ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன - முன்னாள் எம்.பி. மன்சூர்
**இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக திட்டமிடப்பட்டுள்ள சதிகள் அனைத்தையும் முறியடித்து தேசிய ரீதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதற்கு முயல்கின்ற சக்திகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
அண்மையில் அட்டாளைச்சேனையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான குடும்ப ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
** முஸ்லிம் தலைமைகளுக்கிடையில், பலவிதமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
**அம்பாறை மாவட்டத்தை நாம் வெற்றி கொள்ள வேண்டும். தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பை ஏற்படுத்த நான் என்றும் தயாராக இருக்கின்றேன்.
** ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூட எமது கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வது பெரிய விடயமில்லை.
** சின்னச்சின்ன கணக்குகளைப் பார்த்து பெரிய பெரிய நிபந்தனைகளை வைத்துக் கொண்டு செல்லக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இன்று இல்லை.
** பொதுபலசேனாவும், எனைய கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடைமுறைகளை முன்னெடுக்கும் ஏற்பாடுகளைச் செய்தன. ஆனால் தற்போது அமைதியாக இருக்கின்றார்கள். இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் சரியான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களுக்கு தேவைப்படுகின்றது.
இதனைப்பெற்றுக் கொடுப்பதற்கு வசதியாக எம்மிடையே உள்ள சிலர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்து அவர்களை வெற்றியடையச் செய்து அவர்களின் இலக்குகளை அடைய துணைபோய் இருக்கின்றார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரித்துக் கொடுப்பதற்காக நம்மிடையே பலர் வரிந்து கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அதற்கான நியாயங்களையும் கூறி வருகின்றார்கள்.
** இதில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகம் அழிந்து போவதற்கான ஒருவாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகமாகவே உள்ளது. இதற்கான தீர்வுகளை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செய்ய வேண்டும். ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுசேர வேண்டும். அனைவரையும் இந்த விடயத்தில் அரவணைக்க வேண்டும்.
**இந்த விடயத்தில் சாதகமான, சாத்தியமான அமைப்பிலேயே ஒரு சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்து ஒருமித்த கருத்தோடு நாங்கள் எல்லோரும் களமிறங்கி எதிர்கால சமூகம் நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
No comments