Breaking News

இயந்திரங்களைப் புரிந்துகொள்வது போல் மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டாம் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

கொரோனோ கற்றுத்தந்திருக்கும் வாழ்க்கைப் பாடம் 

கொரோனா வைரஸின் வருகையைத் தொடர்ந்து சீனாவில் விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும் இலங்கையின் வைத்தியசாலைகளுக்கு கணவன்மாரால் தாக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றும் செய்திகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இது என்ன புதிய கொரோனாப் பிரச்சினை என்று பார்க்கிறீர்களா? இது கொரோனாப் பிரச்சினை அல்ல... கொரோனா காட்டித்தந்த பிரச்சினை. குடும்பங்களுக்குள் மறைந்திருந்த பிரச்சினையொன்றை கொரோனா வெளிக் கொணர்ந்திருக்கிறது.

அல்லும் பகலும் ஓயாது உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்தியவர்கள் கொரோனாவால் சிறிது ஓய்வுக்கு வந்திருக்கிறார்கள். இல்லை... சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் (கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் கூட்டுக் குடும்ப அங்கத்தவர்கள்) நாள் முழுவதும்... வாரம் முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

அலுவலக வேலைகள், பயணங்கள், படிப்புகள், கல்லூரிகள், டியூட்டரிகள், வியாபாரங்கள் என சகலதும் நிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் மனைவி, பிள்ளைகளுடனும் உறவினர்களுடனும் காலம் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு சிலருக்கு இது நல்லதாக அமைந்த போதிலும் மற்றும் சிலருக்கு ஓய்வும் தனிமைப்படுத்தலும் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. 

வார நாட்கள், வார இறுதி நாட்கள் என்றில்லாமல் அதிகமான பொழுதுகளை மாணவர்கள் கல்விக்காக செலவிட்டார்கள். பெரியவர்கள் அலுவலகங்கள் மற்றும் வியாபார நிலையங்களோடு காலம் தள்ளினார்கள். பெண்களுக்கு வீட்டு வேலைகள் போக, பயனுள்ள மற்றும் பயனில்லாத பொழுதுபோக்குகள் நிறையவே இருந்தன அல்லது அவர்களும் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள்.

இப்போது, பிள்ளைகளின் தொந்தரவுகள், மனைவியின் நச்சரிப்புகள், கணவனின் ஒத்துழையாமைகள்... என நாள் முழுவதும் வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அன்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, ஒவ்வாமைகளை சகித்துக்கொள்ளும் பக்குவம், உரிமையிருந்தாலும் கண்டனங்களையோ கோபத்தையோ வெளிப்படுத்தாதிருப்பதற்கு அவசியமான பொறுமை போன்ற நற்குணங்கள் இல்லாது போனால் வாழ்க்கை தடம் புரளவே செய்யும்.

சிலரைப் பார்க்கிறோம்... அவர்கள் பிறரால் அசௌகரியம் அடையக் கூடாது அல்லது எமது சௌகரியத்துக்கு ஒருவரும் இடையூறாக வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பவர்கள். அத்தகையோர், தங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களது பலவீனங்களால் தாமும் அசௌகரியமடைந்து பிறரையும் அசௌகரியப்படுத்தவே செய்வார்கள். குறைந்தபட்சம் அவர்களை வார்த்தைகளால் அல்லது நடத்தைகளால் துன்புறுத்துவார்கள். தமக்கு அசௌகரியத்தைத் தருபவர்கள் உரிமையோடு கண்டிக்கப்பட முடியுமானவர்களாக இருந்தால் அவர்களை இத்தகையவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விடவே மாட்டார்கள்.

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்கள். இயல்புகள் மற்றும் சுபாவங்கள் அனைத்திலும் மனிதர்கள் வெவ்வேறானவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இயந்திரங்களல்லர்... அவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறாகவே பார்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற பலம், பலவீனங்களோடு தான் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதனை இப்படிக் கூறினார்கள்:

'ஒரு மனிதன் தனது மனைவியுடன் இன்புற்று வாழ்கிறான் எனின், அவன் அப்பெண்ணிடமிருக்கின்ற குறைகளுடனேயே இன்புற்று வாழ்கிறான்.'

மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு குறைகளற்ற ஒருவரைத் தேடுவது அறிவீனமாகும் என்பதனையே நபி (ஸல்) அவர்கள் இங்கு உணர்த்தியிருக்கின்றார்கள். 

குறைகள் அனைத்தையும் அகற்றி மாசற்ற நிலைக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவந்த பின்னர்தான் அவளுடன் இன்புற்று வாழ முடியும் என ஒரு மனிதன் நினைத்தால் அவன் வெறும் ஒரு கற்பனாவாதியே.

