Breaking News

கொரோனாவிற்கெதிரான யுத்தத்தின் போராளிகள் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

கொரோனாவிற்கெதிரான யுத்தத்தை மூன்றாம் உலகப்போர் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் ஒரு வைரஸுக்கும் மனிதனுக்குமிடையில் ஆரம்பமாகியிருக்கும் இந்த யுத்தம் உலகமயமாகி இருக்கிறது. எனவே, உலகப்போர் என்று இதனைக் கூறலாம் போலிருக்கின்றது.

இனங்களுக்கிடையில்... மதங்களுக்கிடையில்... நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தங்களைப் போன்றல்லாமல் மனித இனம் முழுவதும் ஒரு அணியிலும் வைரஸ் கிருமிகள் மற்றுமொரு அணியிலுமாக இந்த யுத்தம் நடைபெறுகின்றது. 

மனித இனம் சார்பாக இந்த யுத்தத்தில் களமிறங்கியிருக்கும் போராளிகள் வைத்தியர்களும் வைத்தியத் துறை சார்ந்த ஊழியர்களுமாவர். தங்களது உயிர்களைப் பணயம் வைத்து இந்தப் போர்க்களத்தில் தங்களை அவர்கள் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற வேறுபாடுகளை மறந்து மனிதர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு அவர்கள் போராடுகின்றார்கள். ஒரு மனிதனை இந்த வைரஸ் தாக்கிவிட்டால் அடுத்த கணம் அடுத்த ஒரு மனிதன் தாக்கப்படுவான். அது நானாகவும் இருக்கலாம் என்ற அச்சத்துடன் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இது LTTE போன்ற ஒரு பயங்கரவாத அமைப்போடு போரிடுவது போன்றதல்ல. மனிதர்களுக்கிடையே ஒரு மோதல் இடம்பெற்றால் அந்த மோதல் முடியும் போது பாதிப்புகளின் அளவும் அதனோடு சுருங்கிவிடும். கொரோனா வைரஸோடு மோதினால் மோதல் முடியும் போது பாதிப்புகள் அதிகரித்திருக்கும். காரணம், இந்த வைரஸ் தன்னை மறைத்துக் கொண்டு பிறரைத் தாக்கும் கொரில்லாப் போர் முறையைக் கற்றிருக்கின்றது. 14 நாட்கள் தன்னை மறைத்துக் கொண்டு பிறரைத் தாக்கும் சக்தி அதற்கிருக்கின்றது. அந்தப் 14 நாட்களில் அது பலநூறு மனிதர்களை அவர்களறியாமலேயே தாக்கிவிடலாம். அந்தத் தாக்குதலை பின்னரே பலரும் அறிந்து கொள்வார்கள். அப்போது வெள்ளம் அணையுடைத்துப் பாயும் கட்டத்தை அடைந்திருக்கும். 

எனவே, வைத்தியர்கள் வைத்தியத் துறை சார்ந்த ஊழியர்களோடு மற்றுமொரு படையுமிணைந்தால் தான் இந்தப் போராட்டத்தில் மனிதன் வெற்றிவாகை சூடலாம். நோய்க்கிருமி தொற்றிய.. மற்றும் தொற்றாத.. ஒவ்வொரு மனிதனும் போராளியாக மாற வேண்டும். அதாவது, மக்கள் படை இந்த வைரஸுக்கெதிராகப் போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்கு அவசியமான ஒரே ஆயுதம் வைரஸுக்கு வாய்ப்பளிக்காமலிருப்பது தான். 

வைரஸை ஒரு அங்குலம் கூட நகரவிடாமல்.. அதாவது, வைரஸ் எனும் குரங்கு ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்குத் தாவாமல் ஒவ்வொருவரும் தூரமாகி இருப்பதே மக்கள் படையின் போராட்ட உத்தியாக இருக்க வேண்டும். இதுவரை வெளியான ஆய்வுகளது முடிவுகளின் படி மூன்று அடிகளுக்கதிகமான தூரத்தை எட்டித் தாவுவதற்கு இந்தக் குரங்கினால் முடியாது. அவ்வளவு பலவீனமான குரங்கு தான் தாவித்தாவி உலகம் முழுவதிலும் பத்தாயிரத்திற்கதிகமான தலைகளைக் கொய்திருக்கின்றது. இலட்சக்கணக்கானவர்களின் தலைகளை குனிய வைத்திருக்கின்றது. இது வைரஸின் பலமா? மனிதனின் பலவீனமா? என்பதே தற்போது எழுந்துள்ள வினாவாகும். 

எவ்வாறாயினும் பதட்டம், அவசரம், அசுர வேகம், பொறுமையின்மை, தனது தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல், தனது சாதாரணகாலப் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் போன்றவற்றை அவசரகால சூழலொன்றில் மாற்றிக் கொள்வதற்குத் தெரியாமலிருத்தல், அதற்கான பொறுப்புணர்வை வெளிப்படுத்தாதிருத்தல் போன்ற பலவீனங்களையே அற்பமான வைரஸ் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

எனவே, வைரஸின் பலத்தால் இந்தப் பேரவலம் நிகழவில்லை. மனிதனின் பலவீனத்தினாலேயே இந்தப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. அந்தப் பலவீனத்தை இன்றைய உலகின் ஒழுங்குகளும் வாழ்க்கை முறையும் நாகரீகமும் விருத்தி செய்திருக்கின்றன என்று கூறினால் மிகையாகாது.

தனது சாதாரணகால பழக்கவழக்கங்களை அவசரகால சூழலொன்றில் மாற்றிக் கொள்ள முடியாதிருப்பதற்கு ஒரு உதாரணம் சொல்வதாயின்.. முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கைகுலுக்கும் பழக்கத்தைக் குறிப்பிடலாம். அதனை தற்போதைய அவசரகால சூழலில் பொருத்தமற்றதாகக் கருதாமல் கண்டவுடன் கைகுலுக்கிக் கொள்கிறார்கள் எமது அன்பர்கள். கைகுலுக்குவது இந்த சூழலில் நல்லதா என்று வினவிய பின்னரே அதனை அவர்கள் உணரத் தலைப்படுகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயமாக உபதேசித்துக் கொண்டிருக்க முடியுமா? அவசரகால சூழுலில் எமது அனைத்துப் பழக்கவழக்கங்களையும் மாற்றி புதிய சூழலுக்கு ஏற்றவிதமாக நடந்து கொள்வதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். அப்போது இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம்.



No comments