Breaking News

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளை சூறையாடி எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்கு சூழ்ச்சிகள் ஆரம்பம் - சட்டத்தரணி ரிஷ்வி ஜவஹர்ஷா.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெறுமானமற்ற வாக்குகளாக மாற்றுவதன் மூலம் சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டபடி சதிகள் மேற்கொள்ளப்படுகிறது என  குருநாகல் மாவட்ட ஐ.தே.மு பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஷ்வி ஜவஹர்ஷா அவர்கள் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தல் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், நாம் எதிர் நோக்கியுள்ள இத்தேர்தலானது எமது சமூகத்தை பொறுத்தமட்டில் தீர்க்கமான ஒரு தேர்தலாகும்.

பாராளுமன்ற தேர்தல் அண்மித்துள்ள நிலையில் குருநாகல் மாவட்டத்தில் புதிது புதிதாக பல அமைப்புக்கள் உருவாகியுள்ளதை நாம் காண்கிறோம். அதே போன்று பல அமைப்புக்கள் தலைநகரில் இருந்து குருநாகல் மாவட்டத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையும் நாம் காண்கிறோம்.  

தம்மை புத்திஜீவிகள் என வெளிக்காட்டிக் கொண்டு தலைநகரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புக்களினூடாகவும் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்புக்களினூடாகவும் உணவுப் பொதிகள், கொப்பி புத்தகங்கள் வழங்கல் மற்றும் உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு பணம் கொடுக்கின்ற அரசியல் கலாச்சாரம் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இக்கலாச்சாரம் இன்னும் அதிகரித்து அரங்கேற்றப்படும்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது சமூகம் ஏமாற்றம் அடையாமல் எமது சமூகத்தை முதன்மைப்படுத்தி நிதானமாக சிந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக எமது மக்களுக்கு தெளிவூட்டுவது எமது தலையாய கடமை ஆகும்.  

எமது மாவட்டத்தை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் கிராமம் கிராமமாக வருகின்ற மொட்டு கட்சியின் ஏஜன்டுகள் எம்மை இனவாதிகளாக சித்தரித்து கணிசமான அளவு முஸ்லிம் வாக்குகளை மொட்டுக் கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு எமது வாக்குகளை சூறையாடி தானும் வெற்றி பெறாமல் எமது மாவட்டத்திற்கே உரித்தான எமது பிரதிநிதித்துவத்தை அல்லது எமது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு குருநாகல் மாவட்ட முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக ஆக்கிவிட்டு மீண்டும் கொழும்புக்கு சென்று விடுவார்கள். 

மொட்டு கட்சியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் அவர்களினால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என தெரிந்தும் எமது சமூகத்தை  அடமானம் வைத்து இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு குருநாகல் மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆளும் கட்சி பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு சிறுபான்மையினர் வாக்குகள் அவர்களுக்கு அவசியமாகும். ஆகவே தமிழ் முஸ்லிம் வாக்குகளை ஆளும் கட்சிக்கு பெற்றுக் கொள்ள இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்களை ஆங்காங்கே களமிறக்குவதை காணலாம்.

இவர்களுடைய பிரதான நோக்கம் ஆளும் கட்சிக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ளவோ அல்லது ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதோ இவர்களது நோக்கமல்ல. மாறாக எமது வாக்குகளை சூறையாடி எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதே இவர்களது நோக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் முதல் அமர்வின் போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சிம்மாசன உரையில் அவர் உரையாற்றும் போது "நாம் இந்த விகிதாசார பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்ற வேண்டும். அதற்காக எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத் தாருங்கள்". என கேட்கிறார். ஏன் இந்த விகிதாசார தேர்தல் முறையை மாற்ற ஆளும் கட்சி முயற்சிக்கிறது என முஸ்லிம் சமூகம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

1989 ஆம் ஆண்டில்  விகிதாசார முறையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்ததை விட இரு மடங்காக அதிகரித்தது. விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதன் ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் இருந்து குறைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் கட்சி கோருகின்றது.

அதே போன்று அதுரலிய ரத்ன தேரர் 20ஆவது திருத்தத்தை தனி நபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றார். அதில் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட 21 ஆம் மற்றும் 22 ஆம் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 5% இருந்து 12.5% ஆக அதிகரிக்க தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை நாம் பார்க்கின்ற போது பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அமையப் பெறுவதற்கான முன் ஆயத்தங்களாகவே நாம் காண்கிறோம்.

ஆகவே இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் முஸ்லிம் சமூகம் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள வேண்டும்.

குருநாகல் மாவட்டத்தை பொறுத்தமட்டில்  மொட்டு கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெற போவதில்லை என தெரிந்தும் மொட்டு கட்சிக்கு முஸ்லிம் வாக்குகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டு மீண்டும் கொழும்புக்கு செல்ல நேரிடுவதோடு கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏஜென்டுக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அரசியல் ஏமாற்று வித்தைகளுக்கும் பசப்பு வார்த்தைகளும் ஒரு போதும் எமது சமூகம் ஏமாற்றம் அடையாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஷ்வி ஜவஹர்ஷா அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.


No comments

note