Breaking News

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்.

தமிழகத்தின் புகழ்பூத்த மூத்த அரசியல்வாதி பேராசிரியர் க. அன்பழகன் உயிர்நீத்த செய்தியறிந்து ஆழ்ந்த கவலை அடைவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழுலகம் என்றுமே போற்றும் மறைந்த கலைஞர் மு. கருணாநிதியின் மிக நெருங்கிய தோழராக இறுதி இருந்துவந்த நாவன்மை மிக்க க. அன்பழகன் தமிழக அரசியல் களத்தில் கடும் சூறாவலியாகவும் இதமான தென்றலாகவும் இரு வேறு தன்மைகளைக் கொண்டிருந்தார். 

அவர் இந்திய லோக் சபையில் ஒரு தடவையும் தமிழக சட்ட சபையில் ஒன்பது தடவைகளும் உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாது, அமைச்சராகவும் பதவி வகித்து மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றார்.

இவ்வுலகில் 97 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த க. அன்பழகன் அவர்கள் 43 ஆண்டுகள் தி.மு.க. பொதுச் செயலாளராகவும் திகழ்ந்தார். 
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நான் உரையாற்றிய போது நோய்வாயுற்றிருந்த பேராசிரியர் க. அன்பழகன் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தித்திருந்தேன். 

தமிழக மக்களோடும், தி.மு.க. தொண்டர்களோடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சோகத்தில் பங்குகொள்கின்றது. 
இவ்வாறு அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.



No comments

note