Breaking News

கொவிட்-19 இனால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய சார்ஜா ஆட்சியாளர் தடை விதிக்கவில்லை

புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவின் ஆட்சியாளரான சுல்தான் பின் முஹம்மத் அல் ஹாசீமி தடை விதித்துள்ளார் என்ற செய்தியொன்று இலங்கையிலுள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள் பகிரப்பட்டன.


எனினும் இது பொய்யென கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவராலயம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் சார்ஜாவிலுள்ள ஒரு பகுதியிலேயே கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியோக இடத்தில் அடக்கம் செய்யுமாறே ஆட்சியாளர் உத்தரவிட்டதாக தூதரகம் தெரிவித்தது.  


சார்ஜா ஆட்சியாளரின் புகைப்படத்துடனான இந்த செய்தி கடந்த 2020 ஏப்ரல் 6ஆம் திகதி பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த பதிவு 2020 ஏப்ரல் 9ஆம் திகதி பி.ப 5.00 மணி வரை 1,900க்கு மேற்பட்ட தடவைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த பதிவில்,

"சார்ஜாவின் ஆட்சியாளரான ஷெய்க் சுல்தான் என்று அழைக்கப்படும் கலாநிதி ஷெய்க் சுல்தான் பின் முஹம்மத் அல் ஹாசீமியின்  முன்றாவது உத்தரவாக கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களை சார்ஜாவின் எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய வேண்டாம் என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த உத்தரவு சார்ஜாவின் இஸ்லாமிய விவகார திணைக்களத்திற்கு சுல்தானினால் அனுப்பப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ ஊடகங்களில் இருந்து மாத்திரமே மக்கள் செய்தியினை ஏற்க வேண்டும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டோம் என அந்நாட்டு அரச வானொலி அறிவித்திருந்தது. பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


"ஆகவே சார்ஜா ஒரு முஸ்லிம் நாடில்லையா? பேஸ்புக்கில் அழுது புலம்பிய நிபுணர்கள் எங்கே?" இந்த விவரணப் பதிவில் மஞ்சள் நிறுத்தில் எழுதப்பட்டிருந்தது. பிழையாக இடப்பட்டிருந்த பேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாடினை ஒத்த பதிவுகள் பேஸ்புக்டுவிட்டர் மற்றும் உள்ளூர் இணையத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.

"எனினும் இது பொய்யான செய்தியாகும். சார்ஜாவிலுள்ள தொழிற் துறை வலயமான அல் சாஜாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அதிகாரிகளை அல் ஹாசிமி அறிவுறுத்தியதாக" கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


"கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தடைவிதிக்கவில்லை"  எனவும் கடந்த 2020 ஏப்ரல் 6ஆம் திகித தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.


சார்ஜாவிலுள்ள மற்றுமொரு தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய வகையான இந்த நோயினால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.






No comments