றியாழின் ஐந்தாண்டு அரசியல் பயணம்: அகவையில் ஒரு பார்வை.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.
தற்காலத்தில் தங்களை தலைமை தாங்கக்கூடிய சிறந்த தலைவர்களை சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த கால அரசியல் செயற்பாடுகளில் தனக்கான கொள்கையை வகுத்து மக்கள் மனங்கவர்ந்தவர் றியாழ்.
மீரவோடை மண்ணில் பிறந்த இவர், இன்று சர்வதேச வர்த்தக ஆலோசகராக, பிரபலமான வர்த்தக நிறுவனத்தில் பிரதம நிறைவேற்றதிகாரியாகச் செயற்பட்டு வருகின்றார். சமூகப்பணிகளில் ஆரம்ப காலங்களில் மறைமுகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசியல் வியாபாரமாக சிலரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சமூக அரசியலை வணக்கமாகச் செய்வதற்காக முன்வந்தவர்.
கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் சிறந்த தலைமைத்துவங்கள் உருவாகுவதற்கான தடைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த போது, அதனைத்தகர்த்து இளந்தலைமைகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அழைப்பையேற்று 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் களம் கண்டார்.
இதன் பின்னர் மக்களுக்கு றியாழ் தொடர்பான அறிமுகம் கிடைத்தது. தேர்தலில் தோல்வியடைந்தாலும், தங்களுக்கான நலன்களை கட்சி செய்யவில்லையெனக்கூறி கட்சி மாறும் நபர்களுக்கு மத்தியில், தான் தோல்வி கண்டாலும் தன்னை நம்பி வாக்களித்த மக்களின் நலனையும் எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்ததையும் தன்னை அறிமுகப்படுத்திய கட்சிக்கும் தலைமைக்கும் இன்று வரையும் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.
எதிரரசியல் செய்பவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் எதிரிகளாகப்பார்த்து, வாய்ப்புகள் கிடைக்கும் போது பழி தீர்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் றியாழ் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். தன்னை எதிர்த்து அரசியல் செய்பவர்களோ அவர்களை ஆதரிப்பவர்களோ தனக்கு எதிரிகளல்ல. மாறாக, எதிர்க்கருத்துக்களைக் கொண்ட எமது சகோதரர்கள் என்ற தெளிவான பார்வை அவரிடமிருக்கிறது.
கடந்த காலங்களில் அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அவரை அணுகிய போது, அவர்களுக்குரிய கௌரவம் கொடுக்கப்பட்டது. அதே போன்று தனக்கெதிராக வாக்களித்தவர்களும் தங்களுக்கான உதவியென்று அவரை நாடிய போது, பலர் தடுத்தும் பிறர் அறியாத முறையில் அவர்களுக்கு தன்னாலான உதவிகளைச்செய்தவர். நாமனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். எல்லோரும் நம்மவர்கள் என்ற எண்ணம் கொண்டவராகத் திகழ்கின்றார்.
கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளராக இவரது காலம் அபிவிருத்தியில் பொற்காலமாகும். பல கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை கல்குடா மண்ணுக்கு தனக்கான அரசியல் அதிகாரங்கள் இல்லாத நிலையில் கட்சித்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சுக்களூடாக கொண்டு வந்தார். குறிப்பாக, கல்குடா மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த தூய குடிநீர்த்திட்டம் இவரின் முன்னெடுப்பினால் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வாறான அபிவிருத்தித்திட்டங்கள் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் றியாழ் அவர்களின் தலைமையில் கல்குடாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் நிகழ்வில், அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாகவும், புதிய அரசியல் கலாசாரத்தை கல்குடாவில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும் தன்னை எதிர்த்து அரசியல் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களையும் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
றியாழின் வருகையின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாவில் புத்துயிர் பெற்றது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு ஆசனத்துடன் இருந்த கட்சி கடந்த பிரதேச சபைத்தேர்தலில் றியாழின் வழிகாட்டலில் எட்டு ஆசனங்களைப் பெற்று சாதனை படைத்தது. கோறளைப்பற்று மத்தியில் கடந்த முறையைவிட மூன்று ஆசனங்கள் வெற்றி கொள்ளப்பட்டது.
