மிம்பர்களில் மக்களை அச்சமூட்ட வேண்டாம்! அடிமைத்தனமாக முடிவெடுக்க முடியாது: மக்களை நியாயமாக முடிவெடுக்க விடுவதுதான் ஆன்மிகத் தலைவர்களின் பொறுப்பு உலமா சபை தலைவரின் குத்பா உரைக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் பதில்
‘‘எங்கள் முடிவுகளையெல்லாம் இனிமேல் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைத்தனமாக முடிவெடுக்க முடியாது. மக்களை நியாயபூர்வமாக முடிவெடுங்கள் என்று விட்டுவிடுவதுதான் ஆன்மிகத் தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். அதை மீறி மிம்பர்களைப் பாவித்து மக்களை அச்சமூட்டுவதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது‘‘ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29 ஆவது பேராளர் மாநாடு நேற்று முன்தினம் கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக் ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 14.02.2020 வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முஸ்லிம்கள் அரசியல் தொடர்பான தமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சிதறி வாழும் முஸ்லிம்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்து தேசியக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு மறைமுகமாக பதிலளிக்கையிலேயே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் ஆரம்ப உரையிலும் பின்னர் அவர் ஆற்றிய பாராளுமன்ற உரையிலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது போன்ற ஒரு போக்கினை அவதானிக்க முடிந்தது. அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதை இன்று வேறு சிலர் முன்னெடுக்க முயல்வது கவலையளிக்கிறது.
மன்னித்துக் கொள்ள வேண்டும்.
உலமாக்கள் குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரமுகர்கள் இருக்கின்ற இந்த மேடையில் நான் இதனைச் சொல்கிறேன்.
எங்கள் முடிவுகளையெல்லாம் இனிமேல் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பேசத் தலைப்பட்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒருபோதும் அடிமைத்தனமாக முடிவெடுக்க முடியாது.
நாங்கள் முடிவுகளை நியாயமாக எடுக்க வேண்டும். எது வந்தாலும் அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய முடிவுகளில் தலையிட முடியாது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக கூட மக்களிடம் வேண்டுகோளையே முன்வைக்கலாம். ஆனால் இரண்டும் கெட்டான் நிலையாக இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சமாக வாக்குகளைப் பிரித்துப் போடுங்கள் என சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் கையாலாகாத கதை இது.
இப்படி அச்ச உணர்வோடு இந்த விடயங்களை அணுகக் கூடாது. மக்களுடைய ஜனநாயக உரிமைகளை, எந்த தரப்பு உங்களுக்கு நியாயம் செய்யும் எனக் கருதுகிறீர்களோ, அவர்களைப் பற்றி நீங்கள் நியாயபூர்வமாக முடிவெடுங்கள் என்று விட்டுவிடுவதுதான் ஆன்மிகத் தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். அதைமீறி மிம்பர்களைப் பாவித்து மக்களிடத்திலே, ‘‘ஆபத்தான காலம் ; பயங்கரமான ஆட்சியாளர்கள், தயவு செய்து அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் போடுங்கள்‘‘ என்று சொல்வது என்னைப் பொறுத்தளவில் எந்தவிதத்திலும் நியாயமான ஒரு நிலைப்பாடாக இருக்க முடியாது. அப்படியான ஒரு தலையீட்டைச் செய்வதென்பது மக்களது ஜனநாயக உரிமையில் கைவைப்பதாகும். இப்படி அச்சப்பட்ட ஒரு நிலையில் முடிவெடுக்க முடியாது.
மக்கள் சுதந்திரமாக முடிவெடுக்கட்டும்.
இந்த விடயத்தில் ஒற்றுமைப்படுவதாக இருந்தால் அனைவரும் ஒரே அணியில் ஒற்றுமைப்படுவோம் என்பதை நான் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளேன். ஆனால் அங்கு சிலர் ஒற்றுமைப்படுங்கள், இங்கு சிலர் ஒற்றுமைப்படுங்கள் என்று கோருவதை ஏற்க முடியாது. இதைவிடவும் கையாலாகாத அரசியலை நாங்கள் செய்ய முடியாது. பயந்து பீதியில் இந்த விடயங்களை அணுக முடியாது.
எனவேதான் சமூகம் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும். அச்சத்திலே பயத்திலே முடிவெடுப்பதென்பது இந்த சமூகத்திற்கு ஆகாத விடயம். ஒரு சிறிய கூட்டமாக இருந்தாலும் அந்தக் கூட்டத்தை இறைவன் நாடினால் வெற்றி பெற வைப்பான் என்று பத்ரு யுத்தத்தை உதாரணம் காட்டி நாங்கள் சொல்கிறோம். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம். எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
தோல்விதான் கிடைத்தாலும் அதை வெற்றியின் படிகளாகக் கொண்டு அடுத்த கட்ட அரசியலை தைரியமாக சந்திக்கின்ற ஒரு சமூகமாக நாம் மாற வேண்டும். அதற்கு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மு.கா தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.
நன்றி -Vidivelli -
No comments