பக்கமும் உள்ளது.  நாம் சிறுபான்மையாக வாழ்வதன் காரணமாக வேறு நிர்ப்பந்தங்கள் காணப்படுகின்றனவா? என்று சமூகம் சார்ந்த அறிவுள்ளவர்கள், சட்ட நிபுணர்கள், மருத்துவத் துறை அறிஞர்கள், உலமாக்கள், சமூகவியல் துறை சார்ந்தவர்கள், அரசியல் தலைமைகள்  என பலரும் இணைந்து, கலந்துரையாடி, ஆய்வு செய்து ஒரு முடிவைச் சொல்ல வேண்டும்.  

நிர்ப்பந்த சூழல் எதுவும் கிடையாது எனக் காணும் போது அரசியல் தலைமைகளும் சட்ட வல்லுனர்களும் உலமாக்களும் இணைந்து அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசிடம் கேட்டுப் பார்க்க முடியும். ஆரோக்கியமானதொரு உரையாடலை மேற்கொள்ளலாம். அரசு ஏதாவதொரு காரணத்தால் அதற்கான அனுமதியை தராவிட்டால்  முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு இத்துடன் முடிவடைந்து விடுகிறது. இக்கட்டத்தில் நாம் எதுவும் செய்ய முடியாதவர்களாக மாறிவிடுகிறோம். 'அல்லாஹ் ஒரு மனிதனின் மீது அவனது சக்திக்கு அப்பாற்பட்ட பொறுப்புக்களை சுமத்துவதில்லை' என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  

முஸ்லிம் பொதுமக்களாகிய நாம்  உணர்ச்சிபூர்வமாக இவ்விவகாரத்தை அணுகாமல் துறை சார்ந்தவர்களிடம் கொடுத்து விடுவோம். இறந்து போனவருக்கு இதனால் எவ்வித பாதிப்பும் வருவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு நாம் எழுதுவதனாலோ சத்தமிடுவதனாலோ எந்த ஆரோக்கியமான தீர்வும் வரப் போவதில்லை. அது சில வேளைகளில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். முடிவெடுக்கும் பொறுப்பை முஸ்லிம்களின் பல்வேறு துறைசார் தலைமைகளுக்கும்  நாங்கள் விட்டு விடுவோம். அதற்கு அப்பால் அல்லாஹ் எமக்கு எந்த பொறுப்பையும் சுமத்துவதில்லை. இந்தியா மற்றும் இன்னும் பல நாடுகளில் மரணித்தவரை அடக்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.  இவ்வகையான சூழலையெல்லாம் அவதானித்து முஸ்லிம் தலைமைகள் நல்லதொரு முடிவுக்கு வந்து, அரசோடு பேசி ஏதோவொரு முடிவைத் தர முடியுமான சூழல் இருக்கிறது. 
முஸ்லிம் பொதுமக்கள் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஈடுபடுவது  ஆரோக்கியமானதல்ல என்பதனைத்தான்  நம் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினையை நாம் மேற்கூறிய வகையில் அணுகுவது ஆரோக்கியமானது என்பது எமது சொந்த அபிப்பிராயமாகும்.    

(உஸ்தாத் மன்சூருடைய குரல் பதிவை ஷெய்க் ரிஷாட் நஜிமுடீன் எழுத்துருப்படுத்தியுள்ளார் என்பதை கருத்திற் கொள்க) copy 



No comments