Breaking News

தாய்மையை போற்றி மகிழும் நாம் பெண்களின் பொறுமை, அறிவு, திறமை என்பவற்றை கௌரவத்துடன் மதிக்கவேண்டும் ; எச்.எம்.எம். ஹரீஸ் !


தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள் விடாமுயற்சியுடன் சோதனைகளை எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி சரித்திரம் படைத்திட வேண்டும் என, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அனைத்து மகளிருக்கும் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் : 

 "மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல, மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா" என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வாக்கிற்கேற்ப, பெண்மையின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் திகதி "சர்வதேச மகளிர் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிர்க்கும் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

 பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் கௌரவிக்க இலங்கையர்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும். உலகில் முதலாவது பெண் பிரதமர் எனும் அந்தஸ்ததையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி எனும் அந்தஸ்த்தையும் மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கு வழங்கி கௌரவித்த எமது நாட்டில் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி எனும் அந்தஸ்த்தையும் வழங்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரையும் ஆசனத்தில் அமர்த்தி கௌரவித்த வரலாறு இலங்கைக்கு உண்டு. அது மாத்திரமின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள், உட்பட பல முக்கிய அரசியல் பதவிகளையும், அரச உயர் பதவிகளையும் இலங்கை பெண்கள் வகிப்பது பெருமைக்குரிய விடயமாகும். 

சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை தேடித்தந்த பெண்களை இவ்விடத்தில் நாங்கள் கௌரவத்துடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டும். ஒரு சாதனையாளனின் வெற்றிக்கு பின்னால் மட்டுமின்றி சகல பக்கங்களிலும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் அர்ப்பணிப்பும் ஊக்கமும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்களில்லை. மிகப்பெரும் சக்திகளில் ஒன்றான தாய்மையை போற்றி மகிழும் இவ்வேளையில் பெண்களின் பொறுமை, அறிவு, திறமை என்பவற்றை நாம் கௌரவத்துடன் மதிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடாக பிரிவு :-



No comments

note