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதன் வந்து நான் எனது மனைவியை விவாகரத்துச் செய்யப் போகிறேன் என்று கூறினான். அதற்கு, அவள் என்ன தவறு செய்தாள் என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். மறுமொழியாக அவளோடு வாழ முடியாது நான் அவளை விவாகரத்துச் செய்யப்போகிறேன் என்ற பதிலையே அம்மனிதன் கூறினான். நபி (ஸல்) அவர்கள் ஒரு மனைவி செய்ய முடியுமான தவறுகளை ஒவ்வொன்றாக வினவி அவளிடம் இந்தக் குறை இருக்கிறதா இந்தக் குறை இருக்கிறதா எனக் கேட்டார்கள். அவன் இல்லை, இல்லை என்ற பதிலையே சொன்னான். அவ்வாறாயின், ஏன் உனக்கு அவளோடு வாழ முடியாது என்று வினவினார்கள். 'இப்போது அவளுடன் வாழ முடியும் போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு அம்மனிதன் திரும்பிச் சென்றான்.

இந்த சம்பவம் எடுத்துக் கூறுகின்ற உண்மை யாதெனில், ஒரு பெண்ணிடமிருக்கின்ற பல நல்லம்சங்களை அவளிடமிருக்கின்ற ஒரு சில குறைகள் மறைத்து விடுகின்றன. பின்னர், அந்தக் குறைகள் அவளது மொத்தக் குறைகளாகப் பார்க்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து ஒருவரைப் பற்றிய எண்ணம் மற்றவரிடம் முற்றிலுமாக மாறிவிடுகின்ற நிலை தோன்றுகிறது. இவற்றிற்கு இடந்தராமல் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்ற பாடத்தையே மேற்படி சம்பவம் போதிக்கின்றது. 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரம்பம் முதலே இடந்தராத ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கானவர்கள். அத்தகையவர்களோடு வாழ முடியாது என்பதைத் தீர்மானிப்பதற்கு கொரோன வரவேண்டியதில்லை, தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டியதுமில்லை. சாதாரண காலமே அவர்களது தவறுகளை விளங்கிக் கொள்ளப் போதுமானது. அத்தகையவர்கள் பற்றி இங்கு நாம் பேசவில்லை. 

நீண்டகாலம் வாழ்க்கை வண்டியை ஓட்டியவர்கள், குழந்தைகளைப் பெற்று வளர்த்தவர்கள் குடும்பங்களில் வந்து போகின்ற சிறு சிறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஒருவரை ஒருவர் வெறுக்கின்ற நிலை ஏன் வரவேண்டும்?

உண்மையில், இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்ற வழமையைக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் பாடசாலைகளிலும் பெரியவர்கள் அலுவலகங்களிலும் மனைவியர் வீட்டு வேலைகளிலும் பொழுதுகளைக் கழிப்பவர்களாக இருந்தார்கள். மாலையாகும் போது களைத்துப் போய் வீடு வருகின்ற இவர்கள் உணவு, நித்திரை என்பவற்றோடு அடுத்த நாளைக்குத் தயாராகின்ற சிந்தனையுடனேயே பொழுதைக் கழிப்பார்கள்.

தற்போது எல்லோருக்கும் இருப்பது ஒரு வேலை மட்டுமே. அதுவே, வீட்டில் பொழுதைக் கழிப்பதாகும். சிறுவர்கள் ஓய்வு கிடைத்தால் விளையாட்டும் கூத்துமாக இருப்பார்கள்... பெண்கள் ஓய்வு கிடைத்தால் கதைத்துக் கொண்டிருக்க விரும்புவார்கள்... ஆண்கள் ஓய்வு கிடைத்தால் அமைதியான பொழுதுபோக்கொன்றில் ஈடுபட்டிருப்பார்கள். வீடு களைகட்டாது அல்லது ஒருவர் மற்றவருடைய சுபாவங்களால் நெருக்கடிக்குள்ளாகின்ற நிலையே வரும். இதனை எதிர்கொள்வதற்கு பழக்கப்படாதவர்கள் நிச்சயம் பிரச்சினைகளையே வரவழைத்துக் கொள்வார்கள்.

சம்பாதிப்பதற்குப் பழகியது போல்... படிப்பதற்குப் பழகியது போல்... பொழுது போக்குவதற்குப் பழகியது போல் வாழ்வதற்குப் பழக வேண்டும் என்பதுதான் இத்தகைய அனுபவங்கள் எடுத்துக் கூறுகின்ற உண்மையாகும். வாழ்வதற்குப் பழகாதவர்கள் மனிதர்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள், இயந்திரங்களைப் புரிந்துகொள்வது போன்றே மனிதர்களையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

வாழ்க்கையை இத்தகையவர்கள் புதிதாகப் படிக்க வேண்டும். மனிதர்களையும் அவர்களது வேறுபாடுகளுடன் சரியாகப் புரந்துகொள்ள வேண்டும். அப்போது மட்டுமே, வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.

2020 மார்ச் 26



No comments