இராணுவ பாதுகாப்பில் தற்போது பாராளுமன்ற வளாகம்; ஜனநாயகம் ஒடுக்கப்படுமா?......
✔️டி.எஸ். சேனநாயக திட்டமிட்ட குடியேற்றங்களூடாக சிறுபான்மையினரின் நிலபுலங்களில் கைவைத்தார்
✔️பண்டாரநாயக சிங்களம் மட்டும் சட்டத்தைக்கொண்டு வந்து சிறுபான்மையினரின் மொழியில் கைவைத்தார்
✔️ஶ்ரீமா தரப்படுத்தல் முறையூடாக சிறுபான்மையினரின் கல்வியில் கைவைத்தார்.
✔️ஜே.ஆர். அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தினூடாக சிறுபான்மையினரின் உயிரில் கைவைத்தார்
✔️மகிந்த சிறுபான்மையினரின் மேற்கூறிய அனைத்திலும் கைவைத்தார்
✔️இன்றைய ஜனாதிபதி சிறுபான்மையினரின் மத உரிமையில் கைவைத்துள்ளார் (ஜனாஸா எரிப்பு)
மேற்கூறிய விடயங்கள் இரண்டு முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துகின்றன;
👉🏿 இலங்கை சூழலில் சிறுபான்மையினரின் விவகாரங்களுக்கான காப்பு பெரும்பான்மை தலைவர்களிடம் இல்லை.
மாறாக,
👉🏿 சிறுபான்மையினரின் பங்கேற்பையும் வலியுறுத்தும் பலமிக்க ஜனநாயகத்தில்தான் தங்கியுள்ளது.
முதலாவதாக கூறப்பட்ட - சிறுபான்மையினரின் விவகாரங்களுக்கான காப்பு பெரும்பான்மை தலைவர்களிடம் இல்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை - இந்தப்பதிவின் தொடக்கத்திலேயே தந்துள்ளேன். டி.எஸ். சேனநாயக தொடக்கம் இன்றைய ஜனாதிபதி வரையிலான தலைவர்கள் சிறுபான்மையினரின் என்னென்ன விடயங்களில் திட்டமிட்டே கைவைத்துள்ளனர் என்பது சுருக்கமாக கூறப்பட்டுள்ளன.
இலங்கைச் சூழலில் சிறுபான்மையினர் தமது விவகாரங்களுக்கு காப்பு பெற வேண்டுமாயின் - நாட்டின் தலைவர்களை நம்புவதை விட - சிறந்த நம்பகரமான ஜனநாயகத்தை நப்புவதே சிறந்த வழி. அதற்கான முன்னெடுப்புக்களை வேறுபட்ட வழிகளில் செய்வது என்பது தவிர்க்க முடியாததாகும். அவ்வாறான விடயங்களே;
01) 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம்
02) 2018 ஆட்சிக்கவிழ்ப்பில் சிறுபான்மையினரின் உறுதியான நிலைப்பாடு
03) ஜனநாயகத்திற்கான இன்றைய போராட்டங்கள் (2020)
இவற்றில், தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ள "ஜனநாயகத்திற்கான இன்றைய போராட்டங்களை" பற்றி சற்று பார்ப்போம். இதனை சற்று ஆழமாக பார்க்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏன்எனில்,
👉🏿 பாராளுமன்ற வளாகத்தை தற்போது பலத்த இராணுவ பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்துள்ளமை
(பாராளுமன்றம் கூடுவதை தடுப்பதற்காக)
👉🏿 யாப்பு முரண்பாடு தொடர்பில் இன்னும் சில தினங்களில் சுப்ரீம் கோர்ட் வழங்கவுள்ள தீர்ப்பு மற்றும் நீதித்துறை சுதந்திரம்
👉🏿 அத்தீர்ப்பை அமுல்நடாத்துவதில் நிறைவேற்றுதுறையின் (ஜனாதிபதி) தலையீடு
என்பவை - ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தியுள்ள / ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை - மேலோட்டமாக "நுனிப்புல் மேய்வதாக" மேய்ந்துவிட்டுப்போக முடியாது.
ஜனாதிபதியை பொறுத்தவரை அவருக்கு;
✔️பாராளுமன்றத்தின் (சட்டவாக்கத்துறை) மீதான தனது கட்டுப்பாடின்மை
✔️தான் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு
✔️நிதி தொடர்பாக பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம்
✔️அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் - போன்றவை எதுவும் இல்லாமல் "தனிக்காட்டு ராசாவாக" தற்போது இயங்குகிறார்.
