Breaking News

ஊரடங்கை மீறியவர்களுக்கு எழுத்து தேர்வு: கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்ட காவலர்கள்!

தமிழகத்தில் கன்னியாகுமர் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு காவலர்கள் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா கிருமி நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்கள் மீதும் காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு காவலர்கள் நூதன தண்டனை கொடுத்து வருகிறார்கள். தோப்பு கரணம் போடுவது, தரையில் உருளுவ என உத்தரவை மீறியவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி உலா வந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்வு வைத்தனர். இதுபற்றி காவல்துறை சார்பில், “கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் மார்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவை மீறி அந்த வழியாக இரு சக்கர வாகனம் மற்றும் சாலையில் நடந்து சென்ற வாலிபர்களை காவலர்கள் மடக்கி பிடித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் 2 விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வினாத்தாள்களிலும் தலா 10 வினாக்கள் இருந்தன.

கொரோனா கிருமியின் காதலி பெயர் என்ன? கொரோனா கிருமி முதலில் பரவிய நாடு? கொரோனா கிருமியினால் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம் எது? கொரோனா கிருமியில் இருந்து நம் நாட்டை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என வித்தியாசமான 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதை கண்டு அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ஒரு கேள்விக்கு தவறான பதில் அளித்தால் 10 தோப்பு கரணங்களை காவலர்கள் போட வைத்தனர். பின்னர், அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். காவலர்களின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. இதேபோல் சுவாமியார்மடம், களியக்காவிளை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு தோப்பு கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments