நீங்கள் எரித்தது உயிரற்ற எமதுடலை மட்டுமல்ல. நாட்டை உயிராக மதிக்கும் எம் உள்ளங்களையும்தான்.
Covid 19 தொற்றினால் இறந்த உடல்களை எரியூட்டுவதற்கும், புதை குழியில் அடக்கம் செய்வதற்கும் தகுந்த வழிகாட்டல் மருத்துவத்தில் காட்டப் பட்டிருந்தும்! கண்முன் சாட்சியாக அனைத்து நாடுகளிலும் இந்நிலை நடை முறையிலிருந்தும் முஸ்லிம் ஒருவரது உடலை நீங்கள் எரித்தீர்கள் என்பது மனித உரிமை மீரல், மத உரிமை மீரல், அடிப்படை உரிமை மீரல் என்பவற்றை எல்லாம் தாண்டி ஒரு இனத்தின் இழப்பிலும் இனவாதத் தீ மூட்டும் அரக்கத் தனமுமாகும்.
நாம் நாட்டை மதிப்பவர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக பாடு படுபவர்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்கள். சிங்கள மன்னர்களின் நம்பிக்கை மிகுந்த மெய் காவலர்களாக இருந்து நெஞ்சில் ஈட்டியை சுமந்து அவர்களை காத்தவர்கள். அன்றும் இன்றும் எமது இரத்த உறவுகளும் தொப்புள் கொடி உறவுகளுமான சிங்கள, இந்து, கிறிஸ்தவ மக்களுக்கு ஓர் இடர் என்றால் ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டுபவர்கள். நாமும் உங்களை சேர்ந்தவர்கள் என்பதையும், நீங்களும் எங்களை சேர்ந்தவர்கள் என்பதையும் புரிந்து கொண்டவர்கள் நாம். அவரவர் தொழில் துறைகளை அவரவர் தெரிவு செய்து கொள்வதுபோல் நாம் இஸ்லாத்தை மார்க்கமாக தெரிவு செய்து கொண்டோம். நீங்கள் உங்களுக்குப் பிடித்த மதத்தை தெரிவு செய்து கொண்டீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் ஓடுவது சிவப்பு இரத்தமே. நீங்களும் நாங்களும் அடையாளத்தால் இலங்கையரே.
உங்கள் அறிவீனத்துக்கு வருந்துகிறோம். இனவாதத்தை கக்கியவர்களால் நாடுகளின் வளர்ச்சிகள் மங்கிப் போயினவே அன்றி! இனவாதத்தால் எழுச்சி பெற்ற வரலாறேு எங்குமில்லை.
எமது நீதமான குரல் உங்களில் உள்ள நேர்மையான செவிடன் காதிலும் கேட்கும். எமது நீதமான நடத்தை உங்களில் உள்ள நேர்மையான குருடன் கண்ணுக்கும் தெரியும். ஆனால் அநீதத்தை எதிர்த்துப் பேசி தன் இனத்தின் கொடூர செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க தயங்கி நிற்கிறீர். இந்நிலமையானது கடலில் இருந்து குறுக்கு வழியில் நீரை எடுக்க கப்பலின் கீழ் தட்டில் உள்ள முட்டால்கள் துளையிடும்போது மேல் தட்டிலுள்ள புத்திஜீவிகள் கண்டும் காணாது இருப்பதற்கு நிகரான செயலாகும்.
ஓரிருவரது செயலை வைத்து இனத்தை மதிப்பிட முடியாது. அனைத்து எருமை பட்டிகளிலும் மூக்கனாக் கயிறுக்கும் அடங்காத எருமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் மேய்ப்பாளர்கள் கவனமற்றிருப்பது இழப்புகளையே கொண்டு வரும்.
உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு இனத்தின் மீதான அத்துமீறலை செய்கின்றபோது அதே இனத்தில் உள்ளவர்கள் அதனை தட்டிக் கேட்கும்வரைதான் அமைதி நிழவும். அதுவே பாதிக்கப் பட்டோருக்கான ஆருதலாகவும் அமையும். பிரிதொரு அநீதியிலிருந்து மக்களையும் காக்கும்.
தவரும் பட்சத்தில் சமூகங்கள் மத்தியிலான வெறுப்புகளும், கோபங்களுமே அதிகரிக்கும். இச்சிறிய தீவில் ஒரு இனம் மற்றொரு இனத்தை புறக்கணித்து வாழ்வது அசாத்தியமானது. எவ்வாறு விவசாயிக்கு மருத்துவனின் உதவியும், மருத்துவனுக்கு விவசாயியின் உதவியும் தேவையோ; அதே போன்று இந்நாட்டில் பல்லின சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒருமைப் பாடும் மிக அவசியமாகும்.
அவசரப் புத்திக் காரர்களுக்கும், சுய நலமிககளுக்கும் இதன் யதார்த்தம் புரியாது. உலகே ஒதுக்கி வைத்த கியூபாவிடம் உலகை மண்டியிட வைத்துள்ளது Covid 19 எனும் புலன்களுக்கு எட்டாத ஒரு கிருமி. இதில் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன.
உருதியாக ஒன்றை கூறி வைக்கின்றேன். முஸ்லிம்கள் இல்லாத நாட்டை நீங்கள் உருவாக்க விரும்பினால் அந்த நாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை எதிர்வு கூர்கிறேன். கண்முன் இருத்திப் பாருங்கள்.
விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒழித்து நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் இல்லை. நாங்கள் உங்களுக்கு அநீதி இழைத்தாலும், நீங்கள் எங்களுக்கு அநீதி இழைத்தாலும் எம்மில் மூதாதையர் வழி அடிப்படையில் ஒரு குடும்பத்தவர் சக குடும்பத்தவனுக்கே அநீதி இழைக்கிறோம். ஈற்றில் தாம் இழைத்த பிழையை எண்ணி எண்ணியே வாழும் துக்கமான வாழ்வொன்றே எஞ்சி நஇருக்கப் போகிறது.
விருட்சத்திலிருந்து விழும் அற்ப விதையே பூமியை ஊடறுத்துக் கொண்டு மீண்டும் விருட்சமாக எழுந்து நிற்கிறது. வானலாவ கிளைகள் விரித்த விருட்சத்தினால் விதைகளின் வளர்ச்சியை தடுக்க முடிந்திருந்தால் உரகில் வனங்கள் தோன்றியிருக்காது. இந்நாட்டில் நாம் விதைகளாவோம். எம்மை வளர விடுங்கள். வாழ விடுங்கள். இதில்தான் உங்கள் வளர்ச்சியும் செழிப்பும் தங்கியுள்ளது.
எனவே யாவரும் அவரவர் மதங்களையும் கொள்கைகளையும் கடை பிடித்து, ஒருவர் மற்றவரை புரிந்து வாழும் புரிந்துணர்வை கொள்கையாக கையில் ஏந்துவோம். நாட்டின் சுமைகளை அனைத்தின கரம் கொண்டு சுமப்போம். பசுந்தோல் போர்த்திய போதகர்களுக்கும், சமயோசிதமற்ற மூடர்களுக்கும், சுயநலமிக்க தீயவர்களுக்கும் இடமளிக்காது வாழப் பழகுவோம். பல இனங்களாயினும் நாம் இலங்கையர் எனும் கயிற்றை பற்றிப் பிடித்து, அரசியல் பொருளாதார ஆண்மீக சமூக ரீதியான சுயநலமிகளிடம் இருந்து நாட்டை காப்போம்.
நாம் நம்மை உணர்ந்தால் நிம்மதியான வாழ்வை சுவீகரிக்கலாம். வல்ல இறைவன் அதற்கு அருள்பாளிப்பானாக.
No comments