தான் நினைத்ததை - நினைத்த வண்ணம் - நினைத்த தேரத்தில் செய்வதற்கு - இராணுவம் இருக்கும் போது - அதனுடைய முழுக்கட்டுப்பாடும் தன்னிடம் இருக்கும் போது - தனக்கு பாராளுமன்றம் எதற்கு? என்று ஜனாதிபதி எண்ணுகிறார். கொரோனா கட்டுப்பாட்டிற்கு உதவியாக இராணுவத்தை பயன்படுத்திக்கொண்டு - இராணுவத்தால் தான் கொரோனா கட்டுப்படுத்தப்படுவதாக ஒரு மாயையை உருவாக்க நினைக்கின்றார்.
நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்ட இராணுவத்தால்தான் - கொரோனாவிலிருந்தும் நாட்டைக்காப்பாற்ற முடியும் என்ற பிரச்சாரத்தை - மிகக்கவனமாக "தெரண" மற்றும் "ஹிரு" போன்ற ஊடகங்களுடாக பரப்பப்படுகிறது. சிவில் நிர்வாகமே தற்போதும் அமுலில் இருக்கின்ற போதும் - நிர்வாகரீதியிலான தீர்மானங்களில் பொலிஸாரை விடவும் இராணுவத்தினரின் கையே மேலோங்குகிறது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது - பொலிஸாரை விடவும் இராணுவத்தினரே அதிகம் சாதாரண மக்களை இடர்களுக்கு உட்படுத்துகிறார்கள். தமக்கு சம்மந்தமில்லாத விடயங்களில் கூட தலையிட்டு அவற்றை பூதாகரமான பிரச்சினையாக மாற்றுகிறார்கள். எந்தவொரு விடயத்திலும் இன்றைய நிலையில் இராணுவ பங்கேற்பில்லாமல் தீர்மானங்கள் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.
உதாரணமாக, இப்போதைக்கு பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதா? இல்லையா? என்ற கலந்துரையாடலுக்கு - தேர்தல் ஆணையகம் - இராணுவ தளபதியை (கோரோனா நடவடிக்கை தலைவர்) அழைத்து பேசுகின்ற அளவிற்கு - இலங்கையின் முழு விவகாரங்களிலும் இராணுவ பங்கேற்பு ஏற்பட்டிருக்கின்றது. போதாக்குறைக்கு - பாராளுமன்ற வளாக பாதுகாப்பே பொலிஸாரிடமிருந்து இப்போது இராணுவத்தின் கைகளுக்குள் சென்றிருக்கிறது எனின் - இது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய சூழலா என்பதை எல்லோரும் யோசித்துப் பாருங்கள்?
✔️இப்படி மெல்ல மெல்ல இராணுவ கையகப்படுத்தலுக்குள் உள்வாங்கப்படும் இலங்கையில் - எதிர்காலத்தில் ஜனநாயகத்தின் பண்புகளை காணமுடியுமா? அது சிறுபான்மைக்கு பாதுகாப்பானதா? சிறுபான்மையின் விவகாரங்களுக்கு காப்பாக அமையுமா? இல்லை. இல்லவே. இல்லை.
✔️அப்படியாயின், இந்த ஜனநாயக விரோத சூழலை இப்போதே எதிர்த்து நின்று முகங்கொடுக்காமல் - "புற்றுநோயாக" வளந்த பின்னர் தலையில் கைவைத்து அழுவதா? சரியாக சிந்திப்போர் இப்போதே முகங்கொடுப்பர். அதற்கு எதிராக எழுந்து நிற்பர். அதனையே சிறுபான்மை தலைமைகள் செய்கின்றன.
✔️இதில் அரசாங்கத்தை நக்குவோரும் - அதிகம் அச்சம் கொள்வோரும் - அதிகப்பிரசங்கம் செய்வோரும் - அரசியல்; தனிநபர் முரண்பாடு; மேதாவித்தனம் போன்றவற்றினால் குறைகாணலாம் - ஆனால், "வெள்ளம் தலைக்கு மேலால் போகு முன்னே" பாதுகாப்பு தேடுவதில் தவறில்லை.
✔️நிறைவேற்றுத்துறை (ஜனாதிபதி) - சட்டவாக்கத்துறை (பாராளுமன்றம்) - நீதித்துறை என்ற மூன்றினதும் வித்தியாச வலுப்பிரோகங்களில் எந்த இடத்தில் சமநிலை குழம்புகிறதோ - அங்கு ஜனநாயகம் ஆபத்திற்குள்ளாவதை சிறுபான்மை சமூகம் வெறும் பார்வையாளராக பார்த்து நின்றால் - பின்னர் இலங்கையில் வாழ முடியாத சூழலுக்கு தற்ளப்படுவோம் என்பதை உணர்ந்து - "முளையில் கிள்ளுவதே" சிறந்தது.
இருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று......
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்
- ஏ.எல். தவம் -
No comments