கொரோனாவில் ஆதாயம் தேடுகிறதா அரசு?
கொவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் சமகாலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் ஓர் அபாயக் குறியீடு. இதன் சிருஷ்டிகர்த்தா சீனா என்று நிறுவுவதில் அமெரிக்கா முழுக்கவனம் செலுத்துகிறது. கொரோனோ சீன வைரஸ் என்பதை அடையாளப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி உட்பட உயரதிகாரிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், சீனாவோ இது அமெரிக்க இராணுவத்தின் நாசகார செயல் என்கிறது. எது எப்படியோ உலகை அதிகார பலத்தினால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் ஒரு வல்லாதிக்க சக்தியின் முட்டாள்தனமான இந்த செயற்பாட்டின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
புதிய அரசியல் ஒழுங்கொன்றை ஏற்படுத்துவதற்கு சீனா முயற்சிக்கின்றதா என்ற வினாவும் எழாமல் இல்லை. இத்தாலியில் மக்கள் கொத்துக்கொத்தாக செத்துமடியும்போது சீனாவின் அன்டைய நாடானா ரஷ்யாவும், வட கொரியாவும் பாதுகாப்பு வலயங்களாக (Corona free zone) நிமிர்ந்து நிற்பது ஆச்சரியமளிக்கிறது. தனது நாட்டில் கொரோனா பரவியிருப்பதை வடகொரியா மறைப்பதான குற்றச்சாட்டொன்றும் உள்ளது. இதிலுள்ள மர்மங்களை நின்று நிதானமாக சிந்திப்பதற்கு அவகாசமற்ற நிலையில் நாங்கள் அச்சத்தின் உச்சத்தில் தனிமைப்பட்டிருக்கிறோம்.
கொரோனாவின் கோரத் தாண்டவம் எங்களை அழித்தொழிக்கிறது எங்களை காப்பாற்றுங்கள் என்று சீன அரசாங்கம் கண்ணீர் விட்டு கதறியழுதபோதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுறுசுறுப்பாகவே இயங்கியது. சீனாவுக்கு மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் வழங்கி நட்பு நாடு என்பதை இலங்கை நிரூபித்துக் காட்டியது.
சீனாவின் கொரோனா வைரஸ் இலங்கைக்கு அச்சுறுத்தல் என்று இலங்கை இன்றுவரை கருதவில்லை. நிலைமை இப்படியிருக்கும்போதே இத்தாலி வழியாக எதிர்பாராதவிதமாக கொரோனோ எனும் கொடிய அரக்கன் உள்நுழைந்தான். இலங்கையில் இன்னும் யாரும் மரணிக்கவில்லை என்றாலும் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டோர் பட்டியிலில் இருக்கின்றனர். 229 பேர் வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
அரசின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டுபவர்கள் யாரும் பாடசாலைகளை மூடி, விமான நிலையம், துறைமுகம், இரவுநேர களியாட்ட விடுதிகள் என்பவற்றை திறந்து வைத்திருந்த வினோதம் பற்றி பேசவில்லை. இலங்கை நாடு திட்டமிட்ட வகையில் இராணுவ மயமாவது பற்றி வாய்திறக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் வரை கொரோனாவின் அச்சுறுத்தல் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசின் சூழ்ச்சி பற்றி யாரும் கேள்வியெழுப்பவில்லை.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்னர், பிரதமரின் சொந்தப் பெயரில் Helping Hambantota எனும் பெயரில் வங்கி கணக்கு ஒன்றை திறந்து, நன்கொடையாக கிடைத்த நிதியை வைப்புச் செய்த விடயத்தை நாட்டு மக்கள் மறந்திருக்க நியாயமில்லை. ஏப்ரல் மாத இறுதியுடன் பாராளுமன்றம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள கூட்டு நிதியை கையாளும் அதிகாரம் முடிவடைவதால், பாராளுமன்றத்தை கூட்டி நிலைமையை கூட்டாக கையாளும் எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்துள்ள அரசு, பஷில் ராஜபக்ஷவை கொரோனா அனர்த்த நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளராக நியமித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தும் ஓர் உயிர்கொல்லியாக இருந்தபோதும், இன்றைய அரசாங்கத்தின் அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர நீண்ட காலம் எடுக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற் முறையான திட்டங்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்தாலும், அதையும் பொருட்படுத்தாது அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடு தழுவிய ரீதியில் அனர்த்தங்கள் என்று வரும்போது, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சகலரையும் அரவணைத்துக்கொண்டு மக்களை பாதுகாப்பதே அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். அதைவிடுத்து, அதை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள். இது அரசுக்கு எதிரான மக்கள் புரட்சியொன்றை தூண்டவும் ஏதுவாக அமையலாம் என்பதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
– மீரா சமீம்
No comments