Breaking News

சஜித் தலைமையிலான கூட்டணி உறுதி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாசவின் வாசஸ்தலத்தில் இன்று மதியம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் இடம்பெற்றது. அதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வார ஆரம்பத்தில், சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியிருந்தது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்தவர்களான எங்களின் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகரித்தமை மகிழ்ச்சிக்குரியது. அதனடிப்படையில், இன்று மதியம், சஜித் பிரேமதாசவின் இல்லத்தில் நானும் சம்பிக்க ரணவக்கவும் ரவூப் ஹக்கீமும் கூடி ஆராய்ந்தோம்.

சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய அங்கிகாரத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டாரவை, கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை முன்வைத்திருக்கிறோம். இக்கூட்டணிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்கவுள்ளதோடு, கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் அங்கம் வகிப்பர்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேட்பாளர் நியமன சபையின் தலைவராக சஜித் பிரேமதாச இருப்பதோடு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர் நியமன சபையின் அங்கத்தவர்களாக இருப்பார்கள். வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான இறுதி முடிவை இந்தச் சபையே தீர்மானிக்கும்.

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் பெயர், சின்னம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இன்னமும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. பெயர், சின்னம் தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படுவதோடு கூட்டணித் தலைவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படும்.“ என்றுள்ளார்.

No comments

note