Breaking News

சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்றால் என்ன? - எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)

காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு  சுதந்திரம் கிடைத்த தினம்  சுதந்திர தினமாயின் அவர்களது ஆட்சியில் அப்படியென்ன அடிமைத்தனத்தை அனுபவித்தோம்?

ஆம் அவர்களது சட்டங்களையும் ஆட்சி முறையையும் சில போது தமது மதத்தையும் அவர்கள் எம்மீது திணித்தார்கள். Divid and Rule எனப்படும் பிரித்தாளும் கொள்கையை அமுலாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடித்தார்கள். அதுமட்டுமன்றி எமது வளங்களை சுரண்டி தத்தமது நாடுகளைப் போஷித்தார்கள். இங்கு அவர்கள் அபிவிருத்தி முயற்சிகளைச் செய்திருந்தாலும் அவற்றை எமது நலன்களுக்காக அவர்கள் செய்தார்கள் என்பதை விட தமது நலன்களையே பார்த்தார்கள். அவர்கள் சுதேச மக்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தங்களில் கொல்லப்பட்டிருந்தால் அவர்களது மண்ணறைகளுக்குள் இருந்து தேயிலை இரப்பர் தெங்கு போன்ற சத்தங்களே வரும் என்று கூறலாம்.இந்தவகையில் அவர்களிடமிருந்து எமக்கு விடுதலை கிடைத்தமை சாதாரண விடயமல்ல.

சுதந்திரத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட தேசியக் கொடியை வடிவமைத்த எம்மவர்கள் அந்தக் கொடியின் ஒவ்வொரு நிறமும் ஒவ்வோர் இனத்தை, மதத்தை பின்பற்றுபவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என ஏன் தீர்மானித்தார்கள் ?

தேசியக் கொடி ஒற்றுமையின் சின்னமாகும். நாம் தேசிய கொடியை பறக்க விடும் போது ஐக்கியமாக வாழ வேண்டும் என்ற ஞாபகம் வர வேண்டும் என்பதற்குத் தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். தேசிய கீதத்தில் ஒரே தாயின் பிள்ளைகள் என்ற வாசகம் இருக்கிறது இருப்பதற்கான நோக்கமும் ஐக்கிய சிந்தனை தான்.

ஆனால், இன்றைய நிலை என்ன?
இனவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம், துவேஷம், ஒதுக்கல், ஓரவஞ்சனை,வெறுப்பும் பேச்சு, இழுபறி. இவை தான் கோலோச்சுகின்றன. ஐரோப்பியர் காலத்து அட்டூழியங்களை விட இவை சற்று அதிகமோ தெரியாது.

எனவே சுதந்திர தினத்தை கொண்டாடும் தகுதி எமக்கு இருக்கிறதா? தலைவலிக்கு தலையணை மாற்றப்பட்டுள்ளதா?

சுதந்திரத்துக்குப் பின்னர் அநியாயமாக  சிந்தப்பட்ட இரத்தங்கள் எத்தனை? 1958 மற்றும் 1983 கறுப்பு ஜூலை கலவரத்திலும் புலிகளது கிளர்ச்சி காலத்திலும் ஜே.வீ.பீ.கிளர்ச்சிகள் இரண்டின் போதும் காவு கொள்ளப்பட்ட உயிர்களும் தீக்கிரையான  சொத்துக்களும் எம்மாத்திரம்? முஸ்லிம்களுகெதிராக தர்கா நகர், திகனை, வடமேல் மாகாணம் போன்ற இன்னோரன்ன பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட கலவரங்களில் எத்தனை கோடிக் கணக்கான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டன? ஈஸ்டர் தாக்குதலால் பறிக்கப்பட்ட அப்பாவிகளது உயிர்கள் எத்தனை?

எனவே, சுதந்திரம் என்பதன் பொருள் யாது? 1948 ல்  ஐரோப்பியர் வெளியேறினார்கள் தான். ஆனால், எம்மவர் உள்ளங்கள் கீழ்த்தரமான உணர்வுகளில் இருந்தும் குறுகிய மனப்பாங்கிலிருந்தும் வெளியேறவில்லை.

உண்மையான சுதந்திரவான் யாரென்றால் நினைத்ததையெல்லாம் நினைத்த நேரத்தில் செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருப்பவனோ கடிவாளமில்லாமல் இச்சை தீர்ப்பவனோ அல்லன். அப்படியான சுதந்திரம் அவனுக்கும் எதிர்காலத்திற்கும் பாரிய ஆபத்துக்களை கொண்டுவரும். மாறாக, நல்ல முறையில் உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனும் பரந்த மனப்பாங்கும் கொண்டவனே விடுதலை வீரன், சுதந்திரவான், வீரன். உண்மையில் மனதின் அடிமை ஷைத்தானின் அடிமை தான்.

பலர் தம்மை சுதந்திரமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமது பழக்க வழக்கங்களின் அல்லது மனோ இச்சையின் அடிமைகளாக இருப்பர். அவர்களை இலகுவில் விலை கொடுத்து வாங்க முடியும். அவர்கள் பணத்தை அதிகாரத்தை சிற்றின்பத்தை வணங்குவார்கள்.

"மல்யுத்தத்தில்  எதிரியை வீழ்த்துபவன் வீரனல்ல மாறாக கோபத்தின் போது தனது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரனாவான்" என்பது நபி மொழியாகும்.


No comments

note