Breaking News

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம்

மேற்படி விடயம் தொடர்பாக கொரோனாவுக்கு முன்னரே, நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கும் முன்னர் பதிவிடுவதற்கு நினைத்திருந்தேன், முடியாமல் போய்விட்டது, ஆனால் இதை எழுதாமல் விட்டால் நான் எனது சமூகப் பொறுப்பில் இருந்து தவறியவனாகி விடுவேன் என்று உணர்கின்ற காரணத்தால் யார் என்னை தூற்றினாலும் கவலையில்லை எனும் நிலையில் இருந்து பதிவிடுகிறேன்,

இன்றைய கால கட்டத்தில் மட்டுமல்லாது, கடந்த ஐம்பது வருடங்களாக முஸ்லீம் சமூகம் தனக்குரிய தலைமைத்துவம் இல்லாது தடுமாறுகிறது, அதற்கு முன்னர் இருந்ததா என்றால் அதை நான் அறியேன், இந்தியாவில் ஒரு காயிதே மில்லத் போன்று, ஒரு முஹம்மதலி ஜின்னாஹ் போன்று இலங்கையில் இருந்தார்களா என்ற கேள்வி எனக்குள் இன்னும் இருக்கிறது, டாக்டர் ஜாயா, சேர், ராசிக் பரீட், வாப்புச்சி மரிக்கார், டாக்டர் கலீல், ஏ, எம், உவைஸ் என்றெல்லாம் கேள்விப்படுகிறேன், ஆனால் கண்டதில்லை,

அதன் பின்னர் தேசியக் கட்சிகள் எங்கள் தலைவர்களை அடையாளம் காட்டின, டாக்டர், பதியுதீன் மஹ்மூத், பாக்கீர் மாக்கார், அலவி மௌலானா, எம், எச், மொஹமட். . பௌசி  என்றெல்லாம் தலைவர்கள் வந்தார்கள். இடையில் ஒரு புயலாக முஸ்லீம் காங்கிரஸ் எனும் கொடியுடன் தலைவர் அஷ்ரப் வந்தார், நான் அறிய அவர் மட்டுமே தானாக ஒரு தலைவனாக உருவெடுத்தவர். ஆனால் அவர் உயிரோடு இருக்கும் வரை ஏனைய  உருவாக்கப்பட்ட தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏன் இன்று அவர் உருவாக்கிய கட்சியில் இருப்பவர்கள் சிலர் கூட அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் மறைந்த பின் அவரை விட தலைவர் இல்லை என்பது போன்ற அறிக்கைகளுக்கும் குறைவில்லை,

அதன் பின்னர் தான் மிகவும் இக்கட்டான கால கட்டம் உருவாகிறது, தலைமைத்துவத்துக்கு மிக்க அவசியம் ஏற்பட்ட ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம், இப்போது நாம் கேட்கின்ற கேள்வி யார் எம் தலைவன், ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது யார், எவரும் இல்லாத குறைதனை நாம் நேரடியாக காண்கிறோம், அதன் விளைவுகளை அனுபவிக்கிறோம்,

இருக்கின்ற ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்க்க மனம் தூண்டுகிறது, ரவூப் ஹக்கீமா, ரிஷாட் பதியுதீனா, அதாவுல்லாவா, ஹிஸ்புல்லாவா, பௌசியா, அல்லது  ஏனையோர் தேசியத் தலைவர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்களா?  

ஆனால் இவர்கள் எல்லோருமே ஒரு வகையில் தங்களது தலைமைத்துவ தகுதிகளை இழந்து நிற்கின்றனர், ஏனைய தேசியக் கட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட யாரும் சோபிக்காத நிலையில், தானாக தோன்றிய தலைவர்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம், 

அதாவுல்லா இன்னும் தேசிய தலைவர் என்கின்ற நிலைக்கு தன்னை வளர்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார் என்பது வெள்ளிடைமலை, ஹிஸ்புல்லா கூட ஒரு பிரதேசத்துடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு தன்னையே காக்க வேண்டிய சங்கடமான நிலையில் மூழ்கிப்போனபின் இரண்டு பேர் மட்டுமே எஞ்சுகின்றனர், இவர்களில் யார் தேறுவது? அப்படி யாரோ ஒருவர் தேறுவாராக இருப்பின் அவருக்கு முழு முஸ்லீம் சமுதாயமும் தன்னுடைய ஆதரவை எந்தவித நிபந்தனையும் இன்றி வழங்குவது தான் இன்றைய தேவையாக இருக்கிறது,

