சலுகை அரசியலா? உரிமை அரசியலா?
நாடு பாராளுமன்ற தேர்தலை விரைவில் எதிர்கொள்ளவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது உறுப்பினர்களை அதிகரித்துக்கொள்ளவும் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கவும் வியூகங்களை வகுத்து செயற்பட ஆரம்பித்துவிட்டன. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு, பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத தற்போதைய அரசாங்கம் மக்களை கவருவதற்கு பலவிதமான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் போன்று, பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை இலக்குவைத்து இம்முறையும் இனவாத சிந்தனைகள் விதைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் 21 தாக்குதலின் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் இந்த இனவாத பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கலாமென அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை கட்சிகள் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகியுள்ளன. தாங்கள் சார்ந்த சமூகங்களின் உரிமை, பாதுகாப்புகளை இதன்மூலம் உறுதிப்படுத்த முடியுமென எதிர்பார்க்கின்றனர்.
கடந்த காலங்களில் அரசாங்கங்களை அமைப்பதில் சிறுபான்மை கட்சிகள் தங்களது பங்களிப்புகளை வழங்கி வந்தன. இதன்மூலம் சிறுபான்மை சமூகம் தைரியமாக குரல்கொடுத்து பேசமுடியுமாக இருந்தது. தற்போது சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி, பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இனவாத ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இலக்குவைக்கப்பட்டு இனவாத ரீதியாக நெருங்குவாரங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அந்தப் பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட இல்லை. சமூகம் சார்ந்த விடயங்கள் அமைச்சரவைக்கு வரும்போது, அதுதொடர்பில் பேசுவதற்கு யாருமே இல்லாம் முஸ்லிம் சமூகம் ஓரங்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சியில் 52 நாள் ஜனநாயக போராட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் தங்களை அர்பணித்து செயற்பட்டதனால், அன்று ஜனநாயகத்துக்கு விரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமரும் அமைச்சரவையும் நீக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ஜனநாயகத்துக்காக போராடிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீவிரவாதத்துக்கு துணைபோனவர்களாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடக்கம் இன்று வரை சித்தரிக்கப்படுகின்றனர்.
கண்டியில் பிறந்து, மூவின மக்களுடன் நல்லதொரு உறவைப் பேணிவருவதுடன் அவர்களின் பாராளுமன்றம் தெரிவாகிவரும், சிறுபான்மை கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இனவாதியாக சித்தரிக்கும் நிகழ்வு கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
கூலிக்கு அமர்த்தப்பட்ட முஸ்லிம் பெயர்தாங்கிகள் ஊடாக இந்த போலிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஒருவர், ரவூப் ஹக்கீமுக்கு எதிரான பிரசாரம் பொய்யானது என்று தனக்கு தெரியும். அதை ஊடக மாநாட்டில் கூறுவதற்கு ஒரு கோடி ரூபா கப்பம் கோரியிருந்தார். சம்பந்தப்பட்ட நபர், இன்னுமொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு சமூக ஊடகங்களில் சேறுபூசும் வேலையை செய்து, கப்பம் கோரிய நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டவர் அல்ல என்பதை நடுநிலையான பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஏனனில், அவரின் அரசியல் காலப்பகுதியில் ஒருபோதும் இனவாதத்துடன் செயற்பட்டதில்லை. இன, மத, மொழிகளை கடந்ததாகவே அவரின் சேவைகள் இருந்திருக்கின்றன. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த தலைவராக மூவின மக்களும் அடையாளம் கண்டிருக்கின்றனர்.
இதனாலேயே, அமரபுர நிக்காயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தினால் அதன் துணை பீடாதிபதி கொடுகொட தம்மவாச நாயக்க தேரரின் தலைமையிலான சங்க சபையால் 'சர்வ சமய சாமகாமீ தேச அபிமானி லங்கா புத்ர' எனும் விருது கண்டி புஷ்பானந்த கேட்போர் கூடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது.
பயங்கரவாத்துடன் முடிச்சுப்போடும் இந்த இனவாத பிரசாரத்தின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக் கட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் திகழ்ந்து வந்தது தெரியவரும். 52 அரசியல் சூழ்ச்சியின்போது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்தால் சட்டவிரோத அரசாங்கம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணைபோகவில்லை.
தங்களின் ஆட்சிக்கு ஆதரவளிக்காத முஸ்லிம் அரசியல் தலைவர்களை பழிவாங்கும் வாய்ப்புகளை ஏப்ரல் 21 தாக்குதல் ஏற்படுத்திவிட்டதாக என்று எண்ணத் தோன்றுகிறது. பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற்ற, சிறுபான்மை சமூகத்தின் தலைவரான ரவூப் ஹக்கீம் மீது தீவிரவாத சாயம் பூசினால் பெரும்பான்மை வாக்குகளை அதிகரிக்கலாம் என்று சிந்திக்க தலைப்பட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் இனவாதத்தினாலும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியும் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், ரவூப் ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகளை தங்களுக்கு சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.
