Breaking News

மிகவும் கனத்த இதயத்துடன் இந்த செய்தியினை உங்கள் முன் பகிர்கிறேன்.

நேற்று இரவு  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மருதானை பகுதியினை சேர்ந்த சகோதரர் ஜூனூஸ் (74) என்பவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) இல் சற்றுமுன் உயிரிழந்து விட்டதாகவும் , குறித்த ஜனாசாவை எரியூட்டாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வழங்குமாறும் குறித்த நபரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அந்நேரம் முதலே துரிதமாக செயற்பட்ட நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தோம்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப், என்பவற்றின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக இருந்த சூழல் நேற்று மாலை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அணில் ஜெயசிங்க வெளியிட்ட கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை தடையாக இருந்த நிலையில் அரச உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடி சுமூகமான தீர்விைனைப் பெற முயற்சிப்பது என தீர்மானித்தோம்.

அதன் பிரகாரம் இன்று காலை முன்னாள் அமைச்சர் பௌசி அவர்களது இல்லத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன், ஏ.எச்.எம். பௌசி, பைசர் முஸ்த்தபா, எச்.எம்.எம். ஹரீஸ் , முஜிபுர் ரஹ்மான் ஆகியோருடன் அவசரமாக கூடிய நாம் பிரதமர் தலைமையிலான குழுவினருடன் அலரி மாளிகையில் சந்திப்பினை மேற்கொள்வது என தீர்மானித்து அங்கு சென்றாம்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பெஸில் ராஜபக்ஷ உட்பட அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்க ,சஜித் பிரேமதாச, இரா சம்பந்தன் உட்பட பல்வேறு கட்சிகளது பிரதிநிதிகள் சுகாதார பணிப்பாளர் அணில் ஜெயசிங்க, முப்படைகளின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்ட வேளை பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் முன் வைக்கப்பட்டது,

தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது தலைமையில் அங்கு சென்ற குழுவினரால் ஒரு முஸ்லிமினது ஜனாசாவுக்கான கட்டாய கடமைகள் குறித்தும் , உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் வெளியிட்ட வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டும்  தெளிவுபடுத்தல்கள் முன் வைக்கப்பட்டதுடன் , உடலங்களை எரிப்பதற்கான தீர்மானம் வெறுமனே சட்ட வைத்திய அதிகாரியினது அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமையாமல் தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் , துறை சார் வல்லுனர்கள் , சமூக பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் இணைத்து ஒரு குழுவான தீர்மானத்தின் அடிப்படையிலே தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கமைவாக ஒரு குழுவினை அமைப்பதாகவும் , அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய முஸ்லிம்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வது குறித்த விடயம் தீர்மானிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

எம்மால் இயலுமான முயற்சிகளை நாம் செய்த போதும் நேற்று இரவு மரணம் ஆன குறித்த சகோதரரின் ஜனாசா தகனம் செய்யப்பட்டு விட்டமை எம்மை கதி கலங்கச் செய்திருக்கிறது, அல்லாஹ் அந்த சகோதரரரை பொருந்திக் கொள்ள வேண்டும் என இறைவனை உளமாற இறைஞ்சுகிறோம்.

அத்துடன் இந்த முயற்சியினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய்வதற்காக தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர் பௌசி அவர்களது இல்லத்திலே ஒரு விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம், 

குறித்த எமது முயற்சி வெற்றியளிக்க இறைவன் துணை புரிய வேண்டும் என்றும், உயிரிழந்த சகோதரர்களுக்கு மேலான சுவன வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும், வல்ல நாயன் நம் அனைவரையும் நோய் தொற்றில் இருந்து காத்தருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன்...

அலி ஸாஹிர் மௌலானா...



No comments