இருபது லட்சத்துக்கு மேற்பட்ட ஈமான் கொண்ட மக்கள் சமுதாயம் என்பது பத்து லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வங்கியை கொண்டது, அது சிறிய சிறிய விடயங்களில் பிணங்கிக் கொண்டு பிரிந்து கிடப்பதால் யார் பயனடைகின்றார்கள் என்பதை கற்றறிந்த சமூகம் மிக்க மனவேதனையோடு அவதானிக்கின்றது, சில வேளைகளில் அந்த வேதனை சமூக ஊடங்கங்களில் வெளிப்படுகின்றது, ஆகவே எங்கே பிழை ஏற்பட்டது என்று ஆராய வேண்டிய பொறுப்பு இவற்றை அலசக்கூடிய உலக அரசியல், பிராந்திய அரசியல், தேசிய அரசியல், பிரதேச அரசியல் என்று எல்லாவற்றிலும் அறிவும் ஆராயும் திறனும் கொண்ட ஒரு சிலபேரது கடமையாகி விடுகின்றது, இதற்கான விடையை தேடி கண்டடைந்து சமூகத்தின் முன் வைக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வந்து விடுகின்றது,

அந்த வகையில் கடைசியில் எஞ்சிய இரண்டு அரசியல் தலைவர்களின் தகுதி, திறமை, மக்கள் செல்வாக்கு, பலவீனம், சறுக்கல்கள் என்று பல தலைப்புக்களில் அவர்களை ஆராய்ந்து மக்களிடம் அவர்க்ளின் பொறுப்பு என்ன என்று முடிவெடுக்கும் வாய்ப்பினை நாம் வழங்க வேண்டும்,
தகுதியை எடுக்கும் பொழுது இருவருக்கும் தகுதியுண்டு, திறமை என்றால் அது ரவூப் ஹக்கீமிடம் மட்டுமே உண்டு என்பது ஒரு பக்கச் சார்பான முடிவல்ல, மொழிவளம், பேச்சு திறமை, சர்வ தேச அங்கீகாரம், நிதானமான போக்கு, சட்டத்துறை சார்ந்த அறிவும், சகல துறை சார்ந்த அறிமுகங்களும் ஆற்றல்களும் இன்னும் பலப்பல, அதை விட ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாமை, அதிகார துஸ்பிரயோகம் குறித்த வதந்திகள் கூட இல்லாமை போன்றவையும் முக்கியமானவை, அதன் காரணமாக பெரும்பான்மையினர் மத்தியில் ஒப்பீட்டளவில் குறிவைக்கப்படாத நிலை, 

அண்மைய அறிக்கை அதற்கான மறுதாக்கம் தவிர வேறு சிக்கல்களை சந்திக்காத ஹக்கீம் அவர்கள் சிறிது உயர்ந்து நிற்பது கண்கூடு, இப்படிச் சொல்வதன் மூலமாக அவரிடம் குறைபாடுகள் இல்லை என்று அர்த்தமில்லை, அவற்றினை பின்னர் ஆராயலாம், தனிப்பட்ட முறையில் என்னுடைய தொழில் ரீதியான பல பின்னடைவுகளுக்கு காரணமான ஹரிஸ் போன்றவர் இவரிடமே இருந்தும் கண்டும் காணாது இருந்த இவரிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு வழக்கு இருக்கிறது, ஆனால் சமூகம் என்ற முறையில் அவற்றினை ஒதுக்கி விட்டு வழக்காட வேண்டிய நிலையில் நான் உள்ளேன்,

அவரது பலவீனமாக அவர் மீது முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு பதில் தராமலே அவற்றை அலட்சியம் செய்துள்ளார், அவருக்கென ஒரு பலமான தளம் இல்லாமை, அவரது எந்த உறுப்பினருமோ நம்பிக்கைக்கு பாத்திரமானவராய் இல்லாதிருப்பது, (இது இருவருக்கும் பொருந்தும் - அதாவது பதவியைத் தேடி பறக்கின்ற சுபாவம்) அதே மனோநிலையில் இருக்கின்ற மற்றும் செயற்படுகின்ற பிரதேச அரசியல் தலைமைகள்.