இவ்வாறு தனது ஆளுமையினூடாக பல்வேறு சவால்கள், வேலைப்பளுக்குக்கு மத்தியிலும் கட்சியையும் அதன் செயற்பாடுகளையும் ஐந்து வருடங்களாக முன்னெடுத்து வந்தார்.
தற்போது ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அன்று இந்தக்கட்சியை எதிர்த்தவர்களும் தூரமாக இருந்தவர்களும் இளையவர்களும் இந்த கட்சியில் போட்டியிட முனைப்புக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். றியாழைப் பொருத்தளவில் தான் தான் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற ஆசையில்லை. தகுதியான பலர் கல்குடாவில் இருக்கிறார்கள்.
அவர்கள் முன்வந்து இந்தப்பணியை முன்னெடுத்துச்செல்ல தான் ஒத்துழைப்பாக இருப்பேன் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர். இந்தக்கட்சியில் தேர்தல் கேட்க வேண்டும். றியாழின் இடத்தைப்பிடிக்க வேண்டுமென்பதற்காக, றியாழ் மீது வீண் பழிகளைப்போட்டு அநியாயமான முறையில் நடந்து கொள்பவர்கள் தொடர்பிலும் அலட்டிக் கொள்வதில்லை.
ஏனனில், றியாழ் கொந்துராத்து அரசியல் செய்து உழைக்க இந்த அரசியலைத்தெரிவு செய்யவில்லை. அவரின் தொழிலினூடாக அதிக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருப்பவர். ஐந்து வருட அரசியலில் கட்சிப்பணிக்காக, மக்களுக்காக தன்னுடைய பொருளாதாரத்தைச்செலவு செய்தவர். தன்னை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவரிடத்திலுண்டு.
இன்று முஸ்லிம் காங்கிரஸில் அதிகாரங்களை அனுபவித்தவர்கள் தங்களுக்கு மீண்டும் அவ்வாறான அதிகாரங்கள் கிடைக்கவில்லையென்பதற்காக கட்சியை விட்டு வெளியேறிச் சென்றவர்களுக்கு மத்தியில், ஐந்தாண்டுகளாக கட்சியினூடாக எவ்வித அரசியல் அதிகாரங்களையும், கட்சிப்பதவிகளும் வழங்கப்படாத நிலையில், உயர்பீட உறுப்பினராகச் செயற்பட்டு வந்திருக்கிறார்.
ஆனால் தனக்கு அரசியல் அதிகாரம் கட்சித்தலைமை தரவில்லை. கட்சியில் கூட உயர் பதவிகளைக்கூட கட்சி தலைமை இதுவரைக்கும் வழங்கவில்லை. தன்னைக்கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை, தன்னுடைய ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு தலைவருக்கு பாடம் புகட்டுவேன். கட்சி மாறி எதிரணியில் சேர்ந்து அரசியல் செய்வேன் என மற்றவர்கள் போல் அறிக்கைவிடவில்லை.
மாறாக தன்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எவ்வித நெருக்கடிகளும் ஏற்படுவதை ஆரம்பத்திலிருந்து றியாழ் விரும்பவில்லை. இவ்வாறான நல்லெண்ணம் கொண்ட தலைமைத்துவங்களே இன்றைய சூழ்நிலையில் நம் சமூகம் வேண்டி நிற்கின்றது.
றியாழ் தேர்தலில் போட்டியிடா விட்டாலும், தன் அறிவாலும் திறமையாலும் முஸ்லிம் சமூகத்திற்கான குறிப்பாக, கல்குடா முஸ்லிம்களுக்கான தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதோடு, அரசியலுக்காக இளைஞர்கள் தவறாக வழிநடாத்தப்படும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு, சமூகப்பொறுப்புகளைச் சுமக்கக்கூடிய ஒரு இளைஞர் சமூதாயத்தை உருவாக்கும் பணிகளை எதிர்காலத்தில் றியாழ் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
No comments