ஆட்சியை கவிழ்க்கமாட்டோம், சம்பளமும் வேண்டாம், பாராளுமன்றத்தை கூட்டுங்கள் - கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் 7 எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 7 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் COVID-19 பரவல் தொடர்பான சவாலை திறம்பட எதிர்கொள்ள பாராளுமன்றத்தில் பொறுப்பான ஒத்துழைப்பை உறுதிசெய்யும் வகையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாலும், தேர்தல் நடாத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத காணப்படுவதாலும், எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் நடாத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதால் பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், ஆட்சியை முறையாகவும், சட்டபூர்வமாகவும் மேற்கொள்ளும் வகையில் கூட்டப்படும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டப்படும் பாராளுமன்றத்தில் எந்தவிதமான சம்பளமும் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தின் எந்தவொரு சட்டபூர்வமான செயற்பாட்டுக்கும் தடங்கல் ஏற்படுத்தவோ, அரசாங்கத்தை கவிழ்க்கவோமாட்டோம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையை ஐக்கிய தேசிய கட்சி., ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உருமய ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, இவ்வறிக்கையில் குறித்த கட்சிகளின் தலைர்களான, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, இரா. சம்பந்தன், ரஊப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
No comments