றிசாட் பதியுதீனின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படாத நிலையில் எதனை நான் குறிப்பிடுவது என்று தெரியவில்லை, அவர் ஒரு பொறியியலாளர் என்பதை தவிர அவரது வேறு திறமைகள் வெளிப்படவில்லை. அவரைப் பற்றி விக்கிபீடியாவில் தேடிய பொழுது வருகின்ற விடயத்தை நாகரீகம் கருதி தவிர்க்கின்றேன்,

இந்த நிலைமையை முறியடிப்பதற்கு அவர் என்ன செய்தாரோ தெரியாது, ஆனால் இந்தப் பதிவு அவருக்கோ அல்லது அவர் சார்ந்த சமூகத்துக்கோ நல்லதல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம், அவர் தன்னுடைய இமேஜை மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறையவே உழைக்க வேண்டி இருக்கிறது,

இந்த நிலையில் இறுதியில் எஞ்சுகின்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கு எமது சமூகம் தங்களது ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கவில்லையானால் அது ரவூப் ஹக்கீமுக்கு எந்தவித நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை, ஏனென்றால் அவர் ஏற்கனவே பணக்காரர், உழைப்பு பெரிய விடயமல்ல, புகழ் இனிமேல்தான் கிடைக்க வேண்டும் என்றில்லை, பதவிகள் எத்தனையோ அலங்கரித்தாயிற்று, பாராளுமன்றம் பலஆண்டுகள் கழித்த இடமாயிற்று, 

ஆனால் ஒன்றேயொன்று, இன்னும் எஞ்சியிருப்பது, வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் ஒட்டியிருந்து விட வேண்டும் என்ற நப்ஸின் கோரிக்கை மட்டுமே, இல்லையென்றால் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்த இரண்டு தலைவர்களுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட தடையாய் இருந்தது எது? யாரிடமும் ஒழுக்கமும் மார்க்கப் பற்றும், தகுதியும் திறமையும் மிக்க உறுப்பினர்கள் இல்லை, தங்கள் பின்னால் எத்தனை பொம்மைகள் இருக்கின்றன என்று கணக்கிட்டு என்னிடம் எண்ணிக்கை அதிகம் உண்டு என்று அடுத்து வருகின்ற அரசு மூன்றில் இரண்டுக்காக தடுமாறும் பொழுது, கணக்குக் காட்டி அதிகாரம் மிக்க பதவியைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறென்ன பிரச்சினை இருக்கப் போகிறது, பிணக்கு வருகின்ற ஒரேயிடம் அதுதான், பேசுகின்ற பொழுது சமூகம் பற்றியோ, நாம் எதிர்நோக்க விருக்கின்ற சவால்கள் பற்றிய  அக்கறையோ , அல்லது அவற்றின் அபாயம் பற்றிய எதிர்வுகூறலோ இருக்குமானால் ஒன்றாக சேர்வதற்கு எது தடையாக இருக்கப் போகிறது,

இருவருக்குமே அந்த சமூகப் பொறுப்பு இல்லாமல் போனதன் விளைவு எம்மை வைத்துப் பந்தாடுவதற்கு ஏனையோருக்கு வசதியாகி விட்டது, இந்த நிலையில் இருக்கின்ற ஒரேயொரு தகுதியான தலைமையையும் நிலைகுலைய வைக்கும் படியான அசிங்கமான விமர்சனங்களும், அதற்கான பின்னூட்டங்களும் சமூக வலைத்தளங்களில் விரவிக் கிடக்கின்ற காரணத்தால் சமூகம் இன்னும் பின்னடைவையே சந்திக்கும் என்பது என் எதிர்வு கூறல், 

எமது நல்ல காலமோ, அல்லது இந்த தலைவர்களின் தாங்கும் சக்தியோ இவர்களாவது எங்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றார்களே என்று ஆறுதல் அடைய வேண்டி உள்ளது, குரல் கொடுத்தாலும் விமர்சனம், கொடுக்கா விட்டாலும் விமர்சனம் என்றால் என்னதான் செய்வார்கள் இவர்கள். 

அறச்சீற்றம் அவசியம் தான், கையறு நிலையில் ஒற்றுமை இல்லாவிட்டால் எல்லாமே வீண், ஒரு குடையின் கீழ் அமர மாட்டாதா இந்த உம்மத்துகள். தன்னலமற்ற தலைமைத்துவம் ஒன்று மிளிராதா என்ற ஏக்கம் எம்மை வாட்டுகிறது,

டாக்டர். எஸ். நஜிமுதீன்.



No comments