Breaking News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் அக்கறைப்பற்றுக் கிளை விடுக்கும் வேண்டுகோள்.

அன்பின் ஜமாஅத்தினருக்கு
السلام عليكم ورحمة الله وبركاته

உங்கள் அனைவரதும் ஆரோக்கியத்திற்காகவும் பொருளாதார பரக்கத்திற்காகவும் ஈருலக ஈடேற்றத்திற்காவும் பிரார்த்திக்கிறோம்.

அன்பானவர்களே! உலகமே செய்வதறியாது அதிர்ந்து போயிருக்கும் ஒரு காலத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம்.

எமது தாய் நாடான இலங்கையையும் இந்த கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இத்தொற்று நோயிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படை உத்தியோகத்தர்கள் அனைவரும் இரவு பகலாக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எமது மக்கள் சுகாதாரத் துறையின் ஆலோசனைகளையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டங்களையும் மீறி செயற்படுவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் வீணாக உலா வருவது, மைதானங்களில் விளையாடுவது, வீணாக ஒன்று சேர்வது, உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள போது நண்பர்கள் என்றும் குடும்பங்கள் என்றும் ஒன்று சேர்ந்து உல்லாசமாக பொழுதுகளை கழிப்பது, மார்க்கத்திற்கு முரணான அம்சங்களில் ஈடுபடுவது, இவை அனைத்தும் பாவங்களாகும்; இறைவனின் தண்டனைகளை பெற்றுத்தரக்கூடியதாகும்.

இவை இந்த சமுதாயத்தின் ஆணவத்தையும் கட்டுப்பாடற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாகவே அமையும்.

*இவை பெருமையல்ல அவமானமாகும். இவை உயர் பண்புகளல்ல இழி செயல்களாகும். இவை துணிச்சல் அல்ல சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்யும் துரோகமாகும்.*  எவராவது ஒருவருக்கு எம்மால ஏற்படும் பாதிப்பு, நோய் தொற்று இந்த நாட்டின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் மிக மோசமான பாதிப்பு என்பதை விளங்கி நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படுங்கள். இதற்காக அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஒத்துழையுங்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுமையோடு வீட்டிலிருப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழிமுறை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நாம் இருப்பது அருள் நிறைந்த ஷஃபான் மாதத்திலாகும். நபிகளார் அதிகமதிகம் சுன்னத்தான நோன்பு நோற்ற மாதமாகும். எமது அமல்கள் அல்லாஹ்வின் பக்கம் உயர்த்தப்படும் மாதமாகும். இதனை உணர்ந்து நோன்பு நோற்று நற்கருமங்கள் புரிந்து அல்லாஹ்வை நெருங்குவோம். இத்துரதிஷ்ட நிலையிலிருந்து எமது நாட்டையும் உலக மக்களையும் பாதுகாக்க இரு கரமேந்தி துஆ செய்வோம். வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் மன்னித்துப் பொருந்திக்கொள்வானாக.

இப்படிக்கு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் அக்கரைப்பற்றுக் கிளை 29/03/2020











No comments