Breaking News

இருண்ட யுகம் வந்துவிடாமலிருக்க எங்களது துணிச்சலை அதிகரிக்க வேண்டும்: நினைவேந்தல் நிகழ்வில் ரவூப் ஹக்கீம்

ஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தாலும், அதே யுகம் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வலிந்து வரழைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் துணிச்சல் இருக்கவேண்டும். அரசியல் தலைமைகளுக்கு அதைவிட அதிகமான துணிச்சல் இருந்தாக வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

மறைந்த ஊடகவியலாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளர் எப்.எம். பைரூஸ், முன்னாள் பொருளாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் அவர்களுக்குரிய பாணியில், மிக இலாவகமாக இந்த இருண்ட யுகத்தை கடந்து சரித்திரத்தில் தடம்பதிக்கும் சமூகப் பணியை செய்திருக்கிறார்கள்.

தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களின் பட்டியலில் முக்கியமான இருவர் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுகின்றனர். ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் எனது குடும்ப நண்பர். எஸ்.டி. சிவநாயகத்தின் காலத்தில் எனது மூத்த சகோதரர் டொக்டர் ஹபீஸ் தினபதி பத்திரிகையில் வேலை செய்தார். அவருடன் தினபதி ஆசிரியர்பீடத்தில் வேலை செய்தவர்தான் சகோதரர் எப்.எம். பைரூஸ்.

இதனால் அடிக்கடி எமது வீட்டுக்கு அவர் வருவார். ஈற்றிலே என்னுடைய பெற்றோர்கள் வசித்த இல்லத்துக்கு எதிர்புறமாக வசித்துவந்தார். அந்திம காலம் வரைக்கும் அவர் அங்குதான் வாழ்ந்து வந்தார். இதனால் எப்.எம். பைரூஸ் எனக்கு மிக நெருக்கமான ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

நண்பர் ஐயூப் பேசும்போது அவர் நெறிமுறை பிறழாத ஊடகவியலாளர் என்று கூறினார். அவர் ஒரு நேர்மையான மனிதரும் கூட. சமூகம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எப்.எம். பைரூஸை நாம் காணமுடியும். மிகுந்த ஈடுபாட்டுடன் சமூக விவகாரங்களில் பங்கு கொண்டது மாத்திரமல்லாது, முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாக எமது சமூகத்தில் ஊடகவியலார்களை பயிற்றுவித்து, ஊக்குவித்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிய ஒருவரை நாம் இப்போது இழந்து நிற்கிறோம்.

அதுபோலத்தான் நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியும். அவரது அந்திம நாட்களில் சிலரிடம் என்னை விசாரித்தது மாத்திரமல்லாது, தற்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் என்னுடன் கதைக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், எனக்கு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில்கூட கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் அவருக்கு நான் செலுத்துகின்ற கடனாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த ஆரம்பகாலங்களில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ஃரபுடன் கவிஞர் அன்பு மொஹிதீனின் நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அன்று தொடக்கம் அவ்வப்போது சந்திக்கின்ற நேரங்களில் சினேகிதமாக பல விடயங்களை பரிமாறியிருக்கிறோம்.

அறிவிப்புத் துறையில் அவருடைய குரல் வளம் நாடுமுழுவதும் மெச்சப்பட்டு வந்தது. அத்துடன் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு என்னவென்பதை, அந்த பாடசாலையின் மாணவர்களும் நலன்விரும்பிகளும் நன்கறிவார்கள். மிக நெருக்கமாக அன்போடு பழகிய சிறந்த ஒரு அறிவிப்பாளரை நாங்கள் இழந்திருக்கிறோம் என்பதையிட்டு மனம் வருந்துகின்றேன்.

இருவரினதும் நினைவேந்தல் உரைகளில், சமூகம் சார்ந்த பொய் பிரசாரங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டன. அச்சமிகுந்த சூழலில் ஓர் ஊடகவியலாளன் எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான் என்பது இங்கு முக்கியமான விடயமாகும். 1980 தொடக்கம் 2009 வரையான யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தலின் பின்புலம் சானியமானதல்ல. தெற்கில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்திலும் இந்த அச்சுறுத்தல் நிலவியது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியான இருண்ட யுகத்தை நாங்கள் தாண்டிவந்திருக்கிறோம். எதிர்காலங்களிலும் இப்படியான சூழல் உருவாகி, அடிமை நிலைமைக்குள் தள்ளப்படாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.

டொக்டர் ஷாபி விவகாரத்தில், ஊடகங்கள் எப்படியெல்லாம் பொய்களை ஊதிப் பெருப்பிக்கின்றன என்பது மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. இவற்றை எம்மால் சகிக்க முடியாமல் இருந்தாலும், அதை இவ்வளவு மக்களுக்கு மத்தியில் விறுவிறுப்பான விடயமாக கொண்டுசெல்கின்றனர். போதாக்குறைக்கு புதிய ஆட்சியாளர்கள், அதனை மீண்டும் கிளறிக்கொண்டு அதற்கு புத்துயிரூட்டும் வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

இதில் ஊடகங்கள் முழுமையாக மௌனம் சாதித்தது என்று சொல்லிவிட முடியாது. சிலர் துணிச்சலாகவும் எழுதினார்கள். அரசியல் கேலி எழுதுகின்ற லூசன் ராஜகருணா, காமினி வீரக்கோன் போன்றோர் இருக்கின்றனர். முன்னர் மர்வான் மாக்கான் மாக்கார் எழுதினார். கத்ரி இஸ்மாயில்கூட சிறிதுகாலம் எழுதினார்.

அதேபோல மாற்று ஊடகங்கள் சில மிகத்துணிச்சலாக செற்பட்டன. யுக்திய இருந்தது. அதை நடாத்திய சுனந்த தேசப்பிரிய இப்போது வெளியில் இருந்துகொண்டு டுவிட்டர் பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறார். விக்டர் ஐவனின் ராவய பத்திரிகை இதில் முக்கியமானது. தமிழில் இவ்வாறான மாற்று ஊடகங்கள் இல்லாதபோதும், இவற்றிலாவது துணிச்சலாக சில விடயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது என்று சொல்லலாம்.

துணிச்சல் என்று வருகின்றபோது எதிலும் போராடாமல் ஒன்றும் கிடைக்காது. அது அரசியல்வாதிகளுக்கும் சாதாரண சிவில் சமூகத்த்துக்கும் பொருந்தும். இந்தியாவில் நடக்கின்ற வீதிப் போராட்டங்களை பார்க்கின்றபோது ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. அரசு அநியாயமான சட்டமூலங்களை கொண்டுவரும்போது அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று பார்க்கும்போது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.



No comments

note