Breaking News

நாட்டுப்பற்று அல்லது தேசபக்தி - அஷ்ஷைக் பளீல் (நளீமி)

நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை மதிப்பது அங்குள்ள சூழலை பாதுகாப்பது அந்த நாட்டுக்கு விசுவாசமாக நடப்பது போன்றவற்றையும் அது குறிக்கும்.

தேச எல்லைக்குள் வாழுகின்ற மனிதர்கள், மிருகங்கள், அங்கிருக்கும் தாவரங்கள், பறவைகள் போன்ற அனைவரும், அனைத்தும் எனது இறைவனின் படைப்புகள் தான். எனது தேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அனைவரையும்  நான் நேசிக்க வேண்டும், உரிமைகளைக் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது எனது கடமை என்ற உணர்வின் அடுத்த பெயர்தான் நாட்டுப்பற்று என்பதாகும்.

எனவே தேசப்பற்றுள்ள ஒருவர்,

1.தனது தேசத்தில் பிறந்த எவருடனும் பகைமை பாராட்டமாட்டார்.

2. அங்குள்ள சூழலை நேசித்து தேச நிர்மாணத்தில் பங்கெடுப்பார்.

அந்தவகையில் பின்வருவோர் தேசாபிமானிகள் அல்லர்:-

இனவாதி அல்லது துவேஷி,

#சட்டங்களில் பாரபட்சம் காட்டுபவர்,

#தனது குப்பை கூளங்களை ஏரிகளிலும் பாதையோரங்களிலும் வீசுபவர்,

#பொதுமக்கள் கூடும் இடங்களில் புகைப்பவர்,

#பொருத்தமற்ற இடங்களில் வாகனத்தை நிறுத்துபவர்,

#போக்குவரத்து விதிகளை மீறுபவர்,

#நாட்டுக்குள் கொண்டு வரவும் கொண்டு போகவும் கூடாது என்ற அரசால் பிரகடனம் செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்,

#கள்ள நோட்டு அச்சடிப்பவர்,

#வியாபாரத்தில் மோசடி செய்பவர்,

இவர்கள் எவருமே தேசாபிமானிகள் இல்லை. இவை ராஜ துரோகங்கள் மட்டுமல்ல இஸ்லாமிய விரோதச் செயல்களுமாகும்.

இஸ்லாம் பொதுச் சொத்துக்களை நாசம் செய்வதையும் சூழலை மாசுபடுத்துவதையும் பொது மக்களுக்கு தொந்தரவு தரும் காரியங்களில் ஈடுபடுவதையும் ஈமானுக்கு விரோதமான- அல்லாஹ்வின் கோபத்தை கொண்டு தரும் காரியங்களாகவே கணிக்கிறது.

"சுத்தம் ஈமானின் பாதி" என்று சொன்ன நபியவர்கள் நிழல் தரும் மரங்களுக்குக் கீழாலும் பாதையோரங்களிலும் நீர்நிலைகளிலும் மலசலம் கழிப்பது அல்லாஹ்வின் சாபத்தை வருசிக்கும் மூன்று நடவடிக்கைகளாகும் என்று கூறினார்கள்.

மாறாக, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பயிர் செய்தல், மரம் நடுதல் போன்ற காரியங்கள் (ஸதகா)தர்மம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நாட்டுப் பிரஜைகள் எவராவது இலஞ்சம் எடுத்தால், வியாபாரத்தில் கலப்படம் செய்தால், நாட்டு மக்களின் புத்தியை பேதலிக்கும் போதை வஸ்துக்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டால், பொதுமக்களது பொறுப்புக்களை ஏற்று எடுக்கும் சம்பளத்துக்கு வேலை செய்யாவிட்டால், பொதுச் சொத்துக்களை உரிமையின்றி அனுபவித்துக் கொண்டிருந்தால், புகை கக்கும் வாகனங்கள் பாவித்துக் கொண்டிருந்தால், துவேஷத்தையும் வெறுப்பு பேச்சுக்களையும் கக்கும் ஊடகங்களை நடத்திக் கொண்டிருந்தால்

அவர்கள் நாட்டுப்பற்றில்லாதவர்கள், இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும், இந்த தேசத்து மக்களின் துரோகிகளான அவர்கள் தேசிய கீதத்தை பக்தியோடும் இசைத்தாலும் அதற்காக மரியாதையாக ஆடையணிந்து நிமிர்ந்து நின்றாலும் அவர்கள் தேச பக்தி உள்ளவர்கள் அல்லர்.

ஆனால், இஸ்லாம் கூறும் தேசபக்தி என்பது குருட்டுத்தனமாகவோ வெறித்தனம் கொண்டதாகவோ இருக்கமாட்டாது.

 وعن عبادة بن كثير الشامي ، من أهل فلسطين ، في امرأة منهم يقال لها فسيلة ، أنها قالت : سمعت أبي يقول : سألت رسول الله - صلى الله عليه وسلم - قلت : يا رسول الله أمن العصبية أن يحب الرجل قومه ؟ قال : " لا ، ولكن من العصبية أن ينصر الرجل قومه على الظلم " . رواه أحمد ، وابن ماجه .

ஒருதடவை ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து 'ஒருவர் தனது இனத்தை விரும்புவது இனவாதமாகுமா?' என்று வினவினார். அதற்கு நபியவர்கள் "அப்படியல்ல ஒருவர் தனது சமூகம் அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவி செய்வதே இனவாதமாகும்"என்று தெரிவித்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத், சுனன் இப்னு மாஜா)

எனவே, சுதந்திர தினத்தை கொண்டாடுபவர்கள், தேசியகீதம் இசைப்பவர்கள், அந்தக் கொடிக்கு மரியாதை செய்பவர்கள் இந்த நாட்டின் சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்தவேண்டும்.அவர்களிடம்  அனைவர் பற்றிய நல்லெண்ணம் வேண்டும். தப்புத் தவறுகளை பெரும் மனதோடு மன்னித்து மறந்து வாழ வேண்டும். இந்த நாட்டின் சூழலை மனப்பூர்வமாக நேசிப்பதுடம் இந்த நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்காது நடக்கவேண்டும். நம்பிக்கை, நாணயம், அர்ப்பணம், பரந்த மனப்பான்மை போன்ற உன்னத பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

#நாடு எனக்கு எதனைத் தந்தது என்பது பற்றி சிந்திக்க முன்னர், நாட்டுக்கு நான் என்ன செய்திருக்கிறேன் என ஒவ்வொரும் சிந்திப்போம்.அப்போது மட்டுமே இன்ஷா அல்லாஹ் நாடு முன்னேற ஆரம்பிக்கும்.

சமத்துவம் + தேசநிர்மாணம் + சட்டங்களுக்கு கட்டுப்படுவது = தேசபக்தி


No comments

note