Breaking News

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தனது காந்தக் குரலால் முஸ்லிம் காங்கிஸினை எழுச்சி பெறச்செய்தவர்! - அனுதாபச் செய்தியில் ஹரீஸ் எம்.பி

மாமனிதர் அஷ்ரஃப்போடு இணைந்து அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தனது காந்தக் குரலால் முஸ்லிம் காங்கிஸினை எழுச்சி பெறச்செய்தவர். அவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்னாரை சுகம் விசாரிக்கச் நேற்று சென்ற வேளை மனம் கனத்துப்போனது. அவரின் திடீர் மறைவு எல்லோரையும் கவலையடைய வைத்துள்ளது.

மாமனிதர் அஷ்ரஃப்போடு முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால வளர்ச்சியில் தனது காந்தக் குரலின் மூலம் கட்சியின் மேடைகளை அழங்கரித்து கட்சியினை எழுச்சி பெறச் செய்தவர்.

தனது அறிவிப்புத் திறமை மற்றும் குரல் வளம் என்பவற்றின் மூலம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்ததுடன் அறிவிப்புத்துறைக்குள் வரவிருப்போருக்கு ஒரு உதாரண புரிஷராகவும் காணப்பட்டார்.

நாட்டின் பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றி எம்சமூகத்தின் கல்வியில் தனக்கான தனித்தன்மையை தடம் பதித்த ஒரு கல்விமானாகவும் திகழ்ந்தவர்.

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி எதிர் முகாவில் அரசியல் செய்தாலும் என்னோடு அவர் கணவான் அரசியல் செய்தவர். என்னோடு தனிப்பட்ட முறையில் நல்லுறவை பேணியவர். அன்னாரின் மறைவு என்னை தனிப்பட்ட ரீதியில் பாதித்துள்ளது.

அன்னாரின் மறைவால் துயருட்டிருக்கும் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தினர் உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப் பிரிவு-

No comments

note