அண்மைய பாராளுமன்ற உரையின்போது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களுடன் தன்னை இணைத்து குற்றம்சாட்டப்படுவது குறித்து, நிதானமாகவும் பக்குவமாகவும் தனது நியாயங்களை முன்வைத்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ரவூப் ஹக்கீம் உடன்படமாட்டார் என்பதை புரிந்துகொண்ட தற்போதைய ஆட்சியாளர்கள், ரவூப் ஹக்கீமை தங்களுடன் இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்று கூறிவருகின்றனர். பகரமாக புதிய அரசியல் தலைவர்களை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்குவோம் என்ற கோசத்தை கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் இன்றுவரை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை கவரும் நோக்கில் பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரும், ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுவதனால் தங்களுக்கான வெகுமானம் கிடைக்கும் எனக்கருதி சிலரும் முஸ்லிம் பிரதேசங்களில், முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் சதித்திட்டங்களை தோற்கடிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சிகளின் கீழுள்ள எவ்வித கேள்விகளும் கேட்காத, தங்களது திட்டங்கள் முஸ்லிம் சமூகத்தை பாதிப்பதாக அமைந்தாலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய தலைவர்களையே முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பேரினவாதம் துடித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால், அதிகளவான முஸ்லிம் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதோடு, அவர்கள் மீதான தீவிரவாத சாயம் பூசிய பேச்சுகளை பெரும்பான்மை மக்கள் மத்தியில் சென்றதனால்தான் பெரும்பான்மை வாக்குகளை மாத்திரம் வைத்து ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
தற்போதைய அரசாங்கத்தில் அவர்களை இணைத்துக் கொண்டால், பாராளுமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென சிந்திக்கின்றனர். எதிர்க்கட்சி கூறும் கதைகள் அரசியலுக்காக சொல்லப்பட்ட பொய் பிரசாரங்களாக கருதப்பட்டால், பெரும்பான்மை வாக்குகளில் சரிவு ஏற்படலாம். எனவே, முஸ்லிம் கட்சிகளை அரசாங்கத்தில் இணைக்காமல், அவர்களுக்கு எதிரான பிரசாரங்களை வழமைபோல முன்னெடுத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவே கணிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் இரு பிரதான தேசிய கட்சிகளிலும் முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம் சமூகத்துக்கு தனிக்கட்சி இருக்கவில்லை. அன்று முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் வந்தபோது தங்களின் தலைவர்களை எதிர்த்து பேசுவதற்கு முடியாத சூழ்நிலை காணப்பட்டது. விரும்பினால் இருக்கலாம் இல்லாவிட்டால் வெளியேறலாம் என்ற நிலையிலேயே அன்று அவர்கள் இருந்தார்கள்.
1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் வைத்து 7 முஸ்லிம்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அப்போது பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் எம்.பி.க்களால் வாய்திறந்து பேமுடியவில்லை. அப்போது தமிழ் அரசியல் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அதற்கெதிராக பாராளுமன்றத்தில் தைரியமாகப் பேசினார். அதேபோன்று இலங்கை, இந்திய ஒப்பந்தங்களின்போதும் முஸ்லிம்களை புறக்கணித்தே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறான நிலமைகளை கவனத்திற்கொண்டுதான் முஸ்லிம்களும் தனித்துவமான ஒரு இனம், அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் முகவரி பெற்றுக் கொடுப்பதற்காகவும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
இவ்வாறான தனித்துவ கட்சியின் தோற்றமானது, குறித்த சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனை ஜனநாயக வழிகளை பின்பற்றி அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தனிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதே தவிர, இனவாதம் பேசுவதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இன்று பேரினவாத கட்சிகளின் முகவர்களாக செயற்படும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தமையால்தான் இனவாதம் உருவாக்கப்பட்டிருப்பதாக போலியான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாத பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, பெரும்பான்மை கட்சிகளிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்தறியாது திகைத்துநின்றனர். இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களின் உச்சபட்ச ஆணையைப்பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தானே முன்னின்று அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை துறப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
ரவூப் ஹக்கீம் செய்த இந்த வேலையை, பெரும்பான்மை கட்சியைச் சேர்ந்த ஒருவரினால் நிச்சயமாக செய்திருக்க முடியாது. காரணம், கட்சி தலைமையை மீறி இப்படியான முடிவுகளை அவர்களால் சுயாதீனமாக எடுக்கமுடியாது. இதுதவிர, பெரும்பான்மை கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தை ஒருபோதும் பகைத்துக் கொள்ளவதற்கு விரும்பமாட்டாது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தை பின்னோக்கி நகர்த்தும் சதிகள் திட்டமிட்ட அடிப்படையில் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுஜன பெரமுன கட்சியின் முகவர்கள் சிலர், நலன்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை அதன்பால் இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரி பெற்ற சிலர், தங்களின் இருப்புக்காக சமூகத்தை மொத்த வியாபாரம் செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கின்றனர்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி அவர்கள் அரசாங்கம் அமைத்துவிடக்கூடாது. அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துவிடவே கூடாது. சிறுபான்மை கட்சிகளின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதகரித்துக்கொள்வதே எமக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவாகும். அந்த சந்தர்ப்பத்தை சந்தர்ப்பவாத அரசியலுக்காக யாரும் விட்டுக்கொடுக்க முடியாது.
சலுகை அரசியலா? உரிமை அரசியலா?
Reviewed by Mohamed Risan
on
March 08, 2020
Rating: 5
No comments