100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர் சிலை வைப்பு
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில்
அமைந்திருக்கும் ஜும்ஆ மஸ்ஜித் கட்டிடத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இப்பள்ளிவாசலானது சுமார் 100 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் தனவந்தர் ஒருவரால் வக்ப் செய்யப்பட்ட காணியிலேயே பள்ளிவாசல் இயங்கி வந்துள்ளது. றாகமை பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக மக்கள் வருவதை தடை செய்துள்ளனர். மற்றும் பள்ளிவாசலை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை எடுப்பதற்கோ கூட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை.
றாகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டதுடன், ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகிலிருக்கும் பழைய வீட்டிலேயே தொழுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் கட்டிடம், சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த துர்ப்பாக்கியமான சம்பவம் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பில் நாம் பள்ளிவாசல் தலைவரை தொடர்பு கொண்டபோது,
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பிலும், பள்ளி வாசல் தொழுகைக்காக திரும்பவும் கிடைக்க வேண்டி சென்ற ஆட்சியில் இருந்து அரசியல் வாதிகள் மூலம் தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ரியாஸ் சாலி அவர்கள் மூலம் பள்ளிவாசல் தொடர்பான உரிமை ஆவன பிரதிகள் கொண்டு பிரதமருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், நாளை நீதி அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments