Breaking News

ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மரணச் செய்தி பேரிடியாய் காதில் விழுந்தது - அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத்

Jiffry Sir......
இவ்வாறு பல்லாயிரம் மாணவர்கள் அன்போடும் அபிமானத்தோடும் அழைக்கும் நல்லாசிரியர்.
நமது வானொலிக்கு கிடைத்த, பண்பில் உயர்ந்த-அறிவார்ந்த அறிவிப்பாளர், எனது பாசத்துக்குறிய அன்புத்தம்பி-ஏ.ஆர்.எம்.ஜிfப்ரி, நள்ளிரவுக்கு சற்று முன்னர் எம்மைப் பிரிந்த செய்தி, தம்பி கையூம் மூலமாக பேரிடியாய் காதில் விழுந்தது...
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

நேற்றுத்தான் பகல் 12 மணிக்கு வைத்தியசாலையில் நேரில் சென்று பார்த்து, நம்பிக்கையோடு இருங்கள், வல்ல இறை, உங்களைப் போன்றவர்களைக் கைவிடமாட்டான். நீங்கள் மீண்டு வருவீர்கள் என, உறுதியாக நம்பி, நான் துஆச் செய்துவருகிறேன் என்று கூறி, அவரது நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.

இத்தனை விரைவில் என் நம்பிக்கை தகர்ந்துபோகும் என நான் எதிர்பார்க்கவில்லை. இறைவனின் எண்ணத்தை யார் அறிவார்.

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு, கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் நடந்த விழாவொன்றுக்கு சிறப்பதிதிகளாக, நானும், மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரfப் அவர்களும் ஒன்றாக் கலந்து கொண்ட வேளையில்தான், துடிப்புமிகுந்த மாணவராக அவரை முதன் முதலில் சந்தித்தேன்.

பின்னாளில் கல்வியில் தேர்ந்து நல்லாசிரியர் பணியில் இணந்து, அதேவேளை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் தெரிவான பின்னர், அறிவிப்புத்துறையில் மூத்தவன் என்ற வகையில் அவருக்கு பயிற்ச்சி அளிக்கவும் ஆலோசனைகள் கூறவும் கூடிய பாக்கியத்தை வல்ல இறை எனக்குத்தந்தான்.

மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் ஒரு கண்ணியமிகு அடையாளத்தைத் தக்கவைத்து சிறந்த அறிவிப்பாளராகப் புகழ்பெற்றார்.

அதே வேளை கல்வித்துறையிலும், இலங்கையின் பல பாகங்களில் மாணவர்களுக்கான பயிற்சிப் பாசறைகளை நடத்தி ஒரு சிறந்த ஆசிரியராகவும் புகழ்பெற்றார்.

வானொலியில் நிரந்தரப் பதவி பெற, அவருக்கு அத்தனை தகுதிகள் இருந்தும், வானொலியில் பணியாற்றுவோர் காற்றோடு காற்றாக மறைந்தும் மறக்கப்பட்டும் போய்விடுவார்கள்.

இங்கு உங்கள் எதிர்காலம் பாழாகிவிடும், பகுதிநேர அறிவிப்பாளராக இருந்து கொண்டே வானொலிப்பணியைச் செய்யலாம், ஆனால் ஒரு பாடசாலை அதிபராக, நாடேபோற்றும் கல்விமானாக மதிக்கப்படும் எதிர்காலம் உங்கள் முன்னே காத்திருக்கிறது என நான் சொன்ன ஆலோசனையை ஏற்று, கல்வித்துறையில் சிகரங்களைத் தொட்டார்.

அதேவேளை வானொலியில் நிரந்தரப் பதவியில் இருந்த அறிவிப்பாளர்களை விடவும் அதிகமான புகழை, நேயர் மத்தியில் அவர் பெற்றார்.

இந்தத் துயரச் செய்தி கேட்டு, அவரிடம் பயின்ற ஆயிரம் பல்லாயிரம் மாணவர்கள் ஒரு கல்வித்தந்தையை இழந்த துயரில் மூழ்கியிருப்பார்கள்.

வானொலித்துறையோ- விழுமியங்கள் பேணி, ஒலிபரப்புத்துறையில் பெரும் தொண்டாற்றிய ஒரு சிறந்த ஒலிபரப்பாளரை இழந்து தவிக்கிறது.

நானோ- என்னை ஒரு மூத்த சகோதரனாக மதித்து நேசித்த ஒரு அன்புத் தம்பியை இழந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.

என்னிலும் 11 வயது இளமையான அன்புத்தம்பி, என்னை முந்திச் சென்று விட்டார். நாமும் இங்கு நிரந்தரமாய் இருக்கப்போவதில்லயே..நாளை மறுமை வெளியில், இன்ஷா அல்லாஹ் அவரை சந்திப்போம்.

அதுவரை மண்ணறையின் வேதனைகளில் இருந்து அவரது ஆன்மாவைக் காத்தருளவும், மறுமையில் அவருக்கு சுவனத்தின் கதவுகளைத் திறந்து விடவும், அந்த ஏக இறையிடம் இருகரம் ஏந்தி,
துஆச் செய்வோம். ஆமீன் ஆமீன் - யாரப்புல் ஆலமீன்..!

@
BH.Abdul Hamee



